அத்தியாயம்-17
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16
மதன் ஹாலில் வந்தமர்ந்து அந்த கருப்பு நிற பேகை ஆர்வமாய் திறந்தான் அவனது ஆர்வத்தையும் அவசரத்தையும் பார்த்து விக்கியே ஆச்சரியப்பட்டான். போட்டோ ஆல்பத்தை வெளியே எடுத்தான்.
“எங்கம்மாவுக்கு போட்டோ எடுக்கிறதுல ஆர்வம் ஜாஸ்தி. அதுவும் என்னை சலிக்காம போட்டோ எடுத்திட்டே இருப்பாங்க”
ஆல்பத்தை பிரித்தான்.
சிறு வயது மதனின் புகைப்படங்கள் பக்கங்களை திருப்ப திருப்ப அணிவகுத்து வர ஆரம்பித்தன.
தெருவில் மண் பூசியபடி, குளித்தபடி, சிரித்தபடி, அழுதபடி, விளையாடியபடி என்று நிறைய படங்கள் இருந்தன. அடுத்து வந்த ஒரு படம் அவனது கவனத்தை பெரிதும் கவர்ந்தது. அந்த படத்தில் இளவயது மூர்த்தி டிவியை பார்த்த படி தரையில் அமர்ந்திருக்க, அவரது மடியில் தலை வைத்து ஒரு பக்கம் மதனும் இன்னொரு பக்கம் ப்ரியாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
“வெரி இன்டெரெஸ்ட்டிங் போட்டோ” விக்கி விசிலடித்தான்.
“யா….யா ” மதன் அந்த படத்தையே பார்த்து கொண்டிருந்தான்.பல வருடங்களுக்கு முன் அந்த படத்தை அவன் பார்த்திருக்கிறான் என்றாலும் இப்போது பார்க்கையில் அது ஒரு சம்திங் ஸ்பெஷல் போலவே தோன்றியது.
அப்போது மூர்த்தி சலவை துணிகளை ஏந்தியபடி உள்ளே வர “மூர்த்தி இங்க பாருங்க ” ஆர்வமுடன் அவரை அழைத்தான். அவர் டேபிளில் வைத்து விட்டு அருகே வரவும் படத்தை காண்பித்தான் .அதை பார்த்ததும் அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“என் பொண்ணுக்கும் உங்களுக்கும் அஞ்சு வயசு தான் வித்தியாசம் தம்பி. நீங்க இங்க வர்றப்ப தினமும் என் மடியிலே தான் படுத்து தூங்குவீங்க .ஒரு நாள் நீங்க வந்து என் மடியிலே படுத்து தூங்கிட்டீங்க. என் பொண்ணு நானும் படுத்துக்குவேன்னு ஒரே அடம் . சரினு இந்த பக்க மடியிலே படுக்க வச்சிக்கிட்டேன். அப்ப தான் அம்மா போட்டோ எடுத்தாங்க”.
“நீங்க எப்ப இந்த வீட்டுக்கு வந்தீங்க “விக்கி கேட்டான்.
“தம்பியோட அம்மா கல்யாணம் பண்ணிட்டு வரப்ப என்னையும் அவங்கப்பா வேலைக்கு அனுப்பி வச்சிட்டார் “
“சீர் வரிசை மாதிரி சொல்லுங்க” சிரித்தான்.
“இந்த குடும்பத்துக்காக உங்களோட உழைப்பு பாராட்டப்பட வேண்டிய விஷயம்”
“அதெல்லாம் ஒண்ணுல்ல தம்பி. நம்மளை நம்பறவங்களுக்கு நாம உண்மையா இருக்கணும். இருக்கேன்”
கௌரி பிரியா இருவரையும் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வரவும் படத்தை காண்பித்தார்.
பிரியா அந்த படத்தை ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்க மதன் ப்ரியாவை பார்த்து கொண்டிருந்தான். அதை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போல் படத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
திடீரென்று மூர்த்தி,” தம்பி ” என்று அலறினார்.
மதனோடு அங்கிருந்து.த அனைவரும் அதிர்ந்து போய் அவரை பார்த்தார்கள்.
“இந்த பேக் எங்கருந்துச்சி தம்பி” டீப்பாயிலிருந்த கருப்பு நிற பேக்கை கை நீட்டி காண்பித்தார்.
அவரது பதற்றம் கண்ட மதன் “ரூம்ல தான். ஏன் கேட்கறீங்க” என்றான்.
“இந்த பேக்ல தான் தம்பி உங்கப்பா பத்து லட்சம் பணம் வச்சிருந்தாரு.”
“அப்படியா”
“ஆமாம் தம்பி” என்றவர் அந்த பேக் திறந்து எல்லா டைரிகளையும் வெளியே எடுத்தார். அந்த ட்ராவல் பேகின் வெளியே இருந்த சிகப்பு நிற பெயிண்ட்டை காண்பித்தார் .
“ரூம் கதவுல இருந்த பெயிண்ட் பட்டு நான் அதை துடைச்சேன். உங்கம்மா கூட கத்தினாங்க துடைக்கிறேன்னு பெயிண்ட் கறையை மெழுகி விட்டுட்டேனு.”
” காலி பேகா தான் இருந்துச்சு. அதில் தான் டைரி, ஆல்பம் போட்டு எடுத்திட்டு வந்தோம்.”
“தம்பி நான் கொஞ்சம் ரூமை பார்க்கலாமா” அவசரத்திலிருந்தார்.
“கண்டிப்பா . விக்கி சாவி கொடு”
“நீங்களும் வாங்க தம்பி”
“விக்கிய வர சொல்றேன். நீ போடா “
அவர்கள் சென்றதும் கௌரி கண் கலங்கினாள். ” இத்தனை வருசமா திருட்டு பழிய சுமந்துகிட்டு திரியறாரு தம்பி” பிரியா அம்மாவின் தோள் தட்டி ஆசுவாசப்படுத்தினாள்.
சில நிமிடங்களில் இருவரும் திரும்பி வந்தார்கள்.
“பணம் அங்க இல்லை. ஆனா தம்பி இதுல தான் பணம் இருந்துச்சு.”
“பேக் மட்டும் இருக்கு பணம் இல்லேன்னா என்ன அர்த்தம். நீங்களும் ரூமுக்கு போகல. சம்திங் ராங். “
“நீங்க பார்த்து கண்டுபிடிச்சா தான் உண்டு” கண் கல்ங்கினார்.
மதன் யோசித்தான். ஒரு முடிவுக்குவந்தவனாக விக்கியிடம் சொன்னான்.”நம்ம மேனேஜருக்கு போன் போடு.” விக்கி செல்போனில் மேனேஜரை முயற்சித்தான்.
“மூர்த்தி. இந்த சம்பவம் எப்ப நடந்துச்சு”
“ஜூன் 5 ஆம் தேதி. 2010. கரெக்டா ஞாபகம் இருக்கு தம்பி.”
“எப்படி டக்னு சொல்றீங்க”
” அப்பா திருட்டு பழியை சுமக்க ஆரம்பிச்ச நாள் இல்லியா. எப்படி மறக்க முடியும்”
செல்போனை விக்கி தரவும், வாங்கிய மதன் ஸபீக்கரை ஆன் செய்து பேசினான். ” மேனேஜர் சார். எனக்கு ஒரு தகவல் தெரியணும். 2010 ஜூன் மாசத்துல எதுனா பணம் நம்ம நிறுவனத்துல வரவு வைக்கப்பட்டிருக்கா.”
சில விநாடிகள் மௌனம்.
“வைக்கபட்டிருக்கு சார்.”
“குட். எந்த தேதி”
மீண்டும் சில விநாடிகள் மௌனம்.
“9 ஆம்தேதி”
“எப்படி அது உள்ளே வந்துச்சு.யார் கொண்டு வந்து கொடுத்தா.”
“அப்பா தான் என் பெயர் போட்டு அக்கவுண்டல கட்டிடுனு கொடுத்தார்.கட்டிட்டேன்.”
“எங்கேருந்து வந்துச்சுனு சொல்லலியா”
அம்மாவோட அப்பா கொடுத்த பணம் னு சொன்னாரு. பொள்ளாச்சி போயிட்டு வர்றப்ப தான் இந்த பணத்தோட வந்தாரு. “
“சரி திரும்ப கூப்பிடறேன்” செல்போனை ஆப் செய்து சோபாவில் வைத்தான்.
மூர்த்தியை பார்த்தான். அவர் அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்தார்.
“பணம் திரும்ப வந்துடுச்சு. அப்பாடா. மருதமலை முருகா நீ என்னை காப்பித்திட்டே”
கை கூப்பினார்.
கண் கலங்கினார்.
கௌரியும் அழுதாள். “இப்படி வீண் பழிக்கு ஆளாகிட்டீங்களே”
” சரி. பணம் கிடைச்சத ஏன் முதலாளி சொல்லாம மறைச்சாரு” பிரியா அப்பாவிடம் சிடுசிடுத்தாள்.
“இப்ப வரைக்கும் திருடன்னு தானேம்மா சொல்லி காட்டிகிட்டு இருக்காரு” கௌரி அழுதாள்.
” தம்பி நான் திருடலேங்கிறதை மட்டும் ப்ரூப் பண்ணிடுங்க தம்பி.” யாசகம் கேட்பது போல் அழுதார்.
பிரியா அருகில் சென்று “அழாதீங்கப்பா”. என்றாள். கலங்கியிருந்த தன் கண்களை புடவை தலைப்பால் துடைத்து கொண்டாள். மதனை திரும்பி பார்த்தாள். நீ நடவடிக்கை எடுப்பியா இல்லே நான் எடுக்கணுமா என்பது போல் இருந்தது அந்த பார்வை.
மதன் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.
இந்த பக்கம் அப்பா இந்த பக்கம் ஒரு நல்ல வேலைக்காரர் இருவரையுமே விட்டு கொடுக்க முடியாது. இந்த சூழ்நிலைக்கு காரணமான அப்பாவின் மேல் கோபம் வந்தது.
மீண்டும் அவனுக்கு போன் வந்தது. மேனேஜர் தான் பேசினார்.
” சார். எதுக்காக பண விசயத்தை கேட்டீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா”
“ஒரு பிரச்னை வந்திருக்கு அதான்.”
“சார் இது விசயமா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமா.”
“சொல்லுங்க.” அவசரப்பட்டான்.
“அப்பா கிட்ட நான் சொன்னதா சொல்ல வேண்டாம்.”
“சொல்லுங்க.”
“சார். உங்க மாமா ஒருத்தர் இருக்காரில்ல. அம்மாவோட சித்தப்பா பையன்”
“ஆமாம். அவர் கூட இப்ப எங்களுக்கு பேச்சு வார்த்தையில்லே.”
“அவர் தான் பொள்ளாச்சி வீட்ல வச்சிருந்த பணத்தை எடுத்திட்டார். அது அவருகிட்ட இருக்கிறத கண்டுபிடிச்சு பணத்த வாங்கிட்டு அவரை உங்கப்பா வெளில அனுப்பிட்டார். அந்த பணம் தான் என்கிட்ட கொடுத்து கட்ட சொன்னார்.”
“அருமையான தகவல் சொன்னீங்க. நன்றி”
செல் போனை வைத்தான். மூர்த்தியை பார்த்தான். இடிந்து போனவராக அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.
“தம்பி முதலாளிய நம்பினேன். இப்படி பண்ணிட்டாரே”
“விடாதீங்கப்பா முதலாளிய கேளுங்க.”
“பிரியா அமைதியா இரு. தம்பி இருக்காப்பிலே. அவர் மனசு சங்கடப்படும்.” கௌரி சொன்னாள்.
” அதெல்லாம் பரவாயில்லம்மா. தப்பு செஞ்சது யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சி தானே ஆகணும்.” மதன் இப்படி சொன்னாலும் பிரியா சொன்னது அவனுக்குள் உள்ளூர உறுத்தியது. ஒரு முடிவெடுத்தான். அதன்படி ” பணம் கிடைச்சிருக்குனு சொல்லி அப்பா அம்மாவை வர சொல்டா” என்றான் விக்கியிடம்.
அவன் தயங்க, கொடு நானே பேசறேன் என்று செல்போனை அவனிடமிருந்து பிடுங்கி அம்மாவுக்கு போன் செய்தான்.
அம்மா காணாமல் போன பத்து லட்சம் கிடைச்சிருச்சு. உடனே அப்பாவும் நீங்களும் கிளம்பி வாங்க” பதிலுக்கு காத்திராமல் செல்லைக் கட் பண்ணிக் கீழே வைத்தான்
” உங்களுக்குரிய நியாயத்தை நான் கண்டிப்பா வாங்கி தரேன் மூர்த்தி. இத உங்க பொண்ணுக்காக செய்யல. என் மனசாட்சி சொல்படி செய்யறேன்”
பிரியாவை முறைத்தவாறே சொன்னான் மதன்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.