அழகுராஜா
மதுரையில் இருந்து தேனி ,திருமங்கலம் வழியாகத் திண்டுக்கல் செல்லும் சாலையின் மத்தியில் உள்ள ஊர் ‘செக்கானூரணி’.அந்த ஊர் மக்களின் வாழ்வியலை ‘மஞ்சள் நிற ரிப்பன்’ என்னும் சிறுகதை நூலில் சொல்லி இருந்த இயக்குனர்,கவிஞர்,எழுத்தாளர் திரு.ஏகாதசி அவர்கள், தற்பாது செக்கானூரணி அருகில் இருக்கும் பன்னியான் கிராமம் கதை களமாக வைத்து இந்த சைக்கிள் நாவலை எழுதி உள்ளார்.
ஏன் பன்னியானைக் கதைக்களமா வைத்து இந்த நாவலை எழுதி இருக்கார்ங்கிற எண்ணம் ந,மக்குள் எழும் என்பதை மனதில் வைத்து ’22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும் போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். அப்படியே எனக்குள் தங்கியும் விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள். ஒரு வேளை எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் இந்தச் சென்னைக்குள் அவர்கள் எங்கு போவார்கள்,அதற்காகத்தான் அவர்களையும் அவர்களின் வாழ்வையும் ஒரு நாவலாக எழுதிவிட எண்ணினேன்.’ என நாவலின் ஆரம்பித்திலே சொல்லிவிடுகிறார்.
தான் பிறந்த ஊரைக் கதைக்களமாக வைத்து எழுதியது சரிதான் ஏன்னா இப்போது கதைகள் சொல்பவர்களும் குறைவு கேட்டபவர்களும் குறைவு. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் பிறந்த மண்ணையும் மக்களையும் புத்தகத்துக்குள் கொண்டு வந்து விட்டாச்சுன்னா இனி வரும் தலைமுறை முன்னோர்களைப் பற்றியும் ஊரைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியுமல்லவா..?
சரி வாங்க சைக்கிளில் பயணிப்போம்.
கதைக்குள் கொஞ்சம் விரிவாப் போனா வாசிக்கிறவங்களுக்கு முழு கதையும் தெரிஞ்சிடும், பின்னர் வாசிக்கும் போது ஒரு சுவராஸ்யம் இருக்காது. அதனால முடிஞ்ச வரை கதையைச் சுருக்கமா எழுதி ரசித்ததை நீளமா எழுதி உள்ளேன்.
இருபத்தாறு வயதில் கொலைகாரப்பட்டம் பெற்று ஆயுள் தண்டனை முடித்து வந்த கணேசன் சைக்கிளில் மன்னிப்பு கேட்க விக்கிரமங்கலம் நோக்கிச் செல்ல, பழைய நினைவுகள் அவனை அழுத்த, மெல்ல அதில் மூழ்குகிறான்.
பதிமூணு வருசமாக் கும்பிடாம இருந்த கோயில்ல அந்த வருஷம் திருவிழா சிறப்பா நடக்குது.திருவிழாவில் கணேசனுக்கும் பூமயிலுக்கும் காதல் மலர்கிறது. சிறு வயதிலே கணேசன் அம்மா இறக்க மறுமணம் செய்து கொண்டார் கணேசன் அப்பா.
பன்னியானுக்கு வரும் வேப்பமுத்து வாங்கி விற்கும் வியாபாரி தங்கையா, பாத்திர வியாபாரி அய்யாவு, ஐஸ் விற்கும் பவுன்ராஜ், வளையல் வியாபாரம் செய்யும் சீனி என இவர்கள் எல்லாரும் கணேசனுக்கு நண்பர்கள், உறவினர்கள்.
சித்தி அனிதாக்கும் கணேசனுக்கும் எப்ப பாரு சண்டை ஒரு நாள் வாய்ச்சண்டை கை கலப்பாக மாற, வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதன் பின் பிரசிடெண்ட் வெள்ளத்துரையிடம் பேசி, அவனுக்கு ஒரு வேலையை வாங்கிக் கொடுக்கிறார் தங்கையா. கிட்டத்தட்ட வெள்ளை வேட்டி வெள்ளச் சட்டையில் அவர் கூடவே இருக்கிற அடியாள் வேலைதான் அது.
பூமயில் அப்பா பிச்சைக்கும் வளையல் வியாபாரி சீனிக்கும் சிறு சண்டை வர, வஞ்சகம் வச்சு இந்த வியாபாரிகளை ஊருக்குள் வராமல் தடுக்க பிரசிடண்ட் வெள்ளைத்துரையை நாட அதுக்கு கை மாறா பூமயிலை எதிர்பார்க்கிறார் வயதான சபல மனம் கொண்ட பிரசிடெண்ட்..
சில நிகழ்வுகளுடன் இதையும் பார்த்த கணேசன் சரியில்லாத ஆள் கூட இருந்தது தப்புன்னு நினைச்சு வெள்ளைத்துரையிடம் வேலைக்குப் போவதை நிறுத்திவிடுகிறான். தன்னுடன் படிச்சவன் தன் தங்கை மகள் பூமயிலை கட்டிக்க ஆசைபடுவதா எனப் புத்தி மாறிப் போயி சுத்துறான் பிச்சை. அவன் போற பாதை சரியில்லன்னு
கணேசனுக்காக தன் தங்கை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் சமுத்திரம்.
நீயே ஏ வீட்டுல ஓசிக்கஞ்சி நீ ஒரு ஆளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு வர்றே எனக் கோபமாகப் பிச்சை சமுத்திரத்தை பார்த்து திட்ட, முடிஞ்சா சரியான ஆம்பளைய இருந்தா கழுத்து நிறைய நகையைப் போட்டு என் மகள கூட்டிக்கிட்டுப் போகட்டும் என்று சவால் விட, அதை ஏற்றுக்கொண்ட கணேசன், தன் சொத்தைப் பிரித்துக் கேட்க, முடியாதெனக் கைவிரிக்கிறார் அவனின் அப்பா முத்துக்கண்ணன்.
சரி உறவாவும் நட்பாகவும் இருக்கும் வியாபாரிகளிடம் உதவி கேட்கலாம் என முடிவு செய்கிறான் கணேசன்.
கணேசனுக்கு உதவி கிடைத்ததா..?
பூமயிலைக் கல்யாணம் செய்தானா..?
அவனின் நிலை என்ன..?
என்பதைச் ‘சைக்கிள்’ நாவல் விறுவிறுப்பாய் சொல்லியிருக்கிறது.
வாசிக்கும் போது இறுதி பக்கத்தை நெருங்க நெருங்க மூச்சடச்சிப் போயிட்டேன். கை,கால் நடுங்குது. அவ்வளவு ஏன் இறுதியில் அழுகையை வந்திடுச்சு, அப்படி அழுகலைன்னா நிச்சயம் நெஞ்சு அடச்சு செத்திருப்பேன். ஏன்னா கொலை செய்தவன், கொலையால் இறந்த குடும்பம் பட்ட கஷ்டங்களை இப்படி விரிவாக யாராலும் எழுத முடியாது. நேரில் பார்த்தவன் யாராக இருந்தாலும் இந்த சைக்கிளை வாசிச்சு வைக்கிறப்ப அழுதே தீருவான்.
முதலில் ஆசிரியர்க்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் சொல்லி விடுகிறேன். எதுக்குன்னா சில காலம் வரை ஊருக்கு வியாபாரம் செய்ய வருபவர்களை வியாபாரியாப் பார்க்க மாட்டாங்க தன் வீட்டில் ஒருவராத்தான் பார்ப்பாங்க.
தன் வீடா இருக்கட்டும் இல்ல வியாபாரிகளின் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு நட்பையும் தாண்டி உறவினராக மாறியவர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள். அப்படி ஊருக்கு வரும் வியாபாரிகளைக் கதை நாயகர்களாக வைத்து எழுதி மீண்டும் பழைய நினைவுகளை ஞாபகச் சுவற்றில் விழித்தெழ வைத்துவிட்டார் ஆசிரியர்.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த சைக்கிள் சம்பவங்கள் உணர முடியுமான்னு தெரியல ஆனா கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போது நகரத்தில் வாழ்பவர்கள் சைக்கிளை வாசிக்கிறப்ப அதை உணர முடியும். திருவிழா கூட்டத்தில் நடக்கும் நக்கல், நைய்யாண்டி இருக்கட்டும். கணேசன் பூமயில் காதல் பகுதிகளாக இருக்கட்டும் புத்தகம் வாசிக்கிறோமா இல்லை கதை நடக்கும் ஊரில் இருக்கிறோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி..
என்னால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் “வேப்பமுத்து விற்கும் தங்கையா மனைவி பொன்னுத்தாயி, ஜெயலட்சுமி அக்கா இருவரும்தான்.
தன்னிடம் யாரும் பேசமாட்டாங்களான்னு காத்திருக்கும் ஊனமுற்ற ஜெயலட்சுமிகளும், பகை மறந்து வீட்டுக்கு வந்தவர்களுக்கு முதலில் கஞ்சி ஊத்தும் பொன்னுத்தாயிகளும், இன்னும் பல கிராமங்களில் வாழத்தான் செய்கிறார்கள்.
மலைன்னு சொன்ன உடனே நமக்கு ஞாபகம் வரது மரங்கள், காட்டு விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், ஆடு மாடு மேய்க்க, இலை தழை அறுக்க, விறகு வெட்ட, வனவிலங்குகளை வேட்டையாடப் போகும் மனிதர்கள். இவைதான் நமக்குச் சட்டுன்னு ஞாபகத்தில் வரும் ஆனா இதையும் தாண்டி சில விஷயங்கள் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும். நாம் அதை அறிந்திருக்க மாட்டோம், அல்லது அறிய விரும்பமாட்டோம். அதையும் விரிவாக ஆசிரியர் எழுதி இருக்கிறதை வாசிக்கிறப்ப கோழி இறகால் காதைக் குடையிறப்போ, இடுப்பத் தொட்டா ஒரு கூச்சம் வரும் பாருங்க அது மாதிரி கிளு கிளுப்பு.
இளவயது ஆண்கள் கள்ளிப் பொதருக்குள் போய் மறைந்திருந்து கீழ் சவரம் செய்வதும். மரத்தூர்களின் இடுக்குகளில் பெண்கள் தூமைத் துணிகளைச் செருகி வைப்பதும் காதல் காம அரங்கேற்றமும் கூட நடக்கும் மலைகளில்… அதைக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். சிலருக்கு இது கவுச்சி ஆனா எல்லாத்தையும் ரசிப்பவனுக்கு இது பேரழகு.
என் சிந்தனைகளும், ரசனைகளும் நான் வாசிக்கும் புத்தக ஆசிரியர்களுடன் சில இடங்களில் ஒத்துப்போகும். அப்படியான ஒரு ஒற்றுமையை இதில் பல இடங்களில் கண்டுகொண்டேன். ரசித்தேன்.
மனதில் நின்றவை:
- அந்தக் குரலின் பசிக்கு உலகில் யாரிடமும் பதிலில்லை. இறந்த தாய்தான் எழுந்து வர வேண்டும்.முதலில் தாய் சாகக் கூடாது. தாய் வயது முற்றிய பின் சாகலாம், இல்லையென்றால் தாய் மகன் வயது முற்றிய பின் சாகலாம். இதைக் கூட வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 12 வயதில் ஒருவன் தாயை இழப்பதென்பது மரணத்தினும் கொடுமை.
- ஓர் இரவு விடிந்து எழும் மனிதனுக்கு அது தாயின் கருவறையிலிருந்து வெளிவந்தது போல் நிகழ்ச்சி நிரலற்ற வெற்று மனதாக இருத்தல் பெரும் சுகம்.
- நீ காந்தி மாதிரியே பேசிக்கிட்டே திரி… எந்தக் காலத்திலும் நம்ம ஊருலருந்து ஒருத்தன பெரசண்டா ஆக விட மாட்டாய்ங்க, மாயாண்டிக்கு மாத்தி ஓட்டுப் போடணுமின்டு மக்களே நெனச்சாலும் நிக்கிறவய்ங்க சத்தியத்த வாங்கி வச்சிக்கிட்டு மெரட்டும் போது சனம் என்னா செய்யும். அடிதடிக்குப் பயந்து களவாணிப்பய கஞ்சாக் குடிக்கிற பயல்களுக்கெல்லாம் ஓட்டப் போட்டு ஊரு கெட்டு குட்டிச் செவராகப்போகுது.
- இந்த பூமியே ஒரு சங்கிலித் தொடர்தான் ஒருவரின் உழைப்பு , சுரண்டல் வர்க்கத்தால் உருமாற்றம் செய்யப்பட்டுப் புன்னகையோடு வாசல் கடக்கிறபோது நாம் ஏமாற்றப்படுகிறாம்.
- கடைக்கோடி குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு கோவணம் கட்டிய மனிதரின் ஓட்டுக்கும் ஒரு நாட்டின் பிரதமருக்கும் தொடர்பிருக்கும் போது. பணக்காரர்களின் விலை உயர்ந்த ஒயினுக்கும் மிகக்குறைந்த கூலிக்குக் கணக்கற்ற மணி நேர உழைக்கும் ஏழைகளின் வியர்வைக்கும் எப்படித் தொடர்பில்லாமல் போகும்.
இந்த நாவல் மேற்கூறிய விசயங்களுக்குத் தீர்வு சொல்லுமா என்றால் இல்லை. காயங்களை மட்டுமே நமக்குக் காட்டும் அதற்கான காரணங்களை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
நாகமலையின் மூலிகைக் காற்று அந்த ஊர் மக்களை மருத்துவமனைக்குச் செல்ல அவசியமற்றவர்களாக வைத்திருக்கிறது. ஆனாலும் மனித வாழ்வின் சூதாட்டத்தில் ஒரு குடிகாரனின் பிணமோ ஓர் அபலைப் பெண்ணின் பிணமோ எப்போதாவது கண்டெடுக்கப்படும் அம்மலை தலை துண்டிக்கப்பட்ட நாகப்பாம்பின் பேருடலாய்க் காணப்படும். அதை இந்நாவல் நன்றாக வெளிப்படுத்தி இருகிறது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment on “புத்தகப் பார்வை : சைக்கிள்”
rajaram
விமர்சனமே, புத்தகத்தை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. கேலக்ஸி நிறுவனத்திலேயே ஒரு புத்தகத்தை ஆர்டர் செய்து விடுகிறேன்.