1980களில் கதை சொல்லவந்த ஆபிதீன், நவீனத் தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார். சாமான்ய முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மிகத்தின் போர்வையால் மறைந்துகிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள், ஆபிதீனின் கைபட்டு உயிர்பெற்று உலா வருகின்றன. 1975களில் உருவான மத்திய கிழக்கு நாடுகளின் தொழில்வாய்ப்பின் பின்னரான தமிழ்நாடு இஸ்லாமிய வாழ்வின் சில முக்கிய கூறுகளையாவது மிகத் துல்லியமாகத் தரிசிக்கும் பாக்கியத்தை இந்தக் கதைகள்மூலம் ஆபிதீன் எனும் கலைஞன் நமக்கு முன்வைக்கிறார். ஆரம்பமும் முடிவும் இல்லாது நமது தேடல்களுக்கும் ஊகங்களுக்கும் இடமிட்டொதுங்கும் பதிவுகள் ஆபிதீன் கதைகள். ஆதமுடைய ‘வாழைப்பழம்’ இந்த உலகை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது என்றால் – ஆபிதீனுடைய வாழைப்பழம் நாகூர்வரையிலும் என்னை அழைத்திற்று. அங்கு அரசரைக் காணாமல் அஸ்மாவைத் தரிசித்தேன். நகுலனுக்கு ஒரு சுசீலா போல, ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன. ஆபீதின்: ஆபிதீன் (பி. 1958) நாகூரில் பிறந்தவர். யாத்ரா சிற்றிதழில் 1982இல் பிரசுரமான ‘குழந்தை’ (கடிதம்) மூலம் கவனம் பெற்றவர். இணைய இதழ்களில் அபூர்வமாக எழுதும் இவருடைய முதல் சிறுகதைத் தொகுதி ‘இடம்’. (2003). நீண்டகாலமாக துபாயில் பணிபுரிகிறார். இசை, ஓவியத்தில் ஈடுபாடுடையவர். மின்னஞ்சல் : abedheen@gmail.com வலைப்பக்கம் : https://abedheen.wordpress.com