ஆர்.வி.சரவணன்
இதுவரை:
நண்பனின் சேகரின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான் மாதவன். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதல் வர, ஒரு கட்டத்தில் அவளை அறைந்து விடுகிறான். அதன்பின் அவளிடம் அவளைப் பிரிந்து செல்லும் முன் நிகழ்ந்தவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறான். அவளின் குடும்பத்து மிரட்டல், போலீசின் மரண அடி எல்லாம் சொல்லி முடிக்கும் போது மீரா அதிர்ச்சியில் இருக்க, அங்கு வரும் அவர்களின் தோழி ரேகாவும் அதிர்ச்சி அடைகிறாள். அந்த நேரத்தில் மாடியில் தனித்துப் பேசப் போன மணமக்களான சேகரும் மீராவின் தங்கையும் அங்கு வருகிறார்கள்.
இனி…
மாதவன் சேகரையும் திவ்யாவையும் அங்கே பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியானான். மீரா மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.
சேகர் கைகளை கட்டி கொண்டு மாதவனையும் மீராவையும் பார்த்தபடியே இருக்கவும், ” என்ன பேசி முடிச்சிட்டீங்களா ?” என்ற படி எழுந்தான் மாதவன்.
“மாதவ் நீ ஒரு பொண்ணை காதலிச்சேங்கிறது தெரியும், ஆனா விவரங்கள் எதையும் நான் கேட்டப்ப பிடிவாதமா சொல்ல மறுத்திட்டே.”
“மறந்து போக வேண்டிய ஒண்ணை சொல்லி என்னாகப் போகுது”
மீரா மாதவனை திரும்பி முறைத்தாள்.
“நான் திவ்யாவை பெண் பார்த்தப்புறம், பொண்ணு ஓகே ஆனா மூத்த பொண்ணுக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்குதுன்னு ஒரு கேள்வியை எங்க வீட்ல வச்சாங்க. அதற்கு பதில் தேடறதுக்காக மீராவைச் சந்திச்சேன். எதுக்காக கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்கனு கேட்டேன். ரொம்ப கம்பெல் பண்ணதுக்கு அப்புறம் தன்னோட லவ் பத்தி சொன்னாங்க. கூடவே உன் பெயரையும் சொன்னாங்க. போட்டோவையும் காட்டினாங்க”
சேகர் சொல்ல சொல்ல மாதவன் ஆச்சரியமாய் அவனையே கவனித்தான்.
“அவங்ககிட்ட நீ என் பிரெண்டுனு நான் சொல்லல. உங்க ரெண்டு பேரையும் சேர்க்குற விசயத்துல அவசரப்படாம செயல்படணும்னு தோணுச்சு. சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லாம இருந்து என்னோட கல்யாணத்துல உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சிருக்கேன். உன்னை இந்த கல்யாணத்துக்கு நான் வற்புறுத்தி வரவழைச்சதும் அதுக்காகதான்.”
மாதவன் கண் கலங்கினான்.
“திவ்யாவுக்கு இப்பதான் விவரங்களை சொல்லி அவளோட பதட்டத்தை போக்கினேன். அறையற சத்தம் கேட்டு தான் நாங்க இங்க வந்தோம். நீ பேசினதை கேட்டதுல சூட்கேஸ் விசயம் புதுசு. ஷாக்கிங்காவும் இருக்கு” சேகர் முடிக்கும் முன்னே மாதவன் இடைமறித்தான்.
“இதோ சாட்சியா நிக்கிறாங்களே தங்கச்சிங்க ரெண்டு பேரும். அவங்களுக்கு முன்னாடி தான் சூட்கேஸை ஒப்படைச்சேன். சொல்லுங்கம்மா. என் காதல் தான் சின்னாபின்னமாகிடுச்சு… பரவாயில்ல. நான் திருடனில்லேனாவது மீராகிட்டே எடுத்து சொல்லுங்க”
அவர்கள் இருவருமே எச்சில் விழுங்கிய படி பயம் பாதி பதட்டம் பாதி என்ற நிலையில் நின்றார்கள்.
ரேகா கத்தினாள். ” ஏய் யாராவது ஒருத்தர் வாய திறந்து உண்மைய சொல்லுங்களேன்டி”
மீரா பற்களை கடித்த படி ‘யார் சொல்ல போறீங்க’ என்பதாக இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
காவ்யா பேச வாய் திறக்கவும் திவ்யா “ஒரு நிமிசம்” என்று சொல்லி சேகரிடம் கெஞ்சலாய் சொன்னாள்.
“இப்ப காவ்யா சொல்ல போறது தெரிஞ்சு என் குடும்பத்த தப்பா நினைச்சிராதீங்க ப்ளீஸ்”
“சீ. நம்ம குடும்பம்னு சொல்லு” அவளது தோள்களை சேர்த்து அணைத்து கொண்டான் சேகர்.
காவ்யா சொன்னாள்.
“சாரி மாதவன் சார். அன்னிக்கு நீங்க நாணயமா சூட்கேஸை அப்பா கிட்ட கொடுத்துட்டீங்க. அப்பா உங்களை கன்வின்ஸ் பண்ணி அனுப்பி வச்சுட்டாரு… ஆனா அக்கா மனசிலருந்தும் உங்களைக் கிளப்பணுமே. என்ன வழி? அதனால நீங்களே சூட்கேஸ் எடுத்திட்டு போயிட்டீங்கனு திருட்டு பட்டம் கட்டினா கண்டிப்பா அக்கா வெறுத்திடுவா. மறந்திடுவானு அப்பா பண்ணின ஐடியா இது”
மீராவின் பார்வை அவளை துளைக்க ஆரம்பிக்கவே பேச தடுமாறினாள் ஆனாலும் தொடர்ந்தாள்.
“அக்கா அப்பா சொன்னத கேட்டு நீ முதல்ல நம்பல. அப்புறம்தான் கொஞ்ச கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சே. அதற்குள்ளே அப்பா சூட்கேஸை தன் பிரண்டுகிட்ட கொடுத்துட்டார். அதிலருந்த துணி மணிகளை கஷ்டப்படறவங்களுக்கு கொடுத்துட்டார். நகைகளை வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டார். இத உன் கிட்ட சொல்ல கூடாதுனு எங்களுக்கு கண்டிசனும் போட்டுட்டார்.”
மீரா காவ்யாவை நெருங்கி கன்னத்தில் அறைந்தாள்.
“உங்களுக்கு என்னடி குறை வச்சேன். எத்தனை நாள் அழுதிருப்பேன். எத்தனை நாள் புலம்பியிருப்பேன். ரெண்டு பேரும் பார்த்திட்டு தானே இருந்தீங்க. ஒரு வார்த்தை சொன்னீங்களாடீ”
இருவருமே தலை குனிந்தார்கள்.
“அக்கா எங்கே நீ எங்களை விட்டுட்டு போயிடுவியோங்கிற பயம் இருந்துச்சு. அதான் அப்பா சொன்னதை கேட்டுட்டு இருந்திட்டோம். எனக்கு கல்யாணமாகி என் புருசன் மேல லவ் வர்றப்ப தான் உன்னோட காதல் பத்தி உணர முடிஞ்சது. அம்மாகிட்ட இதுக்காக நிறைய முறை சண்டையும் போட்டிருக்கேன்.” காவ்யா சொன்னாள்.
“நான் ஏதாவது சொல்ல போனா நீ சின்னப் பொண்ணுனு சொல்லியே என்னை அடக்கிட்டாங்க. மாதவன் சார் பார்த்தவுடனே எனக்கு வந்த பயமே கல்யாணத்துல எதுனா பிரச்னை பண்ணிடுவாரோனு தான். மத்த படி அவர் மேல எந்த குற்றச்சாட்டும் இல்லே” திவ்யா.
“உங்க குடும்பத்துல எல்லோரும் சுயநலவாதிகளா இருக்கீங்கனு நினைக்கிறப்ப தான் வேதனையா இருக்கு” கடுப்போடு சொன்னாள் ரேகா.
“இதெல்லாம் மனித வாழ்க்கைல சகஜம் தான்” என்றான் சேகர்.
மீரா திரும்பி மாதவனை பார்த்தாள்.
கைகள் கட்டிய படி தலை குனிந்து நின்றிருந்த அவன் அருகே வந்தாள்.
அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு படிக்கட்டு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் இழுத்த இழுப்புக்கு பின் தொடர்ந்த படி வந்த மாதவன் கேட்டான்.
“ஏய் என்ன பண்ண போறே ?”
“வாங்க நீங்க” சொல்லிய படி வேகமாக படிக்கட்டில் இறங்கினாள்.
“மீரா இந்த நேரத்துல எந்த பஞ்சாயத்தும் வேண்டாம். எங்கப்பா அம்மாக்கு விசயம் தெரிய கூடாது. தெரிஞ்சா பிரச்னை ஆகிடும். பொறுமை” மீராவை தடுக்கும் நோக்கில் சேகர் அவர்களுக்கு பின்னேயே வேகமாக படியிறங்க ஆரம்பித்தான்.
செவ்வாய்க்கிழமை தொடரும்.