வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் விடுபட மிக இயல்பாக அவருக்கு முடிந்திருக்கிறது. வாழ்வின் மையங்களிலிருந்து விலகி நின்று அவற்றை விமர்சனங்களுக்குள்ளாக்குவதை, விளிம்பு, மையம் எனக் கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கலையாக்க முற்படும் செந்தில் புத்தாயிரமாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த இளம் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து செந்தில் கொண்டிருக்கும் தெளிவு அவரது எழுத்துகளுக்குள்ள கூடுதல் பலம். தன் கதைமாந்தர்கள் கொண்டுள்ள பதற்றத்தை வாசகர்கள் மேல் சுமத்த அவர் ஒருபோதும் முற்படுவதில்லை. அவரது கதைகளில் கலைஅமைதி கூடியிருப்பதற்கு இது முக்கியக் காரணம். கே.என். செந்தில்: கே.என். செந்தில் (பி. 1982) பெற்றோர்: நடராஜன் – கண்ணம்மாள். சொந்த ஊர் அவிநாசி. மேலாண்மையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். திருப்பூரில் வரி ஆலோசனை அலுவலகம் நடத்துகிறார். சிறுகதைத் தொகுப்புகள் ‘இரவுக் காட்சி’ (2009), ‘அரூப நெருப்பு’ (2013) ஆகியன. ‘விழித்திருப்பவனின் கனவு’ (2016) முதல் கட்டுரைத் தொகுப்பு. இளம் படைப்பாளிக்கான ஸ்பாரோ விருதை 2014இலும் சுந்தர ராமசாமி விருதை 2016இலும் பெற்றிருக்கிறார். கபாடபுரம் என்னும் இணைய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்புக்கு: 92, முனியப்பன் கோவில் வீதி, அவிநாசி. கைபேசி: 9750344855 மின்னஞ்சல்: knsenthilavn7@gmail.com