சுஶ்ரீ
(சுஸ்ரீ என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன் அவர்கள் நிறையச் சிறுகதைகள் எழுதி வருகிறார்)
‘எல்லாரும் குளிச்சாச்சு, நீங்கதான் லாஸ்ட் போங்க டவல், ஷாம்பு, சோப் ரெடியா வச்சிருக்கேன்’ – ஷீலா கிச்சன்ல இருந்து கத்தினாள்.
ஷீலா என் பொண்ணு என் மேல உயிர். இன்னிக்கு எல்லாருமா ஒரு கல்யாணத்துக்கு போற பிளான். பேப்பர் படிச்சுட்டே இருந்தேனா என்னவோ சோம்பல். மெதுவா எழுந்து பாத்ரூம் போறேன்… டக்னு கரண்ட் கட். கீசர் போட முடியாது வெந்நீர் வராது.
2 மணி நேரம் கரண்ட் கட்னு பையன் மெதுவா சொல்றான். பச்சைத் தண்ணிலதான் குளிச்சாகணும், எனக்கு மட்டும் ஏன் இப்படி?
முகூர்த்தம் 8.30 மணிக்கு, சத்திரம் பக்கத்து தெருதான். கல்யாணம் என் ஒய்ஃப் விசாலியோட தங்கை பேத்திக்கு. கார்த்தாலை 7 மணில இருந்து விசாலி பறக்கறா, சீக்கிரம் போகணும்னு., அவளோட எல்லோ சகோதரிகளும் வந்திருப்பாளே, பேச வேண்டாமா.
சரி நீங்கள்லாம் முதல்ல போங்கோ நான் கொஞ்சம் கேஸ் ஸ்டவ்ல வெந்நீர் வச்சு குளிச்சிட்டு வரேன்னு ஒரு வழியா எல்லாரையும் அனுப்பியாச்சு.
ஒரு அலுமினிய குண்டால தண்ணி ரொப்பி, விசிலடிச்சிண்டே கேஸ் ஸ்டவ் மேல வச்சு லைட்டரால பத்த வச்சா புஸ் புஸ்னு சத்தம் வருது ஸ்டவ் எரியலை.
அட ராமா கேஸ் நான் வரப்பதானா தீந்து போகணும். சிலிண்டரை மாத்தணும்.பழைய சிலிண்டர்ல இருந்து ரெகுலேட்டரை கழட்டி புது சிலிண்டர்ல மாட்டலாம்னா அதோட கேப் கழலமாட்டேன்து. அந்த கயிரை பலமெல்லாம் சேத்து இழுத்ததுல கயிறு அறுந்து கையோட வந்தது.
இப்ப என்ன செய்ய, கேஸ் கம்பெனி மெக்கானிக்கை போன்ல கண்டு பிடிச்சு, ரிங்கினா, என்ன சாரே நானே கால் ஃபிராக்சர் ஆயி ஆஸ்பத்திரில கிடக்கேன்றான்.
என்ன பண்றதுனு பதட்டம் வந்தது. இத்தனைல கீழ் வீட்டு பொண்ணு அங்கிள் ஒரே ஒரு பூண்டுப் பல் அம்மா வாங்கிண்டு வரச் சொன்னானு வந்து நின்னா.
நீயே தேடி எடுத்துக்கோனு அலுப்பா சொன்னேன். என்னாச்சு அங்கிள்னு கேட்டுட்டே கேஸ் சிலிண்டரை பாத்தா, அறுந்த அந்த கேப் கயிறை பாத்தா. “கேப் திறக்க சண்டித்தனம் பண்தா, ஒரு ஸ்க்ரூ டிரைவர் கொடுங்கனு “கேட்டா.
என்னால முடியாத்தை இந்த 17 வயசு பொண்ணு என்ன பண்ண முடியும்? ஆனா ஸ்க்ரூ டிரைவரை ( நல்ல வேளை வச்ச இடத்தில் கிடைச்சது) கொடுத்தேன்.
அதை கேப்புக்கு அடியில் கொடுத்து ஒரு சின்ன நெம்பு டப்னு கேப் வெளில வந்தது. என்னைப் பாத்து சிரிச்சிண்டே, ‘மக்கு அங்கிள்’னு சொல்லிட்டே பூண்டை எடுத்துண்டு ஓடிப் போனா.
ஒரு வழியா வெந்நீர் வச்சு பாத் ரூமுக்கு தூக்கிண்டு போனேன் டக்னு கரண்ட் வந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி?
ஒரு வழியா குளிச்சு முடிச்சு, பூஜை ரூமுக்கு போய் விபூதி வச்சிட்டு , கடவுளை பிரார்த்தனை பண்ணினேன்.விசாலி புது பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் வெள்ளை ராமராஜ் காட்டன் ஷர்ட் எல்லாம் தயாரா முன்னால வச்சிருந்தா.
நீட்டா டிரஸ் பண்ணிண்டு “எல்லாம் போச்சு இந்த வாசனையைத் தவிரனு” புயல்ல மாட்டின பையனை ஒரு பெண் கேலி செய்த ஃபோக் செண்ட்டை ஷர்ட்ல தாராளமா ஸ்பிரேயிண்டு கதவை பூட்டிண்டு கிளம்பினேன்.
புது ஸ்கெட்சர் செருப்பு போடலாமா வேண்டாமா, 4500 ரூபா கொடுத்து வாங்கி 10 நாள் கூட ஆகலை.கல்யாண வீட்ல தொலைஞ்சு போயிட்டா? நமக்கோ இன்னிக்கு நேரம் சரியில்லை. போடறதா வேண்டாமா யோசிச்சிட்டே போட்டுட்டு கிளம்பினேன்.
கல்யாண சத்திரம் பக்கத்து தெருதான், 10 நிமிட நடை தூரம். இதுக்குள்ளே விசாலி 10 தடவை ஃபோன் பண்ணிட்டா. சீக்கிரம் வாங்கனு.
சிரிச்சிண்டே பாதி தூரம் நடந்தேன் சடசடனு மழை, ஒரு முன்னறிவிப்புமில்லாம பேய் மழை ஒரே நிமிடத்தில் தொப்பலாய் நனைஞ்சிட்டேன்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி?