சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களைக் கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்க்கும் உண்மைக்கும் இடையிலான உறவைக் கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண் – பெண் உறவின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவுச் சிக்கலைப் பேசியவர், பிரியம் சுரக்கும் உறவுகளுக்குள் கரவாக ஒளிந்திருக்கும் வன்மத்தை எழுதியவர், குற்றங்களின் உளவியலை எழுதியவர், உன்னதங்களை, தொன்மங்களை தலைகீழாக்கியவர், கனவுகளையும் அவை கலைந்து நிதர்சனத்தை எதிர்கொள்வதையும் எழுதியவர், வாழ்க்கை சரிதைத்தன்மை உடைய கதைகளை எழுதியவர், இணை வரலாறு கதைகளை எழுதியவர், பகடிக் கதைகளை எழுதியவர், சாதி குறித்தும் ஈழம் குறித்தும் அக்கறைகொண்ட கதைகளை எழுதியவர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவரும்கூட. பொதுவாக மனிதர்களின் உன்னதங்களின் மீது அவநம்பிக்கை கொண்ட கதைசொல்லி என்றாலும் மானுட நேயத்தையும் அன்பின் வெம்மையையும் சுமந்து செல்லும் கதைகளை அவர் எழுதியிருக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித்: சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com