அழகுராஜா
2020 ஆம் வருடம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் நடத்திய
‘பெருங்காமநல்லூர் நூற்றாண்டு நினைவுகள் 1920 – 2020’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்தான் எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜாக்சன் அவர்கள் அறிமுகமானார்.
செக்கானூரணியைச் சுற்றி உள்ள கோவில்கள், பழங்கால கட்டிடங்கள், பழமையான மரங்கள், நடுகற்கள் பற்றிய வரலாற்றை ஜாக்சனிடம் இருந்து நான் தெரிந்து கொண்ட போது எனக்கு வியப்பா இருந்தது. நான் சில வரலாற்று நிகழ்வுகளைக் கேட்ட பொழுது கொஞ்ச நாள் பொறுங்கள் என்று சொன்னதுடன் வயதில் மூத்தவர்களிடம், விபரம் அறிந்தவர்களிடம் சரியான வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை என்னிடம் அவர் சொன்னபோது உண்மையிலேயே அவரின் இந்தக் குணம், தேடல் எனக்கு வியப்பாக இருந்தது, அவர் மீது மரியாதை கூடியது.
கிராமத்தில் இருந்து படித்து வெளியூர் சென்ற உடனே தன் மண்ணின் மக்களையும் குலசாமியையும் மறந்து போகும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மத்தியில் இளம் வயதில் கட்டிட பொறியாளராய் வெளியூரில் வேலை பார்த்தாலும் தன் மண்ணின் வரலாற்றை அறிந்துக் கொள்ள அவர் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது எனக்கு என்னைப் பார்ப்பது போல் இருந்தது.
நான் சொல்ல நினைப்பது ஒன்னு தான், அதாவது உலக வரலாறுகளைத் தெரிந்து கொள்வதற்கு முன் நம் மண்ணின் வரலாற்றை முதலில் தெரிந்துக் கொள்ளனும் என்று நினைப்பவன் நான். அப்படியான மனிதர்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த சந்தோசம்.
அது போல் தனது இனக்குழுவான தன்னரசு பிரமலைக்கள்ளர் நாட்டில் ஆறாவது நாடான ஆனையூர் கொக்குளம் நாடு ஆறுகரை உருவான விதம், அங்காளி பங்காளிகள், திருமண உறவு முறைகள், கொக்குளம் நாட்டில் குடியேறியது, குலதெய்வங்கள் உருவான வரலாறுன்னு இதுவரை செவி வழியாக இருந்ததைப் புத்தகமாக எழுதி உள்ளார்.
செவி வழி செய்தி கூட சில காலம் மறைந்து போகலாம் ஆனா புத்தகம் காலத்திற்கும் வரலாற்றைச் சொல்லும் முதல் புத்தகமே சிறப்பாக எழுதி உள்ளார் வாழ்த்துக்கள் ஆசிரியர்க்கு.
புத்தகத்தின் ஆரம்பமே அமர்க்களம்… யார் மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான விளக்கத்துடன் தொடங்குவது சிறப்பு.
இந்தப் பகுதிக்கு வந்த இவரின் முன்னோர்களைப் பற்றி சில தவறான தகவல்களைச் சிலர் எழுதியிருக்கிறார்கள், அதை நான் படித்து இருக்கிறேன். கொக்குளம் பகுதியில் குறுநில மன்னர் போல் வாழ்ந்து வந்த கார்காத்த வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த அம்மையப்ப பூசாரி கிராமத்தையும் கோவிலையும் காவல் காக்க கிழக்கே இருந்து இவரின் முன்னோர்களைக் கொண்டு வந்துள்ளார். தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு வந்துள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளிகள் நாசத்தின் காரணமாக கார்காத்த வெள்ளாளர்கள் நிலங்களை அற்ப விலைக்கு விற்று விட்டு வெளியேற. அதன் பின் இவரின் முன்னோர்கள் இப்பகுதியைச் சீர்செய்து ஒரு நாடாகக் கட்டமைத்து இன்று வரை மண்ணையும் மக்களையும் வழிநடத்தி வருகின்றனர். ஆனால் சிலர் கார்காத்த வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அடித்து விரட்டி இந்த பகுதியை இவரின் முன்னோர்கள் கைப்பற்றியதாக எழுதி உள்ளனர். இப்படித் தவறான வரலாறை எழுதியதால் தான் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களை மூர்க்கதனமானவர்களாக இன்று வரை மற்றவர்கள் பார்க்கின்றனர்.
இந்த மக்கள் கோபக்காரர்கள் தான் ஆனால் அன்பானவர்கள். இவர்களின் கோபத்தை எழுத தெரிந்தவர்களுக்கு ஏனோ அன்பை எழுத மட்டும் பேனா தயங்குதுன்னு எனக்குத் தெரியல. இயற்கையையும் முன்னோர்களையும் குல தெய்வமாக வழிபடும் ஆதிவழக்கம் உடையவர்கள். இன்று நாம் சமூகநீதி பேசுகிறோம், ஆனால் அந்தக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை தங்களின் குலதெய்வப் பூசாரியாய் வைத்து அழகு பார்த்தவர்கள் இவர்கள்.
அதேபோல் மறுமணத்தை ஆதரித்தவர்கள், பெண்களுக்கு ஆண்களுக்கானச் சமமான உரிமைகளைத் தந்தவர்கள் இந்த மக்கள். ஒரு சிலரின் செயலால் ஒட்டு மொத்த மக்களின் வரலாற்றை மறைத்து தவறான தகவல்களைக் கட்டமைப்பது வருத்தமே. இந்தப் புத்தகத்தில் பொய்யான தகவல் ஏதும் இல்லை ஆதாரங்களுடன் எழுதி உள்ளார். இந்த மக்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் வாசிக்க சிறந்த புத்தகம் இது.
மனதில் நின்றவை :
பழங்குடி – இயற்கையையும் முன்னோர்களையும் குலதெய்வமாக வழிபடும் மக்கள்
ஒரு மண்ணில் யார் ஒருவரின் பாதம் முதலில் படுகிறதோ…
எவர் ஒருவர் அந்த மண்ணை முதலில் சீர் செய்து வாழ்ந்தாரோ…
எவர் ஒருவர் இறந்தும் அந்த மண்ணில் புதைக்கப்பட்டு உரமாகிறாரோ…
அவரே அந்த ‘ மண்ணின் மைந்தர் ‘
அவரே அந்த ‘ மண்ணின் பழங்குடி’
தங்கள் குல தெய்வப் பெயரை தங்கள் குழந்தைக்கு வைத்து தங்கள் குழந்தைகளைக் குலதெய்வமாகப் போற்றி அழகு பார்க்கும் இனிமையான பண்புடைய பழங்குடி மக்கள் இந்தப் பிரமலைக்கள்ளர்கள்.
பங்காளி : தந்தையின் அண்ணன், தம்பிகளின் மகன்கள்.
அங்காளி: தாயின் அக்கா, தங்கையின் மகன்கள்
அக்கா மகளை திருமணம் செய்வது தவறு, அதனால் உறவு முறை மாறும். இதுவே மாமன் மகள் ஐத்தை மகளை கட்டினால் உறவு முறை மாறாது.
சிறப்பான புத்தகம்.
பக்கம் – 166
விலை – ரூ.170 /-
நன்றி : படம் இணையத்திலிருந்து