இராஜாராம், அபுதாபி
தரையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்து ‘பவி சாப்பிட வா… மெதுவா எந்திரிச்சு கைய கழுவிட்டு வா’ என்றாள் அவளின் அம்மா மீனா.
இரு உதடுகளையும் உள்பக்கமாக மடித்து இடதுகையை மெதுவாக அதே சமயம் பொறுப்பாக ஊண்டி எழுந்தாள் ஏழரைமாத கர்ப்பிணியான பவித்ரா.
எழுந்து சற்றே நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையைக் கழுவிவிட்டு டைனிங் டேபிளில் போய் அமர்ந்தவள் ‘ஏம்மா நீ சாப்பிடலயா..?’ எனக் கேட்டதும் ‘நா சாப்பிட்டேன்.’ என்றாள் மீனா.
‘எப்போ..?’
‘இப்பத்தான்… நீ டிவி பாத்துகிட்டே இருந்தே… கூப்பிட்டாலும் இந்தா இந்த நாடகம் முடியட்டும்பே… அதான் நான் சாப்பிட்டேன்..’
‘அப்பா இன்னும் வரலையா..?’
‘ஒங்கப்பா வர லேட்டாகுமாம்… நம்மல சீக்கிரமாச் சாப்பிட்டுப் படுக்கச் சொன்னாரு…’ என்றவளைக் கேள்விக்குறியோடு பார்த்த பவித்ராவிடம் ‘அட இப்பதேன் போன் பண்ணுனாரு… போன வேல முடியலயாம்… வரட்டும். நீ சாப்பிடு’ என்று சொல்லிக்கொண்டே டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்தாள் மீனா.
சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றி அவளைச் சாப்பிடச் சொல்லிவிட்டுப் பக்கத்தில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘என்னம்மா அப்படிப் பாக்குறே…?’ என்றவளிடம் ‘இல்லடி… முகமெல்லாம் சோபை இழந்து போயிக் கிடக்கு’ என்றபடி அவளின் நெற்றி முடியை ஒதுக்கி விட்டாள்.
பவி சாப்பாடு போதும் என்று சொன்னதும் மீதமிருந்த சோற்றையும் குழம்பையும் வீட்டின் கொல்லைப் பக்கத்தில் வெட்டி வைத்திருந்த குப்பைக் குழியில் கொட்டி, அதை மண்வெட்டியால் இழுத்து மூடிக்கொண்டிருந்தாள் மீனா.
அப்போது வீட்டிற்குள் இருந்து ‘அம்மா’வென அலறல் சத்தம் கேட்டது…

அது பவித்ராவிடமிருந்து எழுந்த உயிர்போகும் அலறல்.
நடந்தது என்னவென்ற கணித்த மீனா, குழியை மூடுவதில் தனது கவனத்தைச் செலுத்தியபடி அக்கம்பக்கம் பார்வையை ஓடவிட்டு யாரும் பார்க்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டு மெதுவாக வீட்டிற்குள் சென்றாள்.
எல்லோரின் வீட்டிலும் இரவு நேரங்களில் பீடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களால் பவியின் அலறல் கேட்க வாய்ப்பே இல்லை என்பது மீனாவுக்குத் தெரியும். அதற்காகத்தானே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பிடுங்கி எறிந்த தூக்கணாங்குருவி கூடாய் கீழே கிடந்தாள் பவி.
வாயில் கசப்பை உணர்ந்தவளாய் ‘என்னம்மா பண்ணுனே…!’ என்று கருவிழி மேலே சொருக கேட்ட பவி, ‘தண்…ணீ’ என்று கோபம் கலந்த குரலில் கண்ணீரோடு அதட்டி கேட்டாள்.
அதைக் கேட்காதவள் போல ‘நான் பெத்த மகளே பவி என்னை மன்னிச்சிருடி..’ என்று சொல்லிவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். ஆனால் பவியின் குரலோ ‘தண்ணி எடுடி முண்ட…’ எனக் கூடுதல் அதட்டலுடன் வருகிறது.
மீனாவோ டிவியின் சப்தத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கினாள். அக்கம்பக்கம் பவியின் அலறலை கேட்காமலிருக்க..!
தண்ணீரைக் கொடுக்காமல், மகள் துடிப்பதை பார்க்க மனமின்றி வீட்டிலிருக்கும் பூசையறையை நோக்கி ‘அய்யா…எங்களுக்கு ஏன்? இந்தச் சோதனை’ என்று அழுதாள் மீனா.
பவி தரையில் கிடந்து துடித்தபடி ‘அடியே சண்டாளி… அங்க என்னடி ஒப்பாரி வைக்கிற… தாகமாயிருக்கு தண்ணியக் கொண்டாடி…’ என்று கூச்சலிட்டாள்… கதறினாள்.
‘எந்தாலியக் காப்பாத்த வேற வழி தெரியலடி பவி, நாச்சியா என்னை மன்னிச்சிருடி… நீ சாகலன்னா நொப்பன் நாண்டுகிட்டு நிண்டு செத்துப்போவேன்னு சொல்லிட்டாண்டி… நா என்னடி செய்யிறது…’ என்று சப்தமாய் அழுதபடி சொன்னாள் மீனா.
சற்றே சோகமான உலர்ந்த அந்தக் கடைசிச் சிரிப்போடு ‘அடிப்பாவி ஏ வயித்துல இருக்குற புள்ளகூட ஒங்க கண்ணுல தெரியலயா… நாந்தான் நீங்களும் வேணாம், ஒங்க சொத்துசொகமும் வேணாம்னு கண்கானாத எடத்துக்குப் போயிட்டனே…. என்னயும், எம்புருசனயும் ஏமாத்திக் கூட்டியாந்து இப்படி நம்பிக்க துரோகம் பண்ணீட்டீகளே… நல்லாயிருப்பியளா…’ எனக் கத்தினாள் பவி.
நேரம் ஆக ஆக கழுத்தை யாரோ கயிறு கொண்டு இறுக்குவது போல உணர ஆரம்பித்த பவி, தனது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருப்பதைக் கண்டு கொண்டாள். கண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.
‘எம்புருசன் அப்பவே அங்க போவேணாம்னு சொன்னானே…! பாவி நாங் கேக்கலயே… அப்பனாத்தா பாசம்ன்னு உருகினேனே…’ என்று சொல்லிக்கொண்டே தலையில தலையில அடித்துக் கொண்டாள் பவி.
இனி இதில் செய்ய ஒண்றும் இல்லை என்பது தெரிந்த நிலையில் அம்மாவிடம் கடைசிக் கோரிக்கை ஒன்றை வைத்தாள்.
‘பாழாப்போன ஓலகத்துல, இந்தச் சாதியில பொறந்த பாவத்துக்கு என்னயக் கொன்னுட்டிங்க… பாவம் எம்புருசன்… அவரயாச்சும் நிம்மதியா வாழ விட்ருங்க… அவர ஒண்ணும் பண்ணிராதீக…’ என மரணத் தருவாயிலும் கையெடுத்துக் கும்பிட்டுத் தன் கணவனுக்காக மன்றாடினாள்.
அப்போது பவியின் மொபைல் அடிக்கிறது.
அத்தொடுதிரையில் அம்மா என்ற அழைப்பு தெரிய…
அதை மீனாவே எடுத்து ஸ்பீக்கரை ஆன் பண்ணி ‘அலோ’ என்று சொல்வதற்குள் ‘பவிமா என்னப் பெத்தவளே எம்மயன வெட்டி சாச்சுட்டாய்ங்களே…’ என்ற அலறல் எதிர்முனையில் கேட்டது.
அந்த அலறலை கேட்கும் முன்னே இங்கேயும் அடங்கி போயிருந்தது அந்த நிறைமாத ஆத்மா!
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment
kumarAuthor
சிறப்பு இராஜாராம்.
தொடர்ந்து எழுதுங்க.