மார்ச் – ஏப்ரல், 1988 ‘கணையாழி’யில் வெளியான ‘நிகழ்வு’ என்னும் மிகச்சிறு கதையே ஓர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. அப்போது முதல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறேன். 2015 ஜனவரியில் ‘காலச்சுவடு’ இதழில் வெளியான ‘மாலை நேரத் தேநீர்’ கடைசிக் கதை. அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை. ஏற்கனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை, நூல்களில் இடம்பெறாதவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது. இவற்றைத் தொகுத்துப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கலாமே என்னும் உணர்வு தோன்றியது. சவாலான வடிவமாகிய சிறுகதைக்குள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நினைவோடியது. இனிமேல் எழுதப் போகும் கதைகளைப் பற்றிச் சிந்திக்க உத்வேகம் உருவாயிற்று. மேலும் இக்கதைகள் என் இலக்கிய ஆற்றலின் போக்கை உணர்த்தும் பெரும்சான்றாக விளங்கி வாசிப்போரின் அனுபவ வெளியை விரிவாக்கும் எனவும் நம்புகிறேன். பெருமாள்முருகன்: பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.