மனித குலத்தில் வகைமைக்குப் பஞ்சமில்லை. வகைமைமீது கொண்டிருக்கும் பிரியம் இந்தப் பக்கங்களில் உறுதிப்பட்டிருக்கிறது. இது உண்மையில் முழுமைமீது கொள்ளும் விருப்பம்தான். (குமாரசெல்வா) தன் அனுபவ உலகத்தை ஒட்டி நின்று பெற்று, விலகி நின்று சொல்கிறார். எல்லாக் கதைகளிலும் குமிழியிடும் நகைச்சுவை உணர்வு விலகலையும் விமர்சனத்தையுமே காட்டுகின்றன. விவரிப்பின் வக்கணையைத் தவிர்த்துச் சுருக்கத்தின் அடர்த்தியைப் பிடிக்க விழையும் மனம். எழுத்துப் பாங்கில் மறைவுகள் உள்ளன. மீறல்களும் சிடுக்குகளும் உள்ளன. கதையை அர்த்தத்தின் தளத்திலும் காலத்தின் முன்னும் நீவி எடுக்க வேண்டிய சிரமம் சந்தோஷம் தரக்கூடியது. தமிழின் தற்கால எழுத்திலேயே ஒரு புதிய தடம் இந்தக் கதைகள். குமாரசெல்வா: குமாரசெல்வா (பி 1964) குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மார்த்தாண்டம் சொந்த ஊர். பெற்றோர் செல்லையன் நாடார் – செல்லத்தாய். இரண்டு ஆண்மக்களில் இவர் மூத்தவர். திருமணமாகிப் பத்து வருடம் குழந்தை இல்லாத பெற்றோர், இவர் பிறந்ததும் பெறற்கரிய செல்வமாக அழைத்த இயற்பெயர் செல்வகுமார். இலக்கியம் தனக்குள் பிடிபட ஆரம்பித்தபோது, யதார்த்தம் தலைகீழான உணர்வில் இவர் மாற்றி அமைத்த புனைபெயர் குமாரசெல்வா. ஐந்து வயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்டுத் தாயாரால் ஊர் ஊராகச் சுமந்து சென்று வைத்தியம் பார்த்து நோயின் சுவடுகூடத் தெரியாத அளவுக்குக் குணமடைந்தவர். ஏழுவயதில் தந்தையை இழந்து வறுமையை உண்டு ஊக்கம் பெற்றார். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு அனைத்தையும் தாயின் கடின உழைப்பால் பெற்று, அதன் பலன் எதையுமே காணாமல் மறைந்த அந்த வாழ்வின் உன்னதத்தைப் பேறாய் அடைந்தவர். இவர் மனைவி டாக்டர் சரோஜாபாய், ஹோமியோபதி மருத்துவர். சீகன்பால்க், தியான்செல்வ் என இரண்டு மக்கள். கல்லூரி ஒன்றில் தமிழ்மொழி, இலக்கியம் கற்பிப்பது தொழில். முகவரி : 14-101கி, மக்கவிளாகம், வழுதூர், அம்சி, தேங்காய்ப்பட்டணம் 629173, கன்னியாகுமரி மாவட்டம். செல்பேசி : 9443808834