இரவுச் சுடர் 1974இல் ‘இரவுச் சுடர்’ வெளிவந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது தூய்மையைக் குலைக்கும் ஒரு தாக்குதலாக நோக்கப்படுவதுபோல் தோன்றியது. 1975இல் ‘மீண்டும் தூயவை தொடர’ என்ற தலைப்பில் சதங்கை பத்திரிகையில் சூடாமணி எழுதிய கதையில் உடலுறவு பூவைக் கசக்குவதுபோல் ஓர் அழிக்கும் செயல் என்ற தொனி இருந்தது. 1972இல் சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையில் வெளிப்பட்ட உடலுறவு என்பது உடலின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டும் செயல் என்ற நோக்கிலிருந்து இரவுச் சுடர் நாவலும் அடுத்து வந்த கதையும் மாறுபட்டன. மூன்றையும் சேர்த்துப் பார்த்தபோது இரு வேறு அதீதங்களாக அவை எனக்குப் பட்டன அப்போது. அவளை அறியாமல் அவள் மனத்தில் புதைந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளுடன் சமரிடும் பெண்ணாக, இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஒளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச் சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில் பார்த்தபோது அதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஒன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும் மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்குத் தெரிந்தது. மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச் சுடர். ஏ.கே. ராமானுஜத்துடன் ஒரு முறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்தது எது என்று கேட்டபோது அவர் இரவுச் சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடையில் இரவில் ஒளிரும் சுடராக யாமிணியைப் படைத்திருக்கிறார் சூடாமணி. மற்றவர்கள் பாதை மறந்துவிடும் கருமையான இரவும் யாமினிதான். அதில் ஒளியைச் சிந்தும் சுடரும் யாமினிதான். இருட்டும் வெளிச்சமும் இரண்டறக் கலந்த படைப்பு அவள். ஆர். சூடாமணி: ஆர். சூடாமணி (1931 – 2010) ஜனவரி 10, 1931இல் கலைஞரான கனகவல்லிக்கும் அரசாங்கத்தில் உயர் அதிகாரியான டி.என்.எஸ். ராகவனுக்கும் மூன்றாவது பெண்ணாகப் பிறந்தார் சூடாமணி. வீட்டிலிருந்தபடி கல்வி கற்றார். ஓவியம் மற்றும் இசை பயின்றார். ‘மகரம்’ என்ற பெயரில் எழுதிய பிரபல எழுத்தாளரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். 1954ஆம் ஆண்டு ‘பரிசு விமர்சனம்’ என்ற இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. 1957இல் ஆர்.சூடாமணி என்ற பெயரில் எழுதத் துவங்கியவர் எழுத்துலகில் தனக்கென்று ஓர் இடத்தை எந்த ஆரவாரமுமின்றி ஸ்தாபித்துக்கொண்டார். அதிக ஆர்ப்பாட்டமில்லாத, தெள்ளிய, கவித்துவமான நடையில் மனித உறவுகளின் சிக்கல்கள், அதன் ஆழங்கள், அவற்றில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு கட்டங்களில் சேர்ந்தும் விலகியும், நேசித்தும் வெறுத்தும், சிரித்தும் அழுதும் வாழும் வாழ்க்கை பற்றி எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர் சூடாமணி. 200க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிறுகதைகளை சூடாமணி ராகவன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது (1959), தமிழ்நாடு அரசு விருது (1966), லில்லி தேவசிகாமணி விருது (1992), கலைஞர் மு. கருணாநிதி விருது (2009) என்று பல விருதுகளைப்பெற்றவர். 2010ஆம் ஆண்டு இவர் மறைந்தபோது தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழை மக்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கு நன்கொடையாக அளித்திருந்தார்.