அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்கு பாம்புகளைத் தவழவிடுகின்றன. வரவேற்பறைகளில் மிருகங்களை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளாக சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. தேவிபாரதி அரவிந்தன்; அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’