கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவமும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம். நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார். வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லா.ச. ராமாமிருதம்: லா.ச. ராமாமிருதம் (1916 – 2007) தமிழின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவரான லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தார். பதினேழாம் வயதில் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் நுழைந்தார். பின்னர் தமிழில் எழுதத் தொடங்கினார். மணிக்கொடி உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் – ‘இதழ்கள்’, ‘பச்சைக் கனவு’, ‘ஜனனி’, ‘த்வனி’, ‘உத்தராயணம்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள் – ‘புத்ர’, ‘அபிதா’ முதலான ஆறு நாவல்களையும் எழுதினார். வாழ்க்கை அனுபவக் கட்டுரைகள் இரு நூல்களாக வெளிவந்துள்ளன. தன் வரலாற்று நூலான ‘சிந்தா நதி’ சாகித்திய அக்காதெமி (1989) விருது பெற்றது. லா.ச.ரா. நீண்ட காலம் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். சென்னையில் காலமானார்.