தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு. சுகுமாரன். ஜெயகாந்தன்: ஜெயகாந்தன் (1934 – 2015) த. ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார். இவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது. ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.