(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 13
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார். லதாவிடம் மறுவிசாரணைக்குப் பிறகு மீண்டும் மதுரைக்குச் செல்லும் சுகுமாரன், பொன்னம்பலத்திடம் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் வருணை கொலைகாரன் என்று முடிவுக்கு வந்து விசாரிக்கிறார்.
நடப்பது:
சுகுமாரன் சத்தமாகச் சிரிக்கவும் அவரைப் பயத்துடன் பார்த்தான் வருண்.
“என்ன மிஸ்டர் வருண்… நாம சிவராமன் பெயரைச் சொன்னதும் இந்தாளு எதுக்கு இப்படிச் சிரிக்கிறானேன்னு நினைக்கிறீங்களா..?” என வருணைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டார் சுகுமாரன்.
வருண் ஒன்றும் பேசாமல் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தான்.
“எனக்கு சிவராமன் மேல சந்தேகம் இருந்துச்சு… ஆனா அந்தாளை விசாரிக்கலை… என்னோட சந்தேக வட்டத்துல இருந்தாலும் ஏனோ அவரை தேடிப் போகலை… சரி விடுங்க… அப்புறம் உங்கம்மா கதை சொன்னீங்க பாருங்க… அருமையான கதை… எவ்வளவு அழகா ஸ்கீரின் பிளே பண்ணுறீங்க… கை தேர்ந்த இயக்குநர் மாதிரி…”
“சா… சார்….”
“இருங்க… நான் பேசி முடிச்சிருறேன்… உங்கம்மா…. கதையில என்ன சொன்னீங்க…. அப்பா அம்மாவை தொழில் வளர்ச்சிக்காக தவறா பயன்படுத்துனாருன்னுதானே…. ஹா… ஹா… இதெல்லாம் தமிழ் சினிமாவோட ஓல்ட் டிரெண்ட் மிஸ்டர் வருண்… உங்கப்பாவுக்கு தெரியாம உங்கம்மாவுக்கு ஒரு இல்லீகல் கனெக்சன்… அது தெரிஞ்சப்பவும் அவரு அதை விட்டுட்டு திருந்தி வாழு, எனக்காக இல்லாட்டியும் நம்ம பிள்ளைகளுக்காக நீ எங்கூட இருக்கணுமின்னு கேட்டிருக்கார்… ஆனா உங்கம்மா அந்த வாழ்க்கையை நம்பி இந்த வாழ்க்கையை விட்டுட்டுப் போயாச்சு… இப்போ நிம்மதியில்லாத வாழ்க்கை… இதுதான் உண்மைக் கதை…”
“சா…சார்…”
“இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறீங்கதானே… இந்த ஒரு வாரமா ஊட்டியில நான் என்ன டீ ஆத்திக்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களா…? எனக்கு ஏகப்பட்ட பிரஷர்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விசாரணையின்னு கேசை முன்னோக்கி நகர்த்தினேன்… முதல்ல உங்கம்மா பற்றி விசாரிக்க எண்ணமில்லை… ஆனா அவங்க பிரிவுக்கான காரணம் சரியாத் தெரிஞ்சாத்தான் எதையும் முடிவு பண்ண வசதியாக இருக்கும்ன்னு தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பெருமாள்… என்னோட பிரண்டுதான்… அவருக்கு கூப்பிட்டு யாருக்கும் தெரியாம விசாரிச்சு விபரம் சொல்லச் சொன்னேன். அவர் சொன்ன விபரம்தான் இப்ப நான் சொன்னது…”
வருண் உலர்ந்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டான். பொன்னம்பலம் சிரித்துக் கொண்டே “இன்னும் இருக்கு மிஸ்டர் வருண்…” என்றதும் மறுபடியும் ஏதோ பேசவந்த வருணைப் பேச விடாது சுகுமாரனே தொடர்ந்தார்.
“இன்னொன்னு தெரியுமா…? இந்தக் கேசுல எங்களுக்கு எந்தவித துப்பும் கிடைக்கலை… இவரா வைர மோதிரக் கதையைக் கொண்டு வந்தாரு… எனக்கு இல்லாத ஒரு துருப்புச் சீட்டை பிடிச்சிக்கிட்டு இங்க வர விருப்பம் இல்லை… அதனால சனி, ஞாயிறுல்ல போவோம்ன்னு சொல்லி வச்சேன். இங்க வர்றதுக்கு முன்னாடி பெருமாள் விவரம் கலெக்ட் பண்ணிக் கொடுக்கவும்தான் ஒரு முடிவோட இங்க வந்தோம். உங்க தங்கையை விசாரிச்சிக்கிட்டே உங்க முகத்தை வாசிச்சிக்கிட்டு இருந்தேன்… நாங்க இங்க தங்கி விசாரிக்கலாம்ங்கிற முடிவோட உங்க வீட்டை விட்டுக் கிளம்பும் போது நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க… மற்றதெல்லாம் எங்க பிளான்படி நடந்துச்சு… ஆனா நீங்க வந்து மாட்டினது பிளான்ல இல்லாதது… உங்க அம்மா கதையை ஆரம்பிச்சப்பவே கதை இப்படியில்லை… வேற மாதிரின்னு சொல்லி, பெருமாளை வர வச்சு உள்ள தூக்கிப் போட்டிருப்பேன்… ஆனா இந்தக் கொலையில யார்யார் இருக்காகன்னு தெரிஞ்சிக்கத்தான் நாங்க எதுவும் செய்யாம உங்களைப் பேச விட்டோம்…”
சுகுமாரன் நிறுத்தவும் அவரை அடுத்துப் பேச விடாமல் வருண் வேகவேகமாப் பேச ஆரம்பித்தான்.
“ப்ளீஸ் சார்… உங்க விசாரணை குறித்து சந்தோஷம்தான்… ஆனா என்னைய குற்றவாளி மாதிரி ஆக்கி நீங்களே பேசிக்கிட்டு போறீங்களே சார்.. ப்ளீஸ்… என்னை புரிஞ்சிக்கங்க… எங்கம்மா சொன்ன கதை அது… அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன்… நீங்க வைரமோதிரம் பற்றி கேட்டதால பத்மாவதி ஆண்டிக்கிட்ட இருக்குன்னு சொல்ல வந்தவன்தான் அப்பாவோட மறுபக்கம் இதுக்கு உதவியா இருக்குமேன்னுதான் நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன்… அதுபோக அந்த மோதிரம் தர்ஷிகாவுக்கு செய்யும் போது ஆண்டிக்கும் அப்பாதான் செஞ்சு கொடுத்தார். ஆனா அதுவே எனக்கு எதிராத் திரும்பும்ன்னு நினைக்கலை… அம்மா சொன்னாங்கன்னு அப்பாவைக் கொல்ல நான் உடன்பட்டிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..? தர்ஷிகாவுக்கு அவரு தெய்வம்ன்னா… எனக்கும்தான்… அவரோட அந்தப்பக்கம் எப்படியிருந்தாலும் எங்களுக்கான வாழ்க்கை ரொம்ப நெகிழ்வானது… அர்த்தமுள்ளது… அந்த அப்பாவை அவரோட வயசான காலத்துல நான் அப்படிப் பாத்துக்கணும்… இப்படிப் பாத்துக்கணும்ன்னு கனவு கண்டவன் சார்… எனக்கு எங்க அப்பா இருந்தாத்தான் பெருமையே… இறந்தால் அல்ல…” என்றபோது அவன் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது .
“அது தெரியும் வருண்… உங்க பேச்சுல இருக்க உண்மையை நான் நம்புறேன்… ஆனா இந்தக் கொலையோட ஆரம்பப்புள்ளி உங்ககிட்டதான் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது… அது நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா… தெரியாமச் செஞ்சீங்களான்னு தெரியலை…”
“சா…சார்… சத்தியாம எனக்கு எதுவும் தெரியாது… அப்பா மேல உள்ள கோபத்துல அம்மா அவரைப் பற்றி தப்பாச் சொன்னா அதுல அர்த்தம் இருக்கு… ஆனா சிவராமன் அங்கிளும் எதுக்காக சொல்லணும்… எனக்குப் புரியலை சார்….”
“இதுல நீங்கதான் இப்ப முக்கியமான புள்ளி… உங்களை வைத்துத்தான் அடுத்த கட்டத்துக்கு நகரணும். எங்க விசாரணைக்கு ஒத்துழைச்சா நல்லது.”
“சார்…. என்ன சார் நீங்க…? எந்தச்சி மேல சத்தியாம நான் அப்படிப்பட்டவன் இல்லை சார்”
“அதென்ன தங்கச்சி சத்தியம்…”
“அவதான் சார் என்னோட உயிர். அதான் அவமேல”
“ஒகே… இதுல யார் பின்னணியில இருக்கான்னு தெரியணும்ன்னா நீங்க எங்க கூட ஒத்துழைக்கணும். விசாரணை முடிவுல நீங்க இல்லைன்னா சந்தோசப்படுவேன்.”
“கண்டிப்பா உங்களுக்கு நான் ஒத்துழைக்கிறேன் சார். எனக்கு உண்மையான குற்றவாளி யார்ன்னு தெரியணும்”
“சரி இப்ப விசயத்துக்கு வர்றேன். பத்மாவதியோட உங்க அப்பாவுக்கான உறவு… இல்லேன்னா உங்கம்மாவுடன் சிவராமனுக்கான உறவு… இது ரெண்டுல ஏதோ ஒண்ணு தப்பான உறவா இருக்கணும்… அதுதான் கொலைக்கான காரணி… அது நமக்குத் தெரியணுமின்னா நாம சிவராமனை விசாரிக்கணும்…”
“எப்படி சார்… எந்தக் குளூவும் இல்லாமல் அவரை விசாரிப்பீங்க…” வருண் கொஞ்சம் பதட்டத்தில் இருந்து வெளிவந்தது போல் தெரிந்தது.
“இதே வைர மோதிரம் குளூவோட போவோம்… இல்லாததை வைத்துப் பேசுவோம்… எப்படியும் நமக்கு பிடி கிடைக்கிற மாதிரி ஏதாவது கிடைக்கும்… அதுக்கு முன்னால சிவராமன்கிட்ட போன் பண்ணி பேசிட்டு அப்பா கொலை விஷயமா ஏதோ முக்கிய தடயம் கிடைச்சிருக்காம்… இன்ஸ்பெக்டர் பேசினார். நான் அங்க வாறேன்னு சொல்லுங்க… மத்ததை அங்க போயி பாத்துக்கலாம்… ஆனா அங்க நாம மட்டும்தான் போறோம்… தர்ஷிகா வேண்டாம்… போனைப் ஸ்பீக்கர்ல போட்டுப் பேசுங்க”
“ஓகே சார்… “ என்ற வருண் சிவராமனை அழைத்தான்.
“சொல்லு வருண்…” எதிர்முனையில் சிவராமன்.
“அங்கிள் எப்படியிருக்கீங்க… நாளை நான் அங்க வாறேன்…”
“நல்லாயிருக்கேன்… ஏன்…? என்ன விஷயமா வர்றே..?”
“அப்பா கேசுல ஏதோ குளு கிடைச்சிருக்காம்… இன்ஸ்பெக்டர் வரச்சொல்லியிருக்கார்… நான் மட்டுந்தான் வர்றேன்… வேற யாரும் வரலை…”
“எ… என்ன குளூவாம்…? அப்ப கொ…லையாளி யா…யார்ன்னு கண்டுபிடிச்சிடலாமா?” கொஞ்சம் பதட்டமாவது தெரிந்தது. பொன்னம்பலத்தைப் பார்த்துச் சிரித்தார் சுகுமாரன்.
“தெரியலை அங்கிள்… இதுவரை ஒண்ணும் கிடைக்கலைன்னார்… இப்பத்தான் ஏதோ சொல்றார்… நான் அங்க வாறேன்… நாம போயி பார்க்கலாம்…”
“ஓகே… நீ இங்க வா… நாம போகலாம்… ஆமா நீ ஏன் ஒரு மாதிரி பேசுறே…? என்னாச்சு…?” சிவராமன் ரொம்ப ரிலாக்ஸாக பேசுவது போல் தெரிய சுகுமாரனின் முகம் சோர்வுற்றது.
“ஒண்ணுமில்லை அங்கிள்… லேசா தலைவலி… அதான்…?”
“ம்… டாப்லெட் எதாவது போடு… நல்லாத் தூங்கு… சரியாத் தூங்கியிருக்கமாட்டே…”
“சரி அங்கிள்… ஆமா ஆண்டி எங்கே…?”
“உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு பார்த்தேன்… நீயே கேட்டுட்டே…”
“ஏன்… என்னாச்சு… எனி பிராப்ளம்…?”
“ம்… பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா… இப்போ ஹோமா ஸ்டேஜ்… ” அவரின் குரல் உடைந்தது. வருண், சுகுமாரன், பொன்னம்பலம் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(வெள்ளிக்கிழமை – விசாரணை தொடரும்)