முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார். அ. முத்துலிங்கம்: அ. முத்துலிங்கம் (பி. 1937) அ. முத்துலிங்கம் இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பையும் இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் ஐ.நாவுக்காகப் பணிபுரிந்தவர். 2000இல் ஓய்வுபெற்று, மனைவி ரஞ்சனியுடன் கனடாவில் வசிக்கிறார். பிள்ளைகள்: சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்ஸரா. அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும் இவருடைய பணி தொடர்கிறது. சிறுகதை, கட்டுரை, நேர்காணல், நாடகம், விமர்சனம், நாவல் என எழுதிவருகிறார்.