நாற்பதைத் தாண்டியும்
திருமணமாகாதவர், சினிமா எடுக்கும் கனவில் நிகழ்காலத்தில் தொலைந்துகொண்டிருப்பவர், சிறைக்குச்
சென்று வந்தவர், நடைப்பாதையில் துணிவீடு கட்டி குடும்பம் நடத்தும் நாடோடிகள், மளிகைக்கடை
அண்ணாச்சி, படிப்பேறாமல் சிறுவயதிலேயே கூலிவேலைக்குச் சென்றவர், புதிதுப்புதிதாய் ஏதாவது
முயற்சி செய்துக்கொண்டிருக்கும் இளைஞர் வட்டங்கள், மூன்றாம் பாலினத்தவர், உழைப்பால்
முன்னேறியவர்கள், நொடித்துப்போன மனிதர்கள் என நாம் தினசரி கடக்கும் பற்பல மனிதர்களின்
இதயத்துக்குள் புகுந்து ஒரே நபரே அனைத்து கதாப்பாத்திரமும் ஏற்று அவர்களின் நியாய அநியாயங்களை,
எண்ணவோட்டங்களை, நிகழும் சம்பவங்களை அப்பட்டமாக
காட்சிப்படுத்திட முடியுமா? அந்த அற்புதத்தைத்தான் ரபீக் ராஜா இந்த சிறுகதைகளின் வாயிலாக
நமக்குத் தருகிறார்.
தன்னைச் சுற்றி
நிகழும் யாவையும் இத்தனை துல்லியமாக ஒரு மனிதனால் பதிவு செய்திட முடியுமா என்ற ஆச்சர்யம்
ஒவ்வொரு வரிகளிலும் நீங்கள் அனுபவிக்கப்போவது நிச்சயம். இதனை மிகைப்படுத்திச் சொல்ல
ஏதுமில்லை. ரபீக் ராஜா மனிதர்களை எழுதுகிறார்
. முத்தாய்ப்பாய் விரக்திகளிலும் சோகங்களிலும்
நம்மைத் தேங்கவிடாமல் தடுக்க நகைச்சுவையை அரங்கேற்றி
இறுகிய முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்துவிடுகிறார். . “அட ஆமால்ல
?” என நாம் புருவம் உயர்த்த இந்த சிறுகதைகளில் பெரும் சம்பவங்கள் நிறையவே உண்டு. “அட இது
நமக்கும் நடந்ததுல?” என பொருத்திப் பார்க்க ஏராள நினைவுகள் அவர் எழுத்தில் உண்டு.
சர்வ நிச்சயமாய் வாசித்துக்கொண்டிருக்கையிலேயே நிறைய இடங்களில் நீங்களே ஒரு கதாப்பாத்திரமாகிப்
போயிருப்பீர்கள்.