விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையா கிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள். பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங் கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல். தி. ஜானகிராமன்: தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.