நவீனத் தமிழ் உரைநடைக்கு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களைத் தமிழ் வாசகர் மனதில் நிறுத்துகின்றன. ஆசிரியருடைய புனைவின் நிழல் யதார்த்தத்தை மறைப்பதில்லை; அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது. அவரின் அனுபவங்கள் ஒரு மென்மையான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாகிவிடும் வித்தை திரும்பத் திரும்ப நிகழ்கிறது. (2012இன் மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக ஆனந்த விகடன் விருதுபெற்ற நூல்). அ. முத்துலிங்கம்: அ. முத்துலிங்கம் (பி. 1937) அ. முத்துலிங்கம் இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பையும் இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் ஐ.நாவுக்காகப் பணிபுரிந்தவர். 2000இல் ஓய்வுபெற்று, மனைவி ரஞ்சனியுடன் கனடாவில் வசிக்கிறார். பிள்ளைகள்: சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்ஸரா. அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும் இவருடைய பணி தொடர்கிறது. சிறுகதை, கட்டுரை, நேர்காணல், நாடகம், விமர்சனம், நாவல் என எழுதிவருகிறார்.