தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு, சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல். துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல், வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம் முதல், நவீன உளவியல் மருத்துவம் வரை; சுற்றுலா வணிகம் முதல், பழங்குடி ஐதீகங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமாக விவரிக்கிறது. உண்மையான தீவுக்கு நிகராக நிறுவப்படும் கற்பனைத் தீவு, வளர்ச்சியின் பெயரால் மானுட குலம் இழந்து வந்திருக்கும் கபடமின்மையைக் கவனப்படுத்துகிறது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணமாக வைத்துச் சூழலியல் தொடர்பாக மனிதகுலம் வரித்துக்கொண்டிருக்கும் கரிசனமின்மையைப் பேசுகிறது. அந்த அளவில் உலகளாவிய படைப்பு என்னும் தகுதியை எட்டியிருக்கிறது. வு மிங் – யி: வு மிங் – யி (பி. 1971) தைவானில் பிறந்தவர். எழுத்தாளர், ஓவியர், பேராசிரியர், சூழலியல் செயல்பாட்டாளர். 2000ஆம் ஆண்டிலிருந்து, நேஷனல் டாங் ஹ்வா பல்கலைக்கழகத்தில் இலக்கியமும் படைப்பெழுத்தும் கற்பிக்கிறார்; தற்போது சீனமொழித் துறைப் பேராசிரியர். இயற்கையியல் பற்றிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய நூல்களில், முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் இது. இன்டெர்நேஷனல் ‘மான் புக்கர்’ பரிசு நெடும்பட்டியலில் இடம்பெற்றது.