சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசிப்பாளரை ஏற்க வைப்பதையோ இக் கவிதைகள் செய்யவில்லை. உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட ‘உண்மைகளாக’ நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம். வாசிப்பாளனின் தன்னடையாளத்தை விமர்சிப்பதாக, அவன் உணர்வுகளை எள்ளலுக்கு உட்படுத்துபவை இவை