சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் ரகுநாதன், முதல் பதிப்பின் முன்னுரையில். சுந்தர ராமசாமி: சுந்தர ராமசாமி (1931 – 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.