அத்தியாயம்-11
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அத்தியாயம்-10
மதன் முறைத்த படி காரிலிருந்து இறங்கப் போனான். விக்கி அவனை தடுத்து தடாலடியாக காரை விட்டு இறங்கினான்.
“என்ன மறுபடியும் தகறாருக்கு வந்திருக்கியா..?” சிடுசிடுப்பாய் முத்துவின் அருகே சென்றான். முத்துவின் பின்னாலிருந்து இறங்கிய அவனது அம்மா “கோச்சுக்காதீங்க தம்பி. அப்படிலாம் ஏதும் இல்ல.” என்றாள் தடுக்கும் விதமாக.
“பின்ன ஏன் மோதுற மாதிரி வந்து வண்டிய நிறுத்தறான்..?”
“இதே வார்த்தைய நானும் கேட்கலாம்ல” முத்து கேட்டான்.
மதன் இதை கேட்டு கார் கதவை திறந்து இறங்கப் போக, விக்கி கார் கதவின் கைப்படியை பிடித்து அவனை இறங்க விடாமல் தடுத்தபடி சொன்னான்.
“நீ சரியா ரூல்ஸ் பாலோ பண்ணி வந்திருந்தா கேட்கலாம்.பண்ணலியே. அதனால சாரி சொல்லிட்டு போய்கிட்டே இரு”
முத்து ஏதோ சொல்ல வர, “டேய் சும்மா இருடா.” பல்லை கடித்த அவனது அம்மா, மதனிடம் நெருங்கி சொன்னாள். ” ஐயா நீங்க என்னை வர சொன்னீங்க. .நானும் வரலாம்னு இருந்தேன். ஆனா பாருங்க. இந்த பய உங்க கிட்ட எல்லாம் வேலைக்கு போக கூடாதுனு தடுத்துட்டான்.”
“பரவாயில்லேம்மா. உங்க பிள்ளைக்கு இப்ப ரோசம் வந்துருச்சி. இனி உங்களை உட்கார வச்சி சாப்பாடு போடுவான் பாருங்க. என்னப்பா. உங்கம்மாவ தவிக்க விட மாட்டீல்ல.” கிண்டலாய் சிரித்தபடி விக்கியை பார்த்து சொன்னான்.
” நீ வண்டியை எடுடா . டிராபிக் ஆயிடுச்சு பாரு”
விக்கி வந்து வண்டியை எடுக்க, முத்து வேண்டா வெறுப்பாக தன் பைக்கை ஓரம் நகர்த்தினான். உள்ளே இருந்த பிரியாவை பார்த்து கொண்டே நின்றான்.
கார் வேகமெடுத்தது.
“இன்னும் அவன் திமிர் அடங்கல” விக்கி சொன்னான்.
“அடக்கிடுவோம் பிரியா. டோண்ட் ஒர்ரி” பின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னான் மதன்.
” ஓகே”
*********
வீட்டில் வந்து கார் நின்றவுடன் படிக்கட்டில் அமர்ந்திருந்த மூர்த்தியும் கௌரியும் எழுந்தனர்.
மதன் சொன்னான்.
“நைட்ல பிரியா தனியா வந்திட்டிருந்துச்சு. அதான் கார்ல அழைச்சிட்டு வந்துட்டோம்.”
“நன்றி தம்பி. உங்க கூட கார்ல் வந்திட்டிருக்கேன்னு பிரியா ஏற்கனவே எனக்கு மெசேஜ் அனுப்புச்சு”
மதன் திரும்பி பிரியாவை பார்த்தான்.
“அப்பா கிட்ட சொல்லாம எதுவுமே செய்யறதில்ல போல.”
பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
“ஒவ்வொரு ஆணுக்கும் மகள் இன்னொரு தாய் போலனு சொல்லுவாங்க. நீங்க அதிர்ஷ்டசாலி மூர்த்தி”
பெருமிதமாய் தலையாட்டினார்.
“பிரியாவுக்கு கல்யாணம் ஆனவுடனே இவர் என்ன பண்ண போறாருனு தான் எனக்கு தெரியல” கௌரி சொன்னாள்.
“பிரியாவுக்கு கொடுக்கிற சீர் வரிசைல அவங்க அப்பாவையும் சேர்த்து அனுப்பி வச்சிடுங்க.”
எல்லாரும் சிரித்தார்கள்.
பிரியாவின் முகத்தில் மட்டும் சிரிப்போடு நாணமும் சேர்ந்தே இருந்தது.
மதன் முதல் முறையாக அவள் வெட்கப்படுவதை பார்க்கின்றான். அந்த நாணத்தை தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
மறுநாள். மூர்த்தியை அழைத்த மதன், தன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்த சாவியை நீட்டினான்.
“இரண்டாவது மாடில இருக்கிற ரூமோட சாவி. அதை திறந்து என்னோட கையெழுத்தில நாலஞ்சு டைரிஸ் இருக்கும். அதை எடுத்திட்டு வாங்களேன்”
மூர்த்தி சாவியை வாங்காமல் தயங்கினார்.
“மன்னிச்சுக்கங்க தம்பி. அந்த ரூமுக்கு நான் போக மாட்டேன்.”
“ஏன்”
தலை குனிந்தார்.
“சொல்லுங்க மூர்த்தி. ஏன் போக மாட்டேங்கறீங்க.”
மதனை நிமிர்ந்து பார்த்தார்.
“சொல்லுங்க. தம்பி தெரிஞ்சுக்கட்டும்.”கௌரி சொன்னாள்.
“நான் வேண்ணா வெளியில போய் இருக்கட்டுமா ” விக்கி எழுந்தான்.
“நீங்க இருங்க தம்பி “என்ற மூர்த்தி மெல்லிய குரலில் சொல்ல தொடங்கினார்.
‘பத்து வருடம் முன்னாடி நடந்த விசயம் தம்பி’ என ஆரம்பித்தார்.
********
“மூர்த்தி”
“ஐயா.”
” இந்த பையை கொண்டு போய் ரெண்டாவது மாடில இருக்கிற ரூம்ல பீரோல வச்சிடு. இதுல 15 லட்சம் பணமிருக்கு. பத்திரம்.”
கருப்பு நிறத்தாலான பேக் அது. ஒரு நகைக்கடையின் விளம்பரம் அதில் இருந்தது. மூர்த்தி கையில் வாங்கும் போதே கனத்தது. சோபாவில் அமர்ந்திருந்த விமலாவிடம் சாவி வாங்கி கொண்டு, கஷ்டப்பட்டு மாடிப்படி ஏறி சென்று அந்த அறையின் கதவை திறந்தார். புதிதாக பெயிண்ட் செய்யப்பட்டிருந்ததால் சிகப்பு பெயிண்ட் அவரது கைகளில் இருந்த கருப்பு பேகில் ஒட்டிக் கொண்டது. கைகளால் அதை துடைத்தும் அந்த பெயிண்ட் கறை இன்னும் அதிகமாகியதே தவிர மறையவில்லை. அப்படியே பீரோவில் வைத்தவர் பூட்டி ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து விட்டு கொண்டு வந்து முதலாளியம்மாவிடம் சாவியை கொடுத்தார்.
“வச்சிட்டேன் ஐயா” என்றார். விஜயராகவன் தலையாட்டினார்.
நான்கு நாட்களுக்கு பிறகு ,விஜயராகவன் அவசரமாக அழைத்தார்.
“டேய் மூர்த்தி”
“ஐயா”
“எங்கடா ரூம்ல நான் வைக்க சொன்ன பேக்.”
“உள்ள தான் இருக்குது.”
“இல்லியேடா”
“என்னது இல்லியா” பதறியவாறு மாடிப்படி ஏறி ஓடினார்.
பீரோ வைத்த இடத்தில் அந்த பேக் இல்லை.
சுற்று முற்றும் பார்த்தார். வெள்ளி பாத்திரங்கள், பட்டுபுடவைகள் என்று நிரம்பியிருந்த அறையில் அந்த பேக் மட்டும் இல்லை.
ரூமுக்குள் வந்த விஜயராகவன்” என்னாச்சுடா” என்றார்.
“இல்லய்யா “என்றார் பதட்டமாய்
“நீ உள்ள வச்சியா இல்லியா”
“ஐயா என் மேல சந்தேகப்படாதீங்க.”
“அன்னிக்கு சாயந்தரம் ஆட்டோ பிடித்து எங்கயோ கிளம்பி போனியாமே . எங்க போனே?”
“மச்சினிய பார்க்க போனேன்யா”
“பணத்தையும் கொண்டு போயிட்டியா. “
“முதலாளி. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது.”
“பணத்தை எடுத்திட்டு எடுக்கலனு சாதிக்கிற ஆளா.?”
“முதலாளி பார்த்து பேசுங்க” மூர்த்தி குரல் உயர்த்தவே கோபம் வந்து விட்டது. “கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை காணும்னு துடிக்கிறேன். என் கிட்டயே குரல் உயர்த்தறியா.” என்று சட்டையை பிடித்து தரதரவென்று மாடிப்படி வழியே கீழே இழுத்துத்து வந்தவர் பெல்டை எடுத்து கொண்டு அடி வெளுக்க ஆரம்பித்தார்.
கௌரி குறுக்கே புகுந்து “என் புருசன் அந்த மாதிரி பண்ற ஆள் கிடையாது. ” என்று கோபப்பட்டாள்.
“சீ போ” என்று தள்ளியவர் ” போலீசை வர சொல்லி உங்க ரெண்டு பேரையும் உள்ள தள்ளி தோளை உரிச்சா தான் உண்மையான ஒத்துப்பாங்க.” விஜயராகவன் கத்தினார். மூர்த்திக்கு பயம் வந்து விட்டது.
“ஐயா. எவ்வளவு வேண்ணாலும் அடிங்க. ஆனா போலீஸ்ல வேண்டாய்யா.என் பொண்ணு அனாதையாகிடும்யா. திருடனோட பொண்ணுனு பட்டம் என் பொண்ணுக்கு வந்திடும்யா. ” காலை பிடித்து கொண்டார்.
“திருட்டு பயலே. விடுடா காலை”
“ஐயா. என்னை நம்புங்க. திருடினா நான் ஓடி போயிருக்க மாட்டேனா..”
“அதனால ஓடிப் போகாம உன்னை யோக்கியன்னு காண்பிச்சிக்கிறே”
“இல்லய்யா. நான். எடுக்கலேய்யா.” மன்றாடினார்.
“காலம் முழுக்க குடுக்குற சம்பளத்தை வாங்கிகிட்டு நான் குடுக்கிற வேலைய செஞ்சிட்டு கொத்தடிமையாவே இரு. அப்ப உன்னை நம்பறேன்”
பல்லை கடித்த படி பெல்டை வீசி விட்டு ஹாலை விட்டகன்றார்.
விமலா மூர்த்தியை முறைத்த படி நின்றிருந்தார்.
” அம்மா நான் எடுக்கலைமா. ஐயா கிட்ட சொல்லுங்கம்மா”
“அப்ப பணம் எங்க தான் போச்சு மூர்த்தி?”
மூர்த்தி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நிற்க, ” யாரை நம்பறதுன்னே தெரியல” என்றபடி அவரும் ஹாலை விட்டு அகன்றார்.
********
மூர்த்தி குலுங்கி அழ ஆரம்பிக்கு, கௌரி தன் கணவனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் நின்றாள்.
” இப்ப நான் நிக்கிற இந்த இடத்துல தான் குற்றவாளியா அறிவிக்கப்பட்டேன்… அதுக்கப்புறம் அந்த ரூம் சாவி என்கிட்ட வர்றதுமில்ல. நான் அந்த ரூமுக்கு போறதுமில்ல.”
கலங்கிய கண்களை துடைத்து கொண்டவர், “நீங்களாவது என்னை நம்புங்க தம்பி. நான் திருடல” கை கூப்பினார்.
மதன் அருகில் வந்து அவர் கைகளை பிடித்து கொண்டான்.
“ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம். அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு பொண்ணை வளர்த்துருக்கீங்க. நீங்களா அடுத்தவங்க காசுக்கு ஆசைப்பட போறீங்க. எங்கப்பா அம்மா பண்ணதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” இப்போது கலங்கிய கண்களுடன் மதன் கை கூப்பினான்.
“நீங்க எதுக்கு தம்பி மன்னிப்புலாம் கேட்டுகிட்டு…”
“உங்களை நான் நம்பறேன்”
” என் பொண்ணுக்கு இந்த விசயம் தெரிஞ்சா தாங்கிக்காது. நீங்க இத சொல்ல வேண்டாம்.” மூர்த்தி சொல்லி கொண்டிருக்கையிலேயே பிரியாவின் குரல் கேட்டது.
“அப்பா. உங்களோட கஷ்டங்கள்ல பங்கெடுக்கிற உரிமை எனக்கு இருக்குப்பா”
எல்லோரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்கள்.
பிரியா நின்றிருந்தாள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.