ஆர்.வி.சரவணன்
இதுவரை:
நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் மீராவைச் சந்திக்கும் மாதவனுக்கும் அவளுக்கும் மோதல் ஏற்பட, அவளை விட்டுப்போன காரணத்தை அவளிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். அவளின் அப்பாவின் மிரட்டலைத் தொடர்ந்து அவன் மீராவை மறந்துவிட்டுப் போகச் சம்மதம் தெரிவித்து அவளின் நகைகள் இருந்த பெட்டியைக் கொடுக்கும் போது இன்ஸ்பெக்டர் வந்து அவனைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்வதை சொல்லியிருக்கிறான்.
இனி…
ராஜன் ஸ்டேஷன் சென்றடைவதற்குள், இன்ஸ்பெக்டர் எப்படி மாதவனின் வீட்டுக்கு வந்தார் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
இன்ஸ்பெக்டரின் மகளும் திவ்யாவும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள். மீராவின் காதல் விசயமாக அவரிடம் ஆலோசனை கேட்டு வீட்டுக்கு போன ராஜனிடம்,
“நீங்க போய் பேசி பாருங்க. உங்க பேச்சை கேட்டு விலகினா விட்றலாம். இல்லேன்னா நான் கவனிச்சுக்கிறேன்” என்று சொல்லியிருந்தார் இன்ஸ்பெக்டர். கூடவே காவ்யாவிடம் “செல் போன் ஆன் பண்ணி வச்சிக்கம்மா. உங்க பாதுகாப்புக்காகவும் அங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கிறதுக்காகவும் தான் இத சொல்றேன்” என்றும் சொல்லியிருந்தார். அதன் படி காவ்யா செயல்படவே, மாதவனின் அசட்டையான வார்த்தைகளும் மற்றும் ராஜனின் கெஞ்சலும் அவரை கோபமடைய வைக்கவே மாதவன் ஸ்டேசனுக்கு கொண்டு வரப்பட்டான்.
தன் டூ வீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற ராஜன் மாதவனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவன் சட்டையில்லாமல் முதுகு நெஞ்சு என்றெல்லாம் தடியால் அடி வாங்கி ரத்த விளாராய் அமர்ந்திருந்தான்.
அவன் ராஜனை பார்த்த பார்வையின் உஷ்ணம் அவரால் தாங்க முடியாமல் போகவே வேறு பக்கம் பார்வையை திருப்பி கொள்ள வேண்டியதாகி விட்டது.
இன்ஸ்பெக்டரிடம் சென்று அங்கலாய்த்தார்.
“சார். நான் தான் பேசிட்டு என்னாலே முடியலைனா சொல்றேன். அப்புறமா நீங்க வாங்கனு சொல்லியிருந்தேனே. அதுக்குள்ள குறுக்கால புகுந்து இங்க கொண்டு வந்து இப்படி அடிச்சிட்டீங்களே.”
“உங்க கிட்ட எவ்வளவு திமிரா பேசினான்.” இன்ஸ்பெக்டர் மாதவனை பார்த்து பல்லை கடித்தார்.
“முதலில் முடியாதுனு முரண்டு பிடிச்சான்தான் இல்லங்களே, ஆனா பின்னாடி விட்டு விலகறதுக்கு ஒத்துகிட்டான் சார்… அப்படி ஒத்துக்கிட்டவனைப் போய்…”
“அது நீங்க கால்ல விழுந்த பின்னாடி தானே. நீங்க எதுக்கு சார் கால்ல விழணும். நானும் ஒரு பெண்ணை பெத்த அப்பன் தான். உள்ளம் கொதிக்குது. நம்பி வந்த பொண்ணை கடைசி வரைக்கும் வச்சு காப்பாத்திடுவானுங்களா இவனுங்க. அடுத்த ஆறு மாசத்தில இன்னொருத்தி கிடைச்சா இந்த பொண்ணை விட்டுட்டு அவ பின்னாடி போயிடுவானுங்க.”
மாதவன் இன்ஸ்பெக்டரையே பார்த்தான்.
“என்னடா முறைக்கிறே..?” என்று எழுந்தவர் மீண்டும் அடிக்க பாய,
“அவனை அடிக்காதீங்க சார்” குறுக்கே புகுந்து ராஜன் தடுத்தார்.
“இவனை எல்லாம் அடி வெளுக்கணும்யா. பாவம்லாம் பார்க்கவே கூடாது.”
“இந்த பாழாப் போன காதல் எதிர்க்க எதிர்க்க தான் வளருமாம். பெருமையா சொல்லிக்குறாங்க. அதான்………. எனக்குப் பயமாயிருக்கு” ராஜன் மெல்ல இழுத்தார்.
“காதலா..? இவனுங்க எல்லாம் எவளாவது கிடைப்பாளா… ஊர் சுத்திட்டு கழட்டி விடலாமானு அலையுற பசங்க. நாம எதிர்க்கும் போது இவனுக்கிட்ட எப்படிக் காதல் வளருதுனு பார்ப்போம். வளர்ந்துச்சுன்னா மரத்தோட கிளையை வெட்டி விடுறமாதிரி நாம இவன் உடம்புத் தோலை உரிச்சிடலாம்”
இன்ஸ்பெக்டர் தொப்பியை கழட்டி வைத்த படி சேரில் அமர்ந்தார்.
இது வரை வாங்கிய அடிகள் இந்த ஜென்மத்திற்கு போதுமானது என்ற அளவிற்கு உடம்பு முழுக்க வலியும் எரிச்சலும் ஒரு சேர அவஸ்தையை தர, தன் இயலாமை மீது அசாத்திய கோபம் வந்தது மாதவனுக்கு.
மாதவனிடம் வந்து, “இங்க பாரு. என் பொண்ணு பின்னாடி சுத்தறத விட்டுடறேன்னு அவர்கிட்ட உறுதியா சொல்லு. அவரை விட சொல்லிடறேன்” ராஜன் சமாதானம் பேசுவது போல் பேசினார்.
“அப்ப இதுவரைக்கும் வாங்கின அடிகளை என்ன பண்ணலாம்? ” மாதவன் மெல்லிய குரலில் கேட்டான்.
இன்ஸ்பெக்டர் லத்தியை எடுத்து அவன் மேல் விட்டெறிந்தார்.
“சார். சார் நான் அவன் கிட்ட பேசிடறேன். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்றவர் மாதவனிடம் கறாராக சொன்னார்.
“இங்க பாருப்பா. எனக்கு என் பொண்ணு வேணும். கஷ்டப்பட்டு வளர்க்கிறது உன்ன மாதிரி உதவாக்கரைகளுக்கு தாரை வார்க்கறதுக்கு இல்ல. இன்ஸ்பெக்டரை கேஸ் எதுவும் போடாம விட்டுட சொல்லிடறேன். இந்த நிமிசத்திலிருந்து என் முன்னே நிற்காதே. என் பொண்ணு பார்க்கிறதுக்கும் வராதே . ஓடிடு.”
“நான் தான் வீட்லயே பிரிஞ்சிடறேன்னு சொல்லிட்டேனே. திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்க.” மாதவன் தளர்ந்து குரலில்.சொன்னான்.
“இங்க பார். உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு. அந்த பொண்ணை திடீர்னு எவனாவது வந்து லவ் பண்றேன். என் கூட அனுப்பி வைங்கனா அனுப்பிடுவியா. முடியாதுல்ல. அதே மாதிரிதான் அடுத்த வீட்டு பெண்களும் புரியுதா… நீ கிளம்பு. இனி ஒருமுறை திருச்சியில உன்னை பார்க்கக் கூடாது. மீரா வாழ்க்கையிலயும் இனிமேல் நீ குறுக்கிடவே கூடாது. அப்படி எதாச்சும் நடந்தா எதுனா கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன். வாழ்க்கையவே நாசமாக்கிடுவேன்… கிளம்பு” இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.
கான்ஸ்டபிள் அவனது லக்கேஜை கொண்டு வந்து அவன் முன்னே வைத்தார். “உன்னோட ரூமை நாங்களே காலி பண்ணித் துணிமணிகளை எடுத்திட்டு வந்துட்டோம். வீட்டு ஓனர்கிட்ட ஒரு கேஸ்ல மாட்டினதால எஸ்கேப் ஆகிட்டான்னு சொல்லி வச்சிருக்கோம். நீ இப்ப கிளம்பலாம். கான்ஸ்டபிள் இவன்கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிட்டு ரயில்வே ஸ்டேஷன் போய் ரயில் ஏத்தி விட்டுட்டு வந்திருங்க.” இன்ஸ்பெக்டர் உத்தரவிட மாதவன் சட்டையை மாட்டி கொண்டு சூட்கேசை எடுத்து கொண்டு மெதுவாக ஸ்டேசனிலிருந்து வெளியே வந்தான்.
அடிபட்டதில் முதுகு முழுக்க எரிச்சலும் வலியும் இருந்தது.
அதை விட மாதவன் மனசு இன்னும் வலித்தது.
*****
“அன்னிக்கு உடம்பும் மனசும் ரணமாகி திருச்சியை விட்டு கிளம்பியவன் ஏழு வருசம் கழிச்சு இன்னிக்கு தான் வந்திருக்கேன்.” மாதவன் சொல்லி முடிக்கும் போது தான் கவனித்தான்.
ரேகாவும் காவ்யாவும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
ரேகா விசும்ப ஆரம்பிக்க , காவ்யா தலை குனிந்திருந்தாள். மீரா என்ன சொல்வதென்று தெரியாமல் செயலற்றவளாக கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.
“ஓ மை காட். இவ்வளவு விசயம் நடந்திருக்கா. மீராவை நீ ஏமாத்திட்டு போனதுக்காக எப்ப உன்னை பார்க்கிறேனோ கையில் எது கிடைச்சாலும் உன்னை அடிச்சிடணும்னு கோபத்துல இருந்தேன்… சாரி” ரேகா சொன்னாள்.
மாதவன் அவளை பார்த்து கண்களை உயர்த்தி கேட்டான். “உன் கோபம் நியாயம் தான். மண்டபத்துல தான் பார்த்தியே… ஏன் அடிக்கல.”
“உன்னை பார்த்தவுடன் கோபம் வரல. இப்பவாவது வந்துட்டியேனு நிம்மதிதான் வந்தது”
“என்னை மாதிரி மோசமாப் பாதிக்கப்பட்டவங்க ஒண்ணு குடிச்சு சீரழிஞ்சு போயிடுவாங்க. இல்ல பழி வாங்கறேன்னு இறங்கிடுவாங்க. நான் நம்மை அசிங்கப்படுத்தினவங்க தலை குனியற மாதிரி வாழ்க்கைல முன்னுக்கு வந்து காட்டணும்னு நினைச்சேன். முன்னுக்கு வந்துட்டேன்.”
“அப்ப உன்னோட காதல்”
ரேகா கேட்கவும் மீரா காதுகளை கூர் தீட்டி கொண்டு அவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்று கவனித்தாள்.
“அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மாதிரி என் காதல் நினைக்க நினைக்க வளர்ந்துகிட்டே இருக்கு”
மாதவன் சொல்லி முடிக்கவும் கை தட்டல் சத்தம் கேட்டது.
சத்தம் வந்த பக்கம் மாதவன் திரும்பினான்.
கூடவே மீராவும் திரும்பினாள்.
அங்கே சேகர் திவ்யாவுடன் நின்றிருந்தான்.
வெள்ளிக்கிழமை தொடரும்.