ஆர்.வி.சரவணன்
முன்கதை:
நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவின் குடும்பத்தைச் சந்தித்த மாதவன், மீராவுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. அவர்களின் சண்டைக்குப் பின் சமாதானமாகப் போக நினைத்தவனிடம் அவள் சில கேள்விகளை முன் வைக்க, சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல்ல ஆரம்பிக்கிறான்.
—–
இனி…
தீடீரென்று மீராவின் குடும்பத்தை தன் அறை வாசலில் பார்த்ததும் அதிர்ச்சியான மாதவன் இவர்கள் ஏன் இங்கே வந்தார்கள்? அதுவும் நாம் கிளம்பும் நேரம் பார்த்து வந்திருக்கிறார்கள். விசயம் தெரிந்து போய் விட்டதோ..? அப்படியெனில் இவர்களை எப்படி எதிர்கொள்வது என்று யோசனைகள் மனதில் ஒவ்வொன்றாய் தோன்ற கொஞ்சம் தடுமாறினான்.
பின் ஒருவாறு தன்னைச் சரி செய்து கொண்டு, “வாங்க” என்று கூப்பிட்டான்.
அவன் சொல்லுக்கு காத்திருந்தது போல் உடனே மீராவின் அப்பாவும் அம்மாவும் உள் நுழைய, கூடவே மீராவின் தங்கைகளும் நுழைந்தார்கள். மீராவின் தங்கைள் காவ்யா, திவ்யா இருவரையும் ஏற்கனவே கோவிலில் மீராவோடு பார்த்திருக்கிறான். நெருங்கி ஏதும் பேசி பழக்கமில்லை.
“உட்காருங்க” என்று தன்னிடம் இருந்த ஒரே சேரை ராஜனிடம் காட்டி உட்கார சொன்னான்.
“நாங்க உட்கார்றதுக்கு வரல” மீராவின் அப்பா ராஜன் குரலில் கடுகடுப்பு.
பின்ன எதுக்கு வந்தீங்க என்று கேட்க தோன்றியது என்றாலும் கேட்காமல் அப்படியே நின்றான்.
“என் பொண்ணை எங்க கிட்ட விட்டுடுனு கேட்க தான் வந்திருக்கோம்” மீராவின் அம்மா சொன்னார்.
மாதவன் மீராவின் தங்கைகளை பார்த்தான். அவர்கள் இவனையே முறைத்து பார்த்தபடி நின்றிருக்க, அவர்களை வைத்து கொண்டு எப்படி பேசுவது என்று தயங்கினான்.
இதை கவனித்த மீராவின் அம்மா, “அவங்களும் இருக்கட்டும். காதல்ங்கிற ஒரு சாக்கடையால பெத்தவங்க என்ன கஷ்டப்படறாங்கனு அவங்களும் தெரிஞ்சிக்க வேணாமா” என்றாள்.
“காதலை ஏங்க கொச்சைபடுத்தறீங்க” மாதவன் மெல்லிய குரலில் சொன்னான்.
” உனக்கு அது சந்தனமா தொணிச்சின்னா தாராளமா அள்ளிப் பூசிக்க. என் குடும்பத்துக்கு அது வேண்டாமே ” மீராவின் அம்மா ஒரு சண்டைக்கு தயாராகி வந்தவள் போலவே பேசினார்.
“எப்படியிருந்தாலும் உங்க பொண்ணுக்கு ஒரு மாப்பிளை பார்க்க போறீங்க இல்லியா. அது நானா இருந்துட்டு போறேனே “
மாதவன் விடாமல் மெல்லிய குரலில் தொடர்ந்தான்.
“நாங்க நல்ல வேலைல இருக்கிற மாப்பிள்ளையா பார்க்கிறோம். ஒண்ணுமே இல்லாதவனுக்கு எப்படி பொண்ணை கொடுக்கு முடியும்? ” மீராவின் அப்பா மாதவன் முகத்தை பார்க்க விரும்பாமல் எங்கோ பார்த்தபடி சொன்னார்.
“இப்ப தாங்க படிப்பை முடிச்சிருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எப்படியாவது வேலைய புடிச்சிடுவேன்”
“அப்படின்னா ரெண்டு பேரும் ஏன் எங்க கிட்டேருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்றீங்க..?”
“நீங்க எங்களை கண்ட்ரோல் பண்ணி பிரிக்கிறதினாலேதான் வெளியூர் போக பார்க்கிறோம்.”
“நீங்க ரெண்டு பேரும் தான் ஊர் முழுக்கச் சுத்தி வந்து எங்க மானத்தை வாங்கறீங்களே.”
“சரி. இனிமே சுத்தல. உங்க பொண்ணுகிட்ட பேசல. நான் ஒரு வேலைய புடிச்சிட்டு வரேன் அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க”
“இல்ல. எங்க சாதி சனத்துல ஒத்துக்க மாட்டாங்க. நீ என் பொண்ணை விட்டு விலகிடு.” ராஜன் தீர்மானமாய் சொன்னார். மாதவன் அவரை பார்த்தான். அவர் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கட்டிடத்தை பார்த்தார்.
“இதை உங்க பொண்ணுக்கிட்டச் சொல்ல வேண்டியதுதானே”
“அவதான் உன் கிட்ட மயங்கி கிடக்கறாளே”
“தப்பா பேசாதீங்க.எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறோம்”
“எங்களுக்கு பிடிக்கலியே ” மீரா அம்மா.
மாதவன் இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவன் ராஜனின் முகத்தை பார்த்த படி சொன்னான்.
“இல்லீங்க. கல்யாணம் பண்ணா அது மீரா கூடத்தான். இதுல நான் உறுதியா இருக்கேன்”
“நீங்க இப்படி பண்றதாலே எங்களுக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா. எங்களுக்கு இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. யார் கட்டிப்பா” அம்மா ஆவேசமாய் கத்தினாள்.
“இங்க பாருங்க. என்னோட முடிவை நான் சொல்லிட்டேன்.இதுல எந்த மாற்றமும் கிடையாது. நீங்க கிளம்பலாம்” சொன்னான்.
காவ்யா,ன்திவ்யா இருவரும் இதற்கு மேல் இங்கிருந்தால் மரியாதையில்லை என்று உணர்ந்து “அப்பா வாங்கப்பா போயிடலாம்” என்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.
மீராவின் அப்பாவும் , அம்மாவும் பெண்களை “ம்” என்று அடக்கி விட்டு அவனையே முறைத்தார்கள். அடுத்து அவர்கள் செய்த செயல் மாதவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
மீராவின் அப்பா தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து மாதவன் முன்னே இருந்த ஸ்டூலில் வைத்தார்.
மாதவன் கேள்விக்குறியாக அவரை பார்த்தான்.
“இது விஷம். ஒண்ணு என் பொண்ணை விட்டுட்டு நீ போயிடு. இல்லே இங்கிருந்தபடியே நாங்க குடும்பத்தோட விஷத்தை குடிச்சிடறோம்” நிதானமாக வார்த்தைகளை விட்டெறிந்தார்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.