பால்கரசு சசிகுமார்
கல்வி ஒருவனுக்கு மிக முக்கியமானது.
என் அம்மா, அப்பாவுக்குத் தன் பிள்ளை படிக்கிறானா..?, ஆடு மாடு மேய்க்கிறானா..? இல்லை ஊர் சுற்றித் திரியுறானா..? என எதுவுமே தெரியாது என்றாலும் நான் நடந்து கொள்ளும் விதம் என்னை அவர்களுக்கு வேறு மாதிரித்தான் காண்பித்திருக்கிறது.
“அப்பா… ஹெட்மாஸ்டர் உங்களைக் கூட்டிக்கிட்டு வந்து டி.சி.யை வாங்கிட்டுப் போகச் சொல்றாங்க”
“ஏண்டா… என்னாச்சு? எதாவது தப்புக்கிப்புச் செஞ்சுட்டியா?”
“இல்லப்பா, இதுக்கு மேல இங்க படிக்க முடியாது, இந்தப் பள்ளிக்கூடத்தில் பத்தாவது வரைதான் இருக்கு…. பதினொன்னாப்புப் படிக்கணுமுன்னா ராம்நாடு இல்லன்னா பரமக்குடிக்குத்தான் போகனும்”
அவரும் ‘என்னடா இது… இங்ககுன்னயே படிக்கிறமாரி பள்ளிக்கொடம் இல்லயாக்கும். அம்புட்டுத் தூரத்துக்குப் போவணுமாக்கும்’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
மறுநாள் காலையில் தலைமை ஆசிரியர் முன்பு வந்து கைரேகை வைத்து டி,சி.யை வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கும்போதுதான் தன் பிள்ளைக்குப் பள்ளியில் பால்கரசு என்னும் பெயர் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அதுவரைக்கும் சசிக்குமார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
“என் பிள்ளையோட பெயர் மாறியிருக்கே… எப்படி மாறுச்சு..? பேரை மாற்றிக் கொடுத்துடுங்க” என்று தலைமை ஆசிரியரிடம் கெஞ்சிப் பார்த்தார்.
“அதெல்லாம் இப்ப மாற்ற முடியாது, அதுக்கு நீங்க தாலுகா ஆபீஸ் போகணும், அலையணும். அங்கே போனால் வீ.ஏ.ஓ, தாசில்தார்ன்னு நிறையச் செலவழிக்க வேண்டியிருக்கும், யாரும் சும்மா பண்ணிற மாட்டாங்க. அதுபோக கெஸட் வரைக்கும் போயித்தான் மாத்த முடியும். இது தேவையா உங்களுக்கு..? பேர் தானே விடுங்க… அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நீங்க உங்க பிள்ளையை எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க” என்று அவர்கள் சொல்ல வருத்தத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.
டி.சி.யை வாங்கிட்டு வந்ததும் ‘இவனை எங்கே கொண்டுபோய் சேர்ப்பது? நமக்கு தெற்கு வடக்குத் தெரியாது’ என்று தனக்குள்ளேயே புலம்பித் தவித்தவர். தான் படிக்காததை நினைத்து மனம் வருந்தி அழ ஆரம்பித்தார். என்னதான் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் படிக்காத ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று என் அப்பாவின் அழுகையைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.
அப்பாவின் அழுகையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பரமக்குடி எனக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட ஊர் என்பதால் “சரிப்பா… நான் பரமக்குடியில் போய் சேர்ந்து படித்துக் கொள்கிறேன், அங்கே சித்தி வீடு இருக்கு… இருந்தாலும் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கிறேன்”
இந்த வார்த்தையைக் கேட்ட என் அப்பா கொஞ்சம் ஆறுதலானார்.
“அப்பா ஐநூறு ரூபாய் வேணும், ஸ்கூல் பீஸ், யூனிபார்ம், நோட் புக் எல்லாம் எவ்வளவு வரும்னு தெரியல…!”
பணத்தைக் கொடுத்துவிட்டுப் ஒரு பெருமூச்சு விட்டார்… “தாயோலி என் ஆத்தா, அப்பன் என்னய நாலெழுத்துப் படிக்க வைக்காமல் ஆடு, மாடு மேய்க்கப் போட்டு இந்தக் கோலத்தில் நிறுத்தி விட்டார்கள், ஆனால் நீ என்ன செய்வியோ தெரியாது… படிப்பை மட்டும் விட்டுடாதே” என்று அவர் சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் மூளைக்குள் கிடந்து முள்ளாய் குத்துகிறது.
பணத்தை வாங்கிக் கொண்டு பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் முன்பு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்பு நின்றுகொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து ” ஏம்ப்பா நானும் எத்தனை பேருக்குத்தான் கார்டியன்னு கையெழுத்துப் போட்டுச் சேர்த்து விடுறது. உங்க அம்மா, அப்பா எங்க?’ என்று ஒரு மாணவனைப் பார்த்துக் கடிந்துகொண்டிருந்தார். நானும் என் டி.சி.யை அவரிடம் நீட்டி என்னையும் சேர்த்து விடுங்க சார் என்றேன். என்னை மேலும் கீழுமாய் பார்த்தார். நான் நின்ற நிலையைப் பார்த்ததும் எதுவும் பேச அவருக்கு மனம் வரவில்லை. என் தோற்றமும், உடையும் கிராமத்தின் கடைக்கோடியில் குடிக்க தண்ணீர் இல்லாத கிராமத்திலிருந்து வந்திருக்கிறான் என்பதைப் பறைசாற்றியதை உள்வாங்கிக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
(அரசு கொடுத்த காக்கி டவுசர் வெள்ளைச் சட்டையில்தான் நான் அப்போது இருந்தேன். அந்த இலவச உடைகள் கொடுக்கும் போது வெள்ளையாகத்தான் இருந்தது… அதை இப்ப வெள்ளைன்னும் சொல்ல முடியாது காவியின்னும் சொல்லமுடியாது வெங்காவி கலரில் இருந்தது)
அவர் என் டி.சி. மார்க் சீட்டை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு “என்ன குருப் வேணும்..?” என்றார்.
குருப்னா என்னன்னே எனக்குத் தெரியாது என்பதால் ‘எனக்கு குருப்பெல்லாம் தெரியாது. என்னைய பிளஸ் ஒன்ல சேர்த்து விடுங்க’ என்றதும் அவர் தலையில் அடித்துக் கொண்டு என்னைப் பார்த்தார், தலையாட்டிக் கொண்டார்.
பின்பு அவரே ஒரு முடிவுக்கு வந்து எனது மார்க் சீட்டைப் பார்த்துவிட்டு, “அறிவியல் பாடத்தில் எண்பதுக்கு மேல் எடுத்திருக்கியே. உனக்கு அதுரொம்பப் பிடிக்குமா?” என்றார்.
“ம்..பிடிக்கும்” என்றேன்.
“சரி… அப்ப உன்னய நான் செகண்ட் குருப்ல (2nd Group – Pure Science) சேர்த்து விடுகிறேன் நல்லாப் படிக்கணும், சரியா” என்றார், நானும் தலையாட்டினேன்.
அதன்பின் என் டி.சி. மார்க்சீட்டைத் தலைமை ஆசிரியரிடம் நீட்ட, அவரோ மேலும் கீழுமாய் அவரைப் பார்த்தார்.
“சார் என்ன செய்வது… படிக்காத தலைமுறையிலிருந்து ஒருவன் படிக்க வரும்போது நாமதான் உதவி செய்து அவர்களைப் படிக்க வைக்கனும், அதை விட்டுட்டு ரூல்ஸ் பார்த்தால் எப்படி” என்று வாதாடி என்னை சேர்த்து விட்டார். அன்று பார்த்ததுதான் அதன் பின் இன்றுவரை அவரை எங்கும் பார்க்கவில்லை.
வகுப்பறைக்குள் போகும் போது பால் குடித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக் குட்டியை மடுவிலிருந்து இழுத்துப் பிடித்துக் குட்டிக் கூட்டுக்குள் அடைத்தது போல் இருந்தது.
பிறகு நாட்கள் செல்லச்செல்ல கல்வியின் முக்கியத்தை அறிந்துகொண்டு படிக்க ஆரம்பித்தேன். இந்தியா முழுவதுன் தனிமையில் சுற்றித் திரியும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எனக்குக் கொடுத்தது இந்தக் கல்வி மட்டும் தான்.
ஏதோ ஓரளவிற்குப் படித்ததால் இன்று என் குடும்பம் மட்டுமல்லாமல் என்னைச் சுற்றி இருக்கும் பலரின் வாழ்க்கையும் என்னால் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவன் படித்துவிட்டால் அவனின் அடுத்த தலைமுறையே மாறிவிடும் என்பதை என்னளவில் நான் உணர்ந்துள்ளேன்.
அன்று என் அப்பா என்னைப் படிக்க வைக்கவில்லை என்றால் இன்று என் மகளும், நானும் கிளியூர் கிராமத்தில் பிளாஸ்டிக் குடத்துடன் ஒருகுடம் தண்ணீருக்குத் தவிக்க வேண்டியதிருக்கும் என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு.
கல்வியறிவு இல்லாமல் முன்னேறிய பலரை எடுத்துக் காட்டலாம், ஆனால் கல்வியின் அருமை என்னவென்று அவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.
கல்வி முக்கியமானது, தொடர்ந்து படியுங்கள்.
கல்விக்கு வயது வரம்பு கிடையாது, நிரந்தரமாக உறங்கும்வரை படியுங்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
One comment on “கல்வியின் அவசியம்”
rajaram
அருமையான கட்டுரை. படிப்பின் தேவை, அது தரும் வளர்ச்சி பற்றி உங்கள் சொந்த அனுபவத்தில் எழுதியிருந்தீர்கள். சிறப்பு.
இன்றும் இராமநாதபுர மாவட்டத்தில் தண்ணீருக்காக பிளாஸ்டிக் குடங்களை வைத்துக் கொண்டு பலமைல் தூரம் நடந்து கொண்டு வருபவர்கள் பெரும்பாலானோர் படித்து இருக்கிறார்கள். படித்தாலும் தனக்கான ஒருசில தேவைக்காக தேடித்தானாக வேண்டும்.