நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி. புதுமைப்பித்தன்: புதுமைப்பித்தன் (1906 – 1948) தமிழ்ச் சிறுகதையின் முதல்வராக மதிக்கப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தையார் வி. சொக்கலிங்கம் பிள்ளை, தாசில்தார். தாயார் பர்வதத்தம்மாள். 1931இல் புதுமைப்பித்தன் நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று கமலா (1917-1995)வைத் திருமணம் செய்து கொண்டார். முதல் படைப்பு ‘குலோப்ஜான் காதல்’ 1933இல் காந்தியில் வெளிவந்தது. தினமணியின் உதவி ஆசிரியராகவும் பின்னர் தினசரியிலும் பணியாற்றினார். 1946இல் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1948இல் காசநோயால், மகள் தினகரியின் இரண்டாவது வயதில், திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். புதுமைப்பித்தனின் ஒரே வாரிசு திருமதி தினகரி சொக்கலிங்கம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்