நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆகச் சிறந்த ஒன்பது கதைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைக்கும் வாசிப்பிற்கு உகந்ததாக இருப்பதோடு பெரும் கதைசொல்லி அவர் என்பதையும் உணர்த்துபவை இக்கதைகள். மாடுகள் தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை. வேளாண் வாழ்வில் மாடுகள் செல்வமாகக் கருதப் பட்டமைக்கு இக்கதைகள் அரிய சான்றுகள். மாடுகளை மையமாக வைத்து மனித உறவுகளும் மனநிலைகளும் செயல்பட்ட விசித்திரங்களை இவரது கதைகள் காட்டுகின்றன. அத்துடன் இயல்புடனும் கிராமத்துத் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பற்றியல்லாமல் ஏற்கனவே கவனம்பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இடத்தையும் உறுதிப்படுத்துகிறது. பெருமாள்முருகன். சி.சு. செல்லப்பா: சி.சு. செல்லப்பா (1912 – 1998) பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு சொந்த ஊர் சின்னமனூர். சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் செல்லப்பா பங்களித்திருக்கிறார். சந்திரோதயம், தினமணி இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். இவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ். மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேல் கொண்டுவந்தார். பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரளக் கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர்.