சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாக குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்தப்படும் துரோகங்கள், இருபால் உள்ளங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, அகம் குலைக்கும் புறக்கணிப்புகள் என மனித மனத்தின் இருண்மை கூடிய பிரதேசங்களில், வழித்தடங்களில் பயணிக்கின்றன இக்கதைகள். எனினும் அன்பின் பிரியத்தின் ஒளிமிகுந்த விகசிப்பையும் இவற்றில் ஆங்காங்கே காண்கிறோம். சூழலின் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உறவுச்சூதில் வெட்டியெறியப்பட்டவர்களாகவும் நினைவழிந்து அகாலத்திற்குள் சென்று மறையும் மனிதர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகளில் இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுபாவிய அகவுலகின் நுட்பமான புள்ளிகள் தொட்டுக் காட்டப்படுகின்றன. கே.என். செந்தில்: கே.என். செந்தில் (பி. 1982) பெற்றோர்: நடராஜன் – கண்ணம்மாள். சொந்த ஊர் அவிநாசி. மேலாண்மையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். திருப்பூரில் வரி ஆலோசனை அலுவலகம் நடத்துகிறார். சிறுகதைத் தொகுப்புகள் ‘இரவுக் காட்சி’ (2009), ‘அரூப நெருப்பு’ (2013) ஆகியன. ‘விழித்திருப்பவனின் கனவு’ (2016) முதல் கட்டுரைத் தொகுப்பு. இளம் படைப்பாளிக்கான ஸ்பாரோ விருதை 2014இலும் சுந்தர ராமசாமி விருதை 2016இலும் பெற்றிருக்கிறார். கபாடபுரம் என்னும் இணைய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்புக்கு: 92, முனியப்பன் கோவில் வீதி, அவிநாசி. கைபேசி: 9750344855 மின்னஞ்சல்: knsenthilavn7@gmail.com