யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும்போது ‘ஊர்சுற்றி’யில் அது சகல சாத்தியங்களுடனும் முன்நகர்கிறது. ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை, இடங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது. மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது. யுவன் சந்திரசேகர்: யுவன் சந்திரசேகர் (பி. 1961) பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில். வசிப்பது சென்னையில். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். மின்னஞ்சல் : writeryuvan@gmail.com