ஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்நாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்றன. ஏவாளின் சித்தப் பிரமையும் பிதற்றலும் தூக்கிலேறப் போகின்றவனின் பதற்றமும் கலைஞர்களின் தவிப்புகளும் வெளிப்படுகின்றன. கலைஞனின் தேடல் சிரத்தையும் அக்கறையும் கொண்டிருக்கும்போது, பல நூற்றாண்டு காலவெளியைத் தொட்டு, இத்தருணத்தில் சிலிர்ப்பையும் சிறகடிப்பையும் ஏற்படுத்திட இயலும். இது சிவசங்கரின் எழுத்தில் இயல்பாக நிகழ்கிறது. சிவசங்கர். எஸ்.ஜே: சிவசங்கர் எஸ்.ஜே (பி.1976) இளங்கலை மருந்தாளுநர் பட்டம் பெற்றுள்ள சிவசங்கர், எழுத்து, காட்சி ஊடகம், ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்களும் இரண்டு ஆவணப்படங்களும் உருவாக்கி வெளியிட்டுள்ளார். குறும்படங்களுக்கென மூன்று விருதுகள், ‘கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்புக்காக 2016ஆம் ஆண்டிற்கான ‘தனுஷ்கோடி ராமசாமி’ நினைவு விருது ஆகியன பெற்றுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டப் பொருளாளர். திணை காலாண்டிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். இது இவரது இரண்டாவது நூல் . . . தொடர்புக்கு: prismshiva@gmail.com