‘ஓய்ந்தேன் என்று மகிழாதே’ என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறி விட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார். வெளிவந்த காலத்தில் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை எழுப்பிய இந்த ஐந்து கதைகளும் இன்றளவும் புதுமை குன்றாமல் வீரியத்தோடு இன்றைய வாசகரை எதிர்கொள்கின்றன. சுந்தர ராமசாமி: சுந்தர ராமசாமி (1931 – 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானா