எம்.வி. வெங்கட்ராமின் தேர்ந்தெடுத்த பதினொரு சிறுகதைகளும் ‘பெட்கி’, ‘குற்றமும் தண்டனையும்’ என்னும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுதி. மனிதனின் அகத்தூண்டுதலுக்குக் காரணமான உணர்வுகளை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாக இந்தக் கதைகள் அமைந்துள்ளன. “எம்.வி.வி.யின் சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் நம்பிக்கை” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன். எம்.வி. வெங்கட்ராம்: எம்.வி.வெங்கட்ராம் (1920 – 2000) மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வி. கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை வெங்கடாசலம், தாயார் சரஸ்வதி. பி.ஏ. (பொருளாதாரம்) மற்றும் ஹிந்தியில் விஷாரத் படித்தார். ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் சிறுகதை அவரது 16ஆம் வயதில் மணிக்கொடியில் வெளியாயிற்று. அப்போது அவர் கல்லூரியில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் முதலியன எழுதினார். பிரபல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவை வெளிவந்தன. 1948இல் தேனீ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் அதற்குப் பங்களித்தனர். பாலம் என்ற தமிழ் இலக்கிய இதழுக்கும் எம்.வி.வி. கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். ‘காதுகள்’ என்ற அவரது நாவல் அதில் தொடராக வெளியாயிற்று. சொந்தப் படைப்புகள் தவிர ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் பலவற்றைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார். இவருடைய நூல்கள் இருநூறுக்கு மேல் இருக்கும். 1993இல் சாகித்திய அக்காதெமி விருது பெற்றார்