உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப்போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார். துயரம் என்னவெனில், அவர்கள் தமக்கென இருக்கும் வாழ்வை எத்தனம் செய்யவே முடியவில்லை. மாறுபட்ட இரு கருத்தியல்களுக்குள் சிக்கிக்கொள்கிற அவலத்தோடு பீமுடுக்குக்குத் தாவி ஓடுகிறார்கள்; குத்துண்டு மாள்கிறார்கள். பின்னர் அபூர்வக் குதிரை மீதேறி நாலாம் ஆகாசம், சொர்க்கப் பூங்காவனம், பூங்காவனத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் ஹுருல்ஈன் பெண்கள் என வானுலக சஞ்சாரமும் கொள்கிறார்கள். இப்படியான வாழ்வின் அலைவுறும் பிம்பமே ‘அஞ்சுவண்ணம் தெரு’. தோப்பில் முஹம்மது மீரான்: தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.