எழுத்தாளர் கணேஷ் பாலா
இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியைத் தெரியுமா?
இந்தியாவின் முதல் கோடீஸ்வரப் பாடகி இவர்தான். 10 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாயாக இருந்த காலத்தில் ஒரு பாடல் பதிவுக்கு 3 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் இவர். இன்றையப் பண மதிப்பில் பார்த்தால் ஒரு கோடி ரூபாய் ஒரு ரெகார்டிங்குக்கு. கிராமபோன் நிறுவனங்கள் இவரின் பாடலைப் பதிவு செய்து விற்று நிறையச் சம்பாதித்தார்கள்.
நகைப் பிரியரான இவர், வாழ்நாளில் ஒருமுறை அணிந்த நகையை மறுமுறை அணிந்ததில்லை என்றால் ஊகித்துக் கொள்ளுங்கள் செல்வச் செழிப்பை. கொல்கத்தாவில் வாழ்ந்த இவர், ஒருமுறை பாடல் ரெகார்டிங்குக்காக ஊர்விட்டு ஊர் செல்ல நேர்ந்தபோது இவருக்கென்றே ஒரு பிரத்யேக ரயில் ஏற்பாடு செய்து கூட்டிச் சென்றார்கள் என்பதை விஞ்சிய வியப்பு வேறென்ன இருக்கிறது?
ஆங்கிலேயத் தந்தைக்கும் ஆர்மீனியத் தாய்க்கும் பிறந்த இவருக்கு வைக்கப்பட்ட பெயர் எலைன். இவரது 6ம் வயதில் பெற்றோர் விவாகரத்துச் செய்து கொண்டனர். எலைனின் தாயான விக்டோரியா மகளை பெனாரசுக்கு அழைத்துச் சென்றார். அங்கே தன் காலத்தின் மிகச்சிறந்த இசை மற்றும் நடன மாஸ்டர்களிடம் பாடலும் நடனமும் கற்றுக் கொண்டார்.
1883ல் கொல்கத்தா திரும்பிய பின்னர் எலைனின் பெயரை கௌஹர் ஜான் என்று அவரின் அம்மா மாற்றினார். அதன்பின் இசைத் துறையில் நுழைந்த கௌஹர் ஜானுக்குக் கிட்டியவைதான் மேற்சொன்ன சிறப்புகள் எல்லாம்.
1902-ல் இருந்து 1920-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், கௌஹர் ஜான் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 பாடல்களைப் பதிவு செய்தார்.
என்ன இருந்து என்ன..?
நம்மூர் தியாகராஜ பாகவதரைப் போலத் துறையில் உச்சம் தொட்டுக் கோடீஸ்வரராக இருந்த கௌஹர் ஜான் இறுதிக் காலத்தில் பணமின்றி ஏழ்மையில் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
One comment on “தெரிந்து கொள்வோம் : எலைன் @ கௌஹர் ஜான்”
rajaram
வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த மனிதர்களை பார்த்தும், படித்துமே பேராசையில் உழலும் மனித வாழ்வு.