அத்தியாயம்-16
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
மதன், பிரியாவின் கோபத்தின் பின்னே மறைந்திருப்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். இது விசயமாக விக்கியிடம் விவாதிக்க எண்ணினான்.
‘என்னடா அவங்களே வேணாம்னுட்டாங்க. நீ என்னத்துக்கு கெஞ்சிட்டிருக்கே . உன் பிரஸ்டீஜ் என்ன? அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க ‘ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடலாம் என்பதால் பேசவில்லை. ஆனாலும் பிரியாவிற்காக எவ்வளவு வேணும்னாலும் இறங்கலாம் என்றே தோன்றியது. கூடவே ஏன் இப்படி ஆனேன் என்ற கேள்வியும் அவனுக்குள் சுழன்றடித்தது.
எந்த நொடியில் அவள் தன் பக்கம் தன்னை ஈர்த்து கொண்டாள் என்பதை யோசிக்க முயன்று தோற்று கொண்டிருந்தான். அவளிடமே கேட்டு விட்டால் என்ன என்றும் தோன்றியது. நேரம் செல்ல செல்ல அது வலுப்பெற்றது. சமயம் எதிர்பார்த்து காத்திருந்தான்.
மூர்த்தி முதல் நாள் மதனிடம் பேசி விட்டு வீட்டிற்கு சென்றவுடனே பிரியாவிடம் மதனின் ஆசையை சொல்லி விட்டார். அப்படியா என்று கேட்டு கொண்டவள், “அப்பா நான் அவர்க்கிட்ட பேசினது ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள்தான். உங்கக்கிட்ட பேசினத என்கிட்ட அவர் கேட்டதில்ல. ஆனா அப்பாக்கிட்ட ஒரு விசயம் பேசணும்னு மட்டும் சொன்னார்.”
“நான் முடியாதுனு சொன்னது சரி தானே பிரியா”
தன்னுடைய எண்ணத்தை தான் பிரியாவும் கொண்டிருக்கிறாளோ என்று மூர்த்தி அறிந்து கொள்ள நினைத்துக் கேட்டார்.
கௌரி கோபப்பட்டாள்.
“அவ தான் ஏற்கனவே நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்றீங்களோ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டா இல்ல. பின்ன ஏன் அவளைக் குழப்பறீங்க.”
“என்னோட முடிவு சரி தானாங்கிறத உறுதிப்படுத்திக்கிறேன்.”
“சரி தான்” பிரியா தீர்மானமாக சொன்னாள்.
இந்தச் சூழ்நிலையில் தான் மறுநாள் போட்டோ எடுக்க சொன்னதற்கு அவள் கோபப்பட்டிருக்கிறாள் என்றவுடன் தான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிடிக்கவில்லையோ என்று தான் அவருக்கு நினைக்க தோன்றியது. தன் மனைவி கௌரியிடம் இதை பற்றி கேட்டார்.
“கல்யாணம் பண்ணிட்டு அப்பா அம்மாவை பிரியப் போறோமேங்கிற எண்ணம் அவளை வதைச்சிட்டிருக்கு. என்கிட்ட சொல்லிப் புலம்பிகிட்டிருந்தா. மாப்பிள்ளை வேற வெளிநாட்டில் வேலைல இருக்காரு. இன்னும் அவரை அவ பார்க்கல… அதனால கூட எதுக்கு இதெல்லாம்னு நினைச்சிருக்கலாம்.”
“பிரியா மாப்பிள்ளை போட்டோவே பார்க்க மாட்டேங்குறா. இதுல மாப்பிள்ளையோட அப்பா மாப்பிள்ளை போன் பண்ணிப் பொண்ணுக்கிட்டப் பேசறேன்னு சொல்லிருக்காருன்னு வேற சொல்றாங்க.”
“மாப்பிள்ளைதான் பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லியிருக்காருல்ல. அப்ப பிரியா பேசுவானு சொல்லிடுங்க.”
மூர்த்தி யோசனையாய் தலையாட்டினார்.
****
அன்று மாலை பிரியா வாக்கிங் போவது போல் செல்போனில் பாட்டுக் கேட்டபடி தென்னை மரங்களின் அணிவகுப்பினூடே நடந்து கொண்டிருந்தாள்.
மதன் இது தான் சமயமென்னு கிளம்பினான்.
எதிர்பாராமல் எதிரே வருவது போல் காதில் வாக்மேனுடன் அவனும் செல்ல ஆரம்பித்தான். இதை பால்கனியில் நின்றபடி போன் பேசி கொண்டிருந்த விக்கி பார்த்து புன்னகைத்து கொண்டான்.
பிரியாவின் அருகே மதன் வந்தவுடன் நின்றான்.
அவளும் நின்றாள்.
அவனை திடீரென்று அங்கே எதிர்பார்க்கவில்லை.
“என்ன வாக்கிங்கா”
“ம்” பிரியா சினேக பாவத்துடன் சிரித்தாள்.
” அப்பா நான் பேசனத சொன்னாரா”
“ம்” செல்போனிலேயே அவளது கவனம் இருந்தது. அதுக்கென்ன இப்போ எனபதாகவே அவனுக்கு தோன்றியது.
“நீ அதை ஏத்துக்கிறியா”
“ம் ” அந்த ஒற்றை வார்த்தையில் இருந்த உறுதி மதனை அயர்ச்சி அடைய வைத்தது.
“கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா”
“ம்”
” அப்பா அம்மா நம்மளோட நல்லதுக்கு தான் சொல்றாங்கங்கிறது சரி தான். ஆனா நமக்குனு ஒரு வயசு வந்தவுடன் வரப்போற கணவன் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ஐடியா இருக்கிறதிலே தப்பில்லையே. ஏன். உன்கிட்ட அது இல்ல”.
“நான் எதையும் எனக்குனு திங்க் பண்ணிக்கிறதில்லே.”
“ஏன்”
“எங்க மூணு பேர் அலைவரிசையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கு”
“இப்ப ஒரு ட்ரெஸ் உங்கப்பா உங்களுக்கு சரியா இருக்கும்னு வாங்கி கொடுக்கிறாரு. ஆனா அது உங்களுக்கு பத்தல. என்ன பண்ணுவீங்க?”
“ஆல்ட்ரேசன் பண்ணி போட்டுக்குவேன்.”
“அதே புருசன் சரியில்லாம போயிட்டா”
“சரி பண்ணி கொண்டு வருவேன்.”
“இதன் மூலம் உன் வாழ்க்கையை தியாகம் பண்ண பார்க்கிறியா. ஒரு நல்ல நண்பனா இத கேட்கறேன்.”
பதில் சொல்ல தோணாமல் பிரியா நிற்பதாகவே அவனுக்கு தோன்றியது. மதன் விடாமல் முன்னேறினான்.
“பட்டுன்னு கேட்டுடறேன். உனக்கு என்னை பிடிச்சிருக்கா”
நிமிர்ந்து அவனை பார்த்தவள் சொன்னாள்.” ஒரு நல்ல மனிதனா பிடிச்சிருக்கு”
மேலும் மதன் ஏதோ கேட்க வர, ” அப்பா பார்த்தா என்னை தப்பா நினைக்க மாட்டார். ஆனா உங்களை நினைக்கலாம். எதுக்கு இத சொல்றேன்னா அப்பா உங்களை ஒரு கடவுள் ஸ்தானத்துல வச்சிருக்கார் .நான் வரேன்.”
அவனிடமிருந்து விலகி வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள்.
” நல்ல விதமாக அவர் நினைச்சு மட்டும் என்னவாகப் போகுது. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட போராறா என்ன ? ” சலிப்புடனே வார்த்தைகளை விட்டெறிந்தான்.
திரும்பி பார்த்த பிரியா ஏதோ சொல்ல நினைத்தாள். ஆனால் பதில் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
மதன் கோபத்தோடு பிரியாவையே பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு தென்னைமரத்தின் மேலே கண்கள் சிவக்க, பார்த்து கொண்டிருத்தான் முத்து.
****
மதன் அன்றிரவும் டென்சனாக இருந்தான்.
” பிரியா என்ன சொன்னுச்சு..?”
” அப்பா புராணம் பாடிட்டிருக்கா” கடுப்போடு பதிலளித்தான்.
விக்கிக்கு அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.
மதனுக்கு எதன் மீதாவது கவனம் செலுத்தலாம் போலிருந்தது. மாடியில் பூட்டப்பட்டிருக்கும் அறையின் ஞாபகம் வரவே,
” டேய் அம்மா கிட்ட வாங்கினோமே அந்த ரூம் சாவி எடு” என்றான்.
விக்கி சாவியை எடுத்து கொண்டு வர, அவனுடன் மதன் கிளம்பினான்.
அவர்கள் தங்கியிருக்கும் மாடி அறைக்கு கொஞ்சம் தள்ளி தான் அந்த அறை இருந்தது. அந்த அறையின் கதவை விக்கி திறந்து உள்ளே நுழைய மதனும் நுழைந்தான்.
நெடுநாள் திறக்காமல் இருந்ததால் எங்கும் தூசி படிந்திருக்க, அதன் நெடி இருவருக்கும் தும்மல் வரவழைத்தது.
லைட்டைப் போட்டு அறையை மதன் நோட்டமிட்டான். எங்கும் பொருட்கள் இறைந்திருந்தது.
செல்பில் புத்தகங்கள் நிறைய இருந்தது.
அதனூடே தன் டைரிகள் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தான். கிடைக்கவில்லை.
மூட்டைகள் நிறைய இருக்க அதில் ஒரு மூட்டையில் கிடைத்தது. 1 2 3 4 5 என்று நம்பர்கள் போட்ட டைரிகள்.
” சூப்பர்டா. எங்க எங்கப்பா தூக்கி எடைக்கு எடை கடையில போட்டிருப்பாரோனு நினைச்சேன். நல்ல வேலை கிடைச்சிடுச்சு.”
“கடையில போட்டா நூறு ரூபாய் கிடைக்கும்.”
“இதுல நான் எழுதி வச்ச கதை சுருக்கங்களை கொண்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கொடுத்தா லட்ச லட்சமா கிடைக்கும்.” என்றவன் அங்கிருந்த ஒரு கருப்பு நிற பேகை எடுத்து தூசி தட்டி அதில் டைரிகளை எடுத்து உள்ளே வைத்தான்.
போட்டோ ஆல்பம் ஒன்று கிடைத்தது.
சிறு வயதில் தன் அம்மா தன்னை எடுத்த படங்கள் அவை.
அதையும் எடுத்து அந்த பேகில் வைத்தான்.
மூர்த்தி பணம் வைத்து தொலைந்து போன நகைக்கடை விளம்பரம் இருந்த அதே பேக் .மூர்த்தி துணி கொண்டு துடைத்தும் போகாத சிகப்பு பெயிண்ட் கறையுடன் இருந்த அதே பேக்.
ஒரு ரகசியத்தை தனக்குள் மறைத்த படி இருந்த, அந்த பேகை விக்கி எடுத்து கொள்ள மதன் அவனுடன் அறையிலிருந்து வெளி வந்தான்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.