“இதை வாசிக்கிறபோது எனது ஆச்சரியம் இரவிக்கு இந்தக் கலை அமைவு எப்படிக் கை வந்தது என்பதுதான். நெஞ்சையும் கவர்கிறது. சிந்தனையையும் தூண்டிவிடுகிறது. இந்த அனுபவங்கள் உயிர்த் துடிப்புள்ள வர்ணக் கீறுகளாக மிதந்து மிதந்து நிற்கின்றன. அந்த அப்பாவித்தனம் ஒருவேளை நம்மைச் சிரிக்க வைக்கிறது. இன்னொருவேளை நம்மை அழ வைக்கிறது. ஆனால் எல்லா வேளைகளிலும் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.” அ. இரவி: அ. இரவி (பி. 1960) யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இரவி, 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, 1986இல் சிறப்புக் கலைமாணி (B.A. Tamil Honours) பட்டத்தினைப் பெற்றார். பின்னர் 1988இல் தொடங்கி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கியல் பயின்று, 1992இல் முதுகலைமாணி (M.A.) பட்டத்தினைப் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (Diploma in Education) பட்டம் பெற்றார். பத்து வருட காலம் இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். ஐபிசி தமிழ் வானொலி (லண்டன்), டிடிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சி (பிரான்ஸ்) ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இருபதாவது வயதில் எழுதத் தொடங்கி, இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். மனைவி (சுசீலா), மைந்தர் (சஞ்சயன், சஞ்சுதன்) இவர்களுடன் லண்டனில் வசிக்கிறார். மின்னஞ்சல்: iravi@live.co.uk