காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி – 75’ கவிதை, இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலின் நூலாக்கம் இது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் – 1930களில் – கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையைப் பின்புலமாகக் கொண்டு, முஸ்லிம் மக்களின் பண்பாடு, வாழ்முறை, சமய நம்பிக்கைகள், பள்ளிவாசல் கொடியேற்றுவிழா, திருமணச் சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்துடன் ‘நட்டுமை’ யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. வயல்களில் தேக்கிவைத்திருக்கும் நீரைத் திருட்டுத்தனமாக வரப்புகளில் பிளவுகள் ஏற்படுத்தி வடித்து விடுவதைக் குறிக்கும் ‘நட்டுமை’ என்னும் சொல், இலங்கையில் விவசாயக் கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்கும் உவமையாகப் பாவிக்கப்படுகிறது. இந்தத் தலைப்பே குறுநாவலின் மையச் சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது.