எமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு, கவிதைப் பாத்திரங்களாக அலையும் கடையைப் பூட்டிவிட்டு, தொல் தமிழ் மரபின் நூலிழைகள் பழுப்பேறிய துண்டை உதறித் தோளில் இட்டுக்கொண்டு வெளியேறும் ந. ஜயபாஸ்கரனின் சித்திரம், இக்கவிதைகளில் சன்னமாகத் தெரிகிறது. கடையிலிருந்து வெளியேறும்போது, வான்கோவின் மஞ்சளை உடன் எடுத்துச் செல்கிறார் ஜயபாஸ்கரன். கடையில் அறையப்பட்ட இருப்பில், தான் புதைந்து நசிவதையும், கடையின் இருளையே கர்ப்பத்தின் பாதுகாப்பாக்கி ஒசிந்து ஒத்து ஒழுகுவதையும், நமது தனிப்பட்ட பிரபஞ்சங்களின் சாயலோடு அடையாளம் காணச்செய்ததுதான் ஜயபாஸ்கரனின் சாதனை. கடை, தன்னைப் பூட்டிக்கொண்டு ஜயபாஸ்கரனை வெளியேற்றிவிட்டது. ஜயபாஸ்கரன் உருவகித்து வைத்திருந்த சின்னஞ்சிறு தனிப்பிரபஞ்சம், இத்தொகுப்பில் உள்ள உரைநடைக் கவிதைகள் வழியாக நீட்சியையும் நிறையையும் அடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அதன் கர்ப்பப் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறி ‘நவீன’ கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பின்னர் உணர்ந்து, காலை எட்டிவைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதை இந்தக் கவிதைகள்.