ஆமினா முஹம்மத்
‘முதல் பக்கத்தை/கதையைத் தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும்.
சிறுகதைத் தொகுப்பின் சவுகரியமே 10 பக்கங்களுக்குள் வாசிப்பைத் தற்காலிகமாக முடித்துவிட்டு அடுத்த வேலைக்குத் தாவலாம் என்பதுதான் அல்லவா? நாவலில் இந்த சேட்டைகள் நடக்காது.
ஆனால் எல்லா வார்த்தைகளும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. நிஜமாகவே கனம் நிறைந்த எழுத்துகள் தரும் மனக்குலைவு கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த வகை எழுத்துக்களைச் சுமந்த சிறுகதைத் தொகுப்பு ‘மயானக்கரையின் வெளிச்சம்’. எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா.
‘ஒரு பெயரற்றவன் பற்றிய குறிப்பிலிருந்து’- முதல் கதையைச் சென்ற ஆண்டு துவக்கத்திலேயே படித்து முடித்துவிட்டு சிலாகித்திருந்தேன். வழமை சம்பிரதாயமாய் ‘ஒரு கதைக்கு மேல் வாசிக்க அச்சம் வருகிறது’ என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு நாட்களைக் கடத்தினேன்.
‘முடிவுக்கு காத்திருக்கும் கதை’- மீண்டும் அடுத்த கதை தொடங்கினேன். எனக்கு நானே சொல்லிக்கொண்டதெல்லாம் சம்பிரதாய சமாதானங்கள் அல்ல, நிஜமாகவே ஹீரா வாசிக்கும் மனிதர்களை மனச்சிதைவுக்கு ஆளாக்குகிறார் என அடித்துச் சொல்வேன். எழுத்தின் வழியாக வலிகளைக் கடத்துகிறார் எனும் வகையில் அவர் நியாயம் செய்கிறார்தான். எனினும் வாசிக்கும் நமக்குதான் உள்ளம் உருக்குலைந்து போகிறது. எனில் நிஜமாய் நடப்பதை எப்படி உங்களால் கடக்க முடிகிறது என்ற கேள்வியை தலையில் ஆணியடித்ததுபோல் இறக்குகின்றார்.
இத்தொகுப்பில் வரும் சிறுகதைகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் ஒற்றை வரிச் செய்தியாக ‘உச்’ கொட்டி நாம் கடப்பவையே. அதன் பின்னுள்ள அரசியலும், வருங்காலத்தின் திட்டங்களும் குறித்து அக்கறை கொள்ளாத செய்திகள். அவற்றை சிறுகதைகளாகத் தருவதன் வாயிலாக ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப்படும் அநீதிக்கெதிராக மக்களின் மனம் கொஞ்சமேனும் இளகக் கூடும் என அவர் நம்புகிறார். பெயரைத் தவிர்த்து தன்னை முஸ்லிமாக அடையாளப்படுத்துவதை விரும்பாத தீவிர இடதுசாரி சிந்தனைகொண்டவர். ஆனாலும் வலிகளை உணர வைக்க, அவர் மேற்கொள்ளும் இலக்கிய முயற்சிக்கு காரணம் ஒடுக்கப்படும் ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தின் மீதான நியாயமான இரக்கம், மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, இந்தியனாக தன் தார்மீக கடமை என்பதும் ஒட்டுமொத்த மனித இனத்தின் சமத்துவ நிலை, அமைதிச் சூழல், மனிதகுலத்தின் மீதான அன்பு தாண்டி வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?.
சென்ற வருடமே முதல் சில கதைகளை வாசித்திருந்தேன் எனச் சொல்லியிருந்தேன் அல்லவா. வாசிக்கும் எல்லாமுமே எல்லா நாட்களுமாகவா தாக்கத்தை உள்ளத்தில் தாங்கியபடி நம் முன்னே வந்துகொண்டேயிருக்கும்? ஆனாலும் ‘மயானக்கரையின் வெளிச்சம்’ பற்றிய சிந்தனை எழும்போதெல்லாம், நெருப்பில் வெந்துப் போய், மண்ணில் சரிந்தபடி ‘ஹோ’ எனும் தன் வளர்ப்பு நாயை சிரிப்புடன் பார்க்கும் மனநிலைப் பாதித்தவனின் காட்சிதான் ஓடிக்கொண்டிருந்தது. சாலையோரம் அட்டைப்பெட்டியின் விரிப்பில் குளிருக்கு ஒடுங்கி கூனிப் படுத்திருப்பவர்களின் சாயல்களிலெல்லாம் ‘பெயரற்றவன்’ தென்படுகிறார்கள். விசுவாசம் பொருந்திய ‘ஹோ’ தன் எஜமானனின் கோர முகத்தைக் கண்டு அஞ்சி நகர்ந்ததே… அந்த ‘ஹோ’வையும் அனிச்சையாய் தேடியலைகிறது.
சிரிக்க மட்டுமே தெரிந்த ஒரு மனிதன்.. பெயர் அற்றவன்… பேசத்தெரியாதவன். சாலையோரவாசி. எந்த குற்றமும் அற்றவன். மதவெறிக் கும்பல் அவனின் கீழாடையை அவிழ்க்கும்போதுதான் அவன் முஸ்லிம் என நமக்கே தெரியவரும். அந்த பெயரற்றவனுக்கு தான் முஸ்லிம் என்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனம் பிறழ்ந்தவன்! ஆனாலும் அவன் கொடூரமாய் கொல்லப்பட அவன் முஸ்லிம் என்ற அவனுக்கே பிரக்ஞையற்ற அடையாளம் போதுமானதாக இருந்திருக்கிறது.
எனில் அச்சுறுத்தும் சூழலிலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் நிலை என்ன என்ற கேள்வி வலுவாய் எழுகிறது.
அடுத்து குறி நாம் தானோ? , எப்போது வேட்டையாடப்படுவோம்?, நம்மை எதிரிகள் நெருங்கிக்கொண்டிருக்கிறார்களோ? என்றெல்லாம் அச்சத்துடனேயே நாட்களைக் கழிக்கும் இஸ்லாமியர்களைப் பற்றிய சிந்தனையை வாசிப்போரிடம் விதைக்கிறது முதல் கதை. மரணத்தேதி அறிந்தவனின் ஒவ்வொரு நாளும் ரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் தானே?
நிலைகுத்தி நின்ற பெயரற்றவனின் பார்வை எழுப்பிய கேள்வியில் இருந்து மீள முடியாமல் தப்பித்துக்கடந்து சில நாட்கள் கழித்து அடுத்ததாக வாசிக்க வந்தால் முதல் கதை விடவும் இன்னும் கொடூரம்.
சமகாலத்துச் சம்பவம். கொரனா ஊரடங்கு காலத்தின் ஆரம்பத் துயரம். என்னென்று, ஏதேன்று புரியாமல் நாம் அரசின் சொல்படி உயிரைப் பிடித்துக்கொண்டு வீட்டில் முடங்கிய காலத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் அது. எளிதாக கடந்துவிட்டது பொது சமூகம். நீடித்திருந்த மௌனம்தான் பழிச்சொல்லை விடவும் வலித்தது.
‘முடிவுக்கு காத்திருக்கும் கதை’ – இரண்டாவது கதை
“சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நானில்லை” – என்பதாக விவரிக்கும் முதல் பத்தியில் ஒரு துயரக்கதையைச் சுமந்து வரும் சிறுகதையாக இது இருக்கப்போவதென்பது முன்கூட்டியே தெரியும். சொல்லப்போனால் ‘மயானக்கரையின் வெளிச்சம்’ முழுதும் கைவிடப்பட்ட இந்திய மனிதத் துயரங்களின் பதிவுகள் தானே?
ஆனால் இந்த கதை உடலுக்குள் அத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே இப்புத்தகத்தை வாசித்திருந்த தோழியிடம் பேசியபோது நான் சொல்லும்முன்பே இக்கதை ஏற்படுத்திய பதட்டத்தையும் அதிர்வையும் சிலாகித்திருந்தார். ஹீரா எழுத்து மன இறுக்கத்தை கொடுப்பதால் இனி மேற்கொண்டு வாசிக்க தெம்பில்லாமல் அத்துடன் புத்தகத்தை மூடிவிட்டதாகவும் சொல்லியிருந்தார். நான் மட்டுமே இந்த சிறுகதைக்கு மிகையாக உணர்வுபொங்க அதிர்கிறேன் என்ற என் சந்தேகம் அந்த நொடிதான் தகர்ந்தது.
கோவிட் ஆரம்பகாலம்தான் கதையின் சூழல். போக்குவரத்து முற்றிலுமாக அடைக்கப்பட்ட சூழலில் கூட்டம்கூட்டமாய் கால்நடையாக தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுத்த வடநாட்டுத் தொழிலாளர்கள்தான் கதையின் மாந்தர்கள். செய்திகளில் மட்டுமே நாம் கண்ட அவர்களின் பயணத்தை, அவர்களுடன் சேர்ந்து நடந்து அனுபவித்து எழுதியதுபோல் வழிநெடுக ஒவ்வொரு சம்பவத்தையும் விவரிக்கிறார் ஹீரா. ‘நூலறுந்த பட்டம் காற்றின் போக்கில் போவது போல் அவர்கள் சென்றுக்கொண்டிருந்தார்கள்’ என்பதில் அந்த தொழிலாளர்களின் பயணதிட்டம் மொத்தமும் சொல்லியது வரிகள்.
குழுகுழுவாய்ச் சென்றவர்கள் படிப்படியாக எண்ணிக்கை குறைந்து பைசல், ஜிந்தேர், ஜிந்தேர் மனைவி சாந்தி, இந்த தம்பதிகளின் 8வயது பெண்குழந்தையும், கைக்குழந்தையொன்றும், ஜிந்தேரின் தம்பி மனிஷ், என குழு 6 பேராக குறுகிக்கொண்டிருந்தது.
-பசியெடுத்து அவர்கள் மாவு திருடியபோது கதையை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் வேடிக்கைப் பார்த்தவராக இருப்பீர்கள்.
-பச்சை மாவை உண்டதால் ஏற்பட்ட வயிற்று வலியில் அவர்கள் துடிதுடிக்கும்போது நீங்களும் வலி கொள்வீர்கள்.
-தண்ணீர்க்காக நாவு துடிதுடித்துப் போகும்நொடியில் உங்கள் தொண்டையிலும் வறட்சி குடிகொண்டிருக்கும்.
-வேறு வழியில்லாமல் திருட முடிவெடுத்தபோது அந்த திருட்டினை நியாயப்படுத்தும் சாட்சியாய் நீங்கள் இருப்பீர்கள்.
-“காலைமுதல் நடந்தோம், 30 கிமீ நடந்திருக்கிறோம். ஊர் சேர இன்னும் 520 கிமீ மிச்சமிருக்கிறது” என சொல்லப்படும்போது பெரும் வெடிசத்தம் கேட்டு காது பொத்திக்கொண்ட ஜிந்தேர் மனைவி சாந்தி போல் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.
-8 வயது பூஜா பசியில் புல் உண்ணும் நிலையில் உங்கள் உணவுக்குழல் பாரமாகிருப்பதை உணர்வீர்கள். உங்கள் குழந்தையின் சாப்பாடுத் தட்டு நோக்கி பார்வை எடைபோடும்.
பட்டினியில் மனிஷ் மயங்குகிறார். இருமுறை துடிதுடித்து உயிர் அடங்கியது என ஹீரா அந்த மரணத்தை எளிதாக முடிவுக்கு கொண்டு வருகிறார். ஆனால் உங்களால் அதிலிருந்து மீள நேரமாகும்.
ஏதும் வாகனம் வருகிறதா? என பார்த்துவரும்படி பைசலை அனுப்பி வைத்துவிட்டு ஜிந்தேர், மனைவி சாந்தி, புல் தின்ற 8 வயது மகள் பூஜா மரத்தில் ஒவ்வொரு பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து தனித்துப் போன பைசல் அருகில் நானும் அதிர்வோடு நின்றிருந்தேன்.
கைக்குழந்தை என்னவானது? இதோ காலுக்கு கீழே மயங்கியிருக்கிறது. இல்லை… இறந்துவிட்டது. அதன் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும்? யோசிக்கக் கூட தெம்பில்லை!
இத்துடன் இந்த துயரம் முடிந்ததா எனில், பைசலின் மரணம் வரை தொடர்கிறது. அவன் பெயர் பைசல் தான்! இப்போதுதான் நமக்கும் நினைவும் வரும். பைசல் ஒரு முஸ்லிம். அவனும் இறக்கிறான். இல்லை, கொல்லப்படுகிறான்.
அவன் மரணத்திற்கு காரணம் பைசலின் பெயர் இப்போது ‘கொரானா ஜிஹாதி’ என மாறியிருந்ததுதான். ஊடகங்களும் அரசியலும் கட்டமைத்த வதந்தியால் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்படுகிறான்.
இன்னும் இந்த கதை முடிவுக்கு வரவில்லை. உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறது என நம் கையில் ஹீரா ஒப்படைக்கும்போது உடைந்துபோயிருப்போம். மகனுக்காகக் காத்திருக்கும் பைசலின் அம்மாவிற்கு தகவல் போயிருக்குமா என்ற சிந்தனையில் அழுக தொடங்கி, இந்த கதை மாவு திருடியுண்டபோதே முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே என ஹீராவை உலுக்க வேண்டும்போல் இருந்தது.
வித்தியாசமான கதையமைப்பு! ஆனால் இது நிகழ்ந்த உண்மை விஷயம் என்பதால் பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மீளமுடியாமல் தேங்கியிருக்கிறேன். நானும் அடுத்தக் கதைகளை இப்போது வாசிக்கப்போவதில்லை. மீண்ட பின்னர் தைரியம் வந்தால் மீண்டும் வாசித்துக்கொள்கிறேன் என மூடிவிட்டேன்.
2024ம் ஆண்டு புத்தக வாசிப்பை மீண்டும் ஒழுங்குபடுத்தவேண்டும் என முடிவெடுத்தபோது பாதிகளில் விடுபட்ட மயானக்கரையின் வெளிச்சத்தை முடித்தே ஆகவேண்டும் என தீர்மானித்து வாசிப்பை மீண்டும் தொடங்கியிருந்தேன்.
அதன் பின்னும் வரக்கூடிய ஒவ்வொரு கதையும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான அச்சுறுத்தல், சந்திக்கும் பிரச்சனைகள், உளவியல் தாக்குதல்கள், நிகழ்கால கலவரம், ஸ்திரத்தன்மையற்ற இருப்பு, எதிர்கால வாழ்வு மீது நிகழ்த்தப்படவிருக்கும் பாதகம் உள்ளிட்டவற்றைத் தாங்கியிருந்தன.
‘புனிதச் சமர்’ எனும் 3வது கதை வடநாட்டின் துர்காபூர் என நாம் அறியாத ஏதோ ஒரு ஊரின் ஒதுக்குப்புறமாயிருந்த ஓர் ஒயின்ஷாப்பில் தொடங்குகிறது. ஜம்புலால் என்பவன், அவன் கற்பழித்த பெண் கல்பனா. பதினைந்து நாட்களாக ஒரு தனியறையில் வைத்து கற்பழிக்கிறான். அவள் தப்பிவிட்டாள். அடுத்ததாக ஜம்புலாலை அவள் காட்டிக்கொடுக்கக் கூடும். இதன் மூலம் ஊருக்கு விஷயம் தெரிந்தால் அவன் காரியக்கமிட்டி செயலாளராக இருக்கும் மதவெறி அமைப்பின் உயர் பதவி அவனுக்குக் கிடைக்காமல் போகுமென்று துடிதுடித்துப் போகின்றான். இதுவரையிலும் முஸ்லிம் கதாபாத்திரம் இக்கதையில் வரவில்லை, சம்மந்தப்படவில்லை.
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு யோசனைத் தோன்றியபோது சிறுகதையின் இறுதிப் பத்தி முடிகிறது.
“லவ் ஹிஜாதில் ஈடுபடுகிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதுதான் முடிவு”- சம்மந்தமே இல்லாத ஓர் அப்பாவியை எரித்து வீடியோவாக்கி அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அசூர வளர்ச்சி கண்ட ஹீரோவாகிறான்.
மதத்தீவிரவாதிகளின் பளபளப்பான ஆயுதம். அதற்கு ஒத்தூதும் ஊடகம். இதனை நம்பி குற்றத்தை நியாயப்படுத்தும் பொதுமக்களின் மௌனம். இவையெல்லாம் மதச்சார்பற்ற இந்தியத் திருநாட்டின் மீது நிகழ்த்தும், அமைதியின் மீது கட்டவிழ்க்கப்படும் மறைமுகத் தீவிரவாதத் தாக்குதல்!
வெள்ளைக்குர்தா, ஜீன்ஸ் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் ரயிலேறி பக்கத்து பெருநகரத்துக்குச் செல்ல, மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கொல்லப்படும் நிகழ்வு அடுத்த கதை – ‘நிறமிழந்த வெள்ளைக் குர்தா’
சவ ஊர்வல அரசியல் அடுத்த கதை, ‘நிகழ்தகவு’.
‘ஐ லவ் முஸ்லிம்ஸ்’ எனச் சொன்னதற்காக இந்து நண்பனாலேயே துரோகத்துக்கு ஆளாகி, இணையத் தாக்குதல் முதல் வீடுவரை தொடரும் மிரட்டல் என தொடர்ந்து, மார்பிங் செய்யப்பட்ட தன் உடலைக் கண்டு தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துகொண்ட திவ்யா, ‘ நான ஒருத்தல்’ அடுத்த கதை.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்ட சாமானிய முஸ்லிம்களைப் பற்றியது அடுத்த கதை. ‘நரோடா காவ்ன்’
மற்றோர் அசைவம் உண்பது பிரச்சனையல்ல, முஸ்லிம் அசைவம் உண்பதால் எப்படியான பிரச்சனைகளை சிறுவயது முதலே அனுபவித்து, அதற்காகவே சைவமாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதைப் பேசுகிறது அடுத்த கதை- ‘மறுப்பின் நிலை மறுப்பு’.
குடியிரிமை அமல்படுத்தப்பட்டால் எதிர்கால இந்தியா எப்படியாக இருக்கும் என்பதை, எப்படி பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதை, தான் இந்தியன் என்பதை நிரூபிக்க எவ்வாறு அவன் உயிர்கொடுக்க வேண்டும் என்பதை, எப்படி பந்தாடப்படுகிறான், எப்படி குத்திக்குதறப்படுகிறான், அரசு இயந்திரம் அதன் பின் எவ்வாறாகச் செயல்படும் என்பதையெல்லாம் கண்முன் நிறுத்துவது கடைசிக் கதை. ‘மயானக்கரையின் வெளிச்சம்’
ஆவேசக் குரலோடு மக்கள் திரள் அகதி முகாமின் சிறைவாசலை உடைக்கும் காட்சித் தரும் நம்பிக்கையுடன் முடிவுறும் ‘மயானக்கரையின் வெளிச்சம்’ எனும் இறுதிச் சிறுகதையின் முடிவுதான் 9 சிறுகதைகளுக்குமான தீர்வு. ஒட்டுமொத்த இந்தியத் தேசத்தின் நலவாழ்வுக்குமான கடைசி நம்பிக்கையும் கூட.
அந்த நீதியின் நம்பிக்கையில்தான் இஸ்லாமியர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்யும் சிறுகதைத் தொகுப்பு.
இதில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடை, உவமை, தெள்ளத் தெளிந்த நீரோடைப் போன்ற அழகிய வாக்கிய அமைப்பு இவற்றைப் பற்றியெல்லாம் பேச நிறைய இருக்கின்றன எனினும் அதையும் மிஞ்சிய ஒவ்வொரு கதைக் கரு எழுப்பும் கேள்வி மீதான பதில்களின் தேடல் முக்கியம் வாய்ந்தவை. அதிகமதிகம் பேசப்பட வேண்டியவை. ஒவ்வொரு இந்திய குடிமகனும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையை நினைவுபடுத்தக் கூடிய தொகுப்பு.
அட்டைப்படத்தில் இருக்கும் கம்பி வேலிகளுக்குப் பின்னிருக்கும் தாய்-தந்தை-மகளும் கம்பிவேலியாலேயே வாயும் தைக்கப்பட்டிருக்கும் ஓவியம் கூட உலுக்கிக்கொண்டிருக்கிறது.
சமகாலத்தை சமரசிமின்றி எழுதும் சம்சுதீன் ஹீராவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
——————————————-
மயானக்கரையின் வெளிச்சம்
சிறுகதைத் தொகுப்பு
சம்சுதீன் ஹீரா
விலை : ரூ.120/-
பக்கங்கள் : 120
முதல் பதிப்பு 2021
பாரதி புத்தகாலயம்
——————————————-
நன்றி : ஆமீனா முஹம்மத் – படத்துக்கும் பகிர்வுக்கும்