உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன. அதற்கு முகாந்திரமான சம்பவங்களைக் கண்டு அனுபவிக்கவும் நேர்ந்தது. இந்த இருநிலை உணர்வுகளும் கவிதைகளில் தொனிக்கின்றன, பெருமிதம் அதிகமாகவும் அருவருப்பு குறைவாகவும்.