இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்பில் இருக்கும் இக்காலத்தின் பல்வேறு அவலங்களைத் தொகுக்கின்றன கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள். இச்சந்திப்பு, நமக்கு வழங்கிய வாய்ப்புகளில் தொடர் ஓட்டமாக ஓடிச் செல்கின்றன இவரின் வரிகள். நிறையப் பயணங்கள்; பல்வேறு மனிதர்கள்; அவர்கள் அனுபவங்களை வார்க்கிறார்கள்; வாழ்வைச் செறிவூட்டுகிறார்கள். நேற்றும் இன்றும் அருகருகே இருந்தாலும் கால ஓட்டத்தின் ஒரு சிறு இழை கூட நேற்றையும் இன்றையும் பிரித்துக் காட்டுவதால் இப்படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கணேஷ் வெங்கட்ராமன்: கணேஷ் வெங்கட்ராமன் (பி. 1969) லால்குடியில் பிறந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பள்ளிப் படிப்பு; இளநிலை வணிகவியல் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடி வடக்குக்கு இடப்பெயர்வு. குஜராத், மகாராஷ்டிரம், சில அயல் நாடுகள் என்று பல இடங்களில் பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக ஒரு பன்னாட்டு உணவு நிறுவனத்தில் விற்பனைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 2011இலிருந்து வலைதளத்திலும் இணையப் பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். பௌத்தம், வரலாற்று நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். இவரது சிறுகதைத் தொகுப்பு ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோவில்’ (2016). மனைவி: ஹேமா; புதல்விகள்: பூஜா, ஷ்வேதா ஆகியோருடன் தில்லியில் வசிக்கிறார். மின்னஞ்சல்: hemgan@gmail.com