நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
எப்படி உருவாகிறது லஞ்சம்..?
மற்ற நாடுகளில் எல்லாம் வேலையை செய்யாமலிருக்க லஞ்சம் வாங்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வேலையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற வசனம் இந்தியன் படத்தில் வரும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா நம் அரசின் அவலத்தை இவ்வாறு நக்கலாக எழுதி கிண்டலடித்திருப்பார்.
உண்மைதான். நமது நாட்டில் வேலையை செய்வதற்கு சம்பளம் மட்டும் போதாது. அன்பளிப்பும் வேண்டும். அதாங்க லஞ்சம், நாசுக்காக அன்பளிப்பு என்று அழைக்கப்படுகிறது.
எனக்கு அறிமுகமான பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘மாசம் சம்பளம் முப்பதாயிரம் வருது, ஆனா இப்படி மாசாமாசம் ஒவ்வொரு தினமும் ஏதாவதொரு மேல் வரும்படி இருந்தாதான் பொழுதே ஓடுது. முன்னெல்லாம் இப்படி மேல் வருமானமே ஒரு நாளைக்கு ஐநூறு ஆயிரம்னு கிடைக்கும் இப்ப அதுலையும் மண் விழுந்து போச்சுங்க’ என்று புலம்பினார்.
அவரது புலம்பலுக்கு காரணம் அப்போதெல்லாம் கம்பி வழி இனைப்புகள் என்பதால் அடிக்கடி ஒயர் அறுந்து பழுதாகி நின்று விடும் டெலிபோன். சரி செய்ய கூப்பிட்டால் ஆளுக்கு தகுந்தபடி பணம் வசூலித்துக் கொண்டு சரிசெய்ய வருவார்கள். பணம் கொடுத்தால் தானே வருகிறார்கள் என்று மக்களும் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்தார்கள். பின்னர் கேபிள் என்று வயரை குழி தோண்டி புதைக்கவும் இவர்களது வருமானம் குறைந்தது.
விஞ்ஞான வளர்ச்சியில் செல்போன்கள் வர டெலிபோனின் மவுசு குறைந்தது. இண்டெர்நெட் இணைப்புக்கு மட்டுமே டெலிபோனை நாடினார்கள் இப்போது அதிலும் மண்! கம்பியில்லா இணைய சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்க ஆரம்பித்து விட்டது. இதனால் தான் அந்த நபர் இப்படி மனம் வருந்தி கூறினார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு?
ஒரு காரியம் ஆகவேண்டும் அதுவும் உடனடியாக ஆக வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதற்காக அந்த அலுவலரிடம் அன்பளிப்பாக நாமே பணத்தை நீட்டுகிறோம்.
வலிய வந்த சீதேவியை அவர் விடுவதில்லை! பெற்றுக் கொள்கிறார். அடுத்த முறை அவரே கேட்கிறார். பின்னர் அது கட்டாயமாக ஒன்றாக ஆக்கப்படுகிறது. எங்கெங்கு காணினும் லஞ்சம் இதன் பின்னனியில் இருப்பது சராசரி பொது ஜனங்களான நாமேதான். தவறு என்று தெரிந்தும் தட்டிக் கேட்க தயங்குவதும், நம்முடைய வேலை ஆனால் போதும் என்ற நினைப்பதும் கொடுக்காவிட்டால் வேலை நடக்காது என்று பயப்படுவதும் இப்போது மக்களிடையே காணப்படும் முக்கியமான காரணிகளாகும்.
அரசும் மக்களுக்கு இலவசங்களை அள்ளித் தெளித்து அடிமுட்டாளாகவே வைத்திருக்க விரும்புகிறது. ஓர் அரசு அடிப்படை கட்டமைப்புக்களை உருவாக்கி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதை விட்டு இலவசம் என்ற போர்வையில் லஞ்சத்தை ஊக்குவிக்கிறது. இது தேர்தலிலும் எதிரொலிக்கிறது. ஓட்டுக்கு பணமும் பொருளும் வழங்கப்படுகிறது.
ஜெயிச்சு வந்தா சம்பாதிக்க போறான் இல்லே கொடுக்கட்டுமே என்று வாக்குக்கு பணம் வாங்க நியாயப்படுத்திக் கொள்வதுடன் பணம் வாங்கி விட்டோமே என்று தகுதி இல்லாதவர்களையும் தலைவர்களாக தேர்ந்தெடுத்து தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்கிறான் இன்றைய தமிழன்.
புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் கூட ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் அது உங்கள் பணம் தான் என்கிறார்காள், ஆனால் ஓட்டை எனக்கு போடுங்கள் என்றும் கேட்கிறார்கள். பணம் கொடுத்தபின் ஓட்டை எப்படி பணம் கொடுக்காதவருக்குப் போடுவார்கள். இவர்கள் தோற்றுவிட்டாலோ பணநாயகம் வென்று விட்டது என்று புலம்புகிறார்கள்.
இலவசம் என்று அரசு நமக்கு தருவது லஞ்சமே இதை அறியாத நாம் நமக்கு இன்னும் டிவி தரலை… மிக்சி தரலை… ஆயிரம் ரூபாய் தரலை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறோம். இப்படியே நாம் சென்றால் இன்னும் சில நாளில் இலவசம் என்று எல்லாவற்றையும் கொடுத்து நாட்டு வளங்களை சுரண்டிக் கொள்வார்கள் அரசியல் வாதிகள். அவர்களுக்கு வேண்டியது உங்கள் வாக்குதானே தவிர உங்கள் வாழ்க்கை தரமோ நலனோ அல்ல. இனியாவது யோசித்து பாருங்கள்! நாமே லஞ்சத்தை உருவாக்கலாமா? விழித்தெழுங்கள்!
இறுதியாக ஒரு சுவையான சம்பவம் ஒன்றைக் கூறி நிறைவு செய்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் கல்யாண மண்டபம் ஒன்றில் குமாஸ்தாவாக இருக்கிறார். அவர் வரி கட்ட பஞ்சாயத்து ஆபிஸிற்கு சென்று இருக்கிறார். அது ஒரு பெரிய பஞ்சாயத்து பல்வேறு பேர் பல்வேறு விசயங்களுக்காக வந்து காத்து இருந்தனராம். இவரும் வரிசையில் காத்திருந்து உள்ளே சென்று இருக்கிறார்.
கிளர்க் இவரிடம் நீங்கள் மூன்று வருடத்திற்கு வரி கட்ட வேண்டி உள்ளது. மண்டபம், அரிசி ஆலை, வணிக வளாகம் என மூன்று பிரிவுகளில் வரி செலுத்தவேண்டி உள்ளது. இவ்வளவு தொகை வருகிறது. நீங்கள் இவ்வளைவையும் செலுத்தாமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன் ஆனால் எனக்கு ஒரு பத்தாயிரம் தருகிறீர்களா என்று பேரம் பேசி இருக்கிறார்.
நம் நண்பர் பலே பேர்வழி என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்? மூன்று வருடத்திற்கு என்றால் அதிகமாக வருகிறது ஒரு வருடத்திற்கு மட்டும் கட்டுங்கள் போதும் அதற்கேற்றபடி நான் மாற்றிக் கொள்கிறேன் என்று சொன்னாராம் கிளர்க்.
நம் ஆள் சொன்னாராம்,மண்டபத்திற்கு ஒரு ஆண்டு வரி என்ன? அரிசி ஆலைக்கு ஒரு ஆண்டு வரி என்ன ? வணிக வளாகத்திற்கு ஒரு ஆண்டு வரி என்ன? சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
அவர் ஒரு தொகை சொல்ல அவ்வளவு தானே அப்போது மூன்று ஆண்டுக்கு எப்படி இவ்வளவு தொகை வரும் மூன்று மடங்குதானே வர வேண்டும் பெரிய தொகை எப்படி வரும்? என்று மடக்கியுள்ளார்.
கிளர்க் வியர்த்து வழிந்துள்ளார்.
அ.. அது என்று இழுத்துள்ளார்.
உனக்கு ஏன் நான் பத்தாயிரம் தரவேண்டும்..? இப்போது சொன்ன தொகைக்கு பில் போடு தாமத கட்டணம் எவ்வளவோ அதையும் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கான தொகை எவ்வளவோ அதை பில் போடு என்று கேட்டு கட்டிவிட்டு திரும்பி உள்ளார்.
இப்படித்தான் ஆரம்பிக்கிறது லஞ்சம்! அவர் கேட்ட பத்தாயிரத்தை கொடுத்திருந்தால் உடனடியாக வேலை முடிந்திருக்கும். அரசாங்கத்திற்கு உண்மையாக சேரவேண்டிய பணம் போயிருக்காது. இதில் இன்னோரு விசயம் என்னவென்றால் உண்மையாக இவர் செலுத்தவேண்டிய தொகை இருபத்தையாயிரம் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வந்துள்ளது. இவர் மட்டும் ஏமாளியாக இருந்திருந்தால் கிளர்க் அன்று கொண்டாடி இருப்பார்.
நம் வீடுகளில் கூட மீட்டர் ரீடிங் எடுக்க வருபவரிடம் குறைச்சு எழுதிக்கப்பா என்று டீ செலவுக்கு பத்தோ இருபதோ நீட்டுகிறோம். அவரும் டீக்கு ஆசைப்பட்டு எழுதிக் கொள்கிறார் மானிய மின்சாரம் இப்படி திருடப்படுவதால் இன்று படுகிறோம் பாருங்கள் அவஸ்தை… அதை எல்லாருமே அனுபவித்திருப்போம் என்றே நினைக்கிறேன்.
ஆகவே மக்களே விழிப்பாயிருங்கள்..! விபரமாயிருங்கள்..!!
இது நம் நாடு…
இது நம் வளம்…
இதை நாம் திருடலாமா? சிந்தியுங்கள்..!
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து