பகுதி – 15
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க…
*********
மற்றுமொரு அதிர்ச்சியான தகவல்.. அன்று சந்தைப் பேட்டையில் குறிப்பிட்ட பெண் மிரட்டியதன் பின்னணி மதியும் கிரிஜாவும் ஒரு நாள் கும்பகோணம் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் கவனித்துவிட்டது மட்டுமல்லாமல் அவர்கள் அங்கே மிகவும் நெருக்கமாக புழங்கியதையும் இருட்டோடு இருட்டாய் இருந்து பேய் போல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடமும் வேண்டா வெறுப்பாக ஒரு நாள் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு அவளது தொடர் மிரட்டல்கள் அவனை ஆளாக்கிக் கொண்டிருந்தன. முடியா பட்சத்தில் அவளுக்கு அவ்வப்போது அன்றைக்கு போல் படியளக்க வேண்டும்!
தவமணியை சமாதானப்படுத்தியபடி ஆஞ்சநேயலு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
வீட்டினுள் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சமிருந்தாலும் ஒரு இருட்டுக்குள் கிடப்பது போல் வெளியே வரமல் ‘ம்..’ என்று ஈன ஸ்வரத்தில் அவ்வப்போது அழுது கொண்டிருந்தான்.
கிரிஜாவின் கணவன் அச்சமயம் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவளை திட்டிக் கொண்டிருந்தனர். இருவருமே பலவீனமான அழுக்கு மூட்டையைப் போல வியர்வைக் காட்டில் திசைக்கு ஒருவராக உருண்டு தரையைத் தேய்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாம் கனவுதான் என்று நிம்மதி பெருமூச்சோடு எழும் அந்த பகல் கனவினை வலியக் கதறி வேண்டிக் கொண்டிருந்தனர். பலன்தான் இல்லை. மீண்டும் மீண்டும் தங்களது அப்பட்டமான நிலையை நினைத்து நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தனர். நொடிகள் வருடங்கள் போல அழுத்திக் கொண்டிருந்தன.
இவர்களது வீடுகள் கடைத்தெருவுக்கு சற்று தூரத்திலேயே இருந்ததால், விஷேசத்திற்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் வீட்டிற்குள் நுழையுமென்பே இந்தச் செய்தி அவர்களை இடியாய் தாக்கியிருந்தது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாய் ராஜாத்தியும் சரஸ்வதி அம்மாளும் சில்லுச் சில்லாய் தகர்ந்துப் போய் பெரும் குற்ற உணர்வுணர்விற்கும் வேதனைக்கும் ஆளாகியிருந்தனர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதுப் போலிருந்தது.
வீட்டை அடையும் வரை பெரும் பிரளயத்தை தன்னத்தே சுமந்து வந்தவர் போல், தரையில் படுத்துக் கிடந்த மதியைக் கண்டதும் ஆவேசமான தவமணியின் அப்பா, “வெளியே போடா நாயே!” என காலில் ஒரு எத்து எத்தினார். அவரைத் தடுக்க முயன்ற ராஜாத்திக்கு கடும் வசவு சொற்கள் பதிலாக வந்து விழுந்தன. என்ன செய்வதென அறியாது சரஸ்வதியம்மாள் நிலைகுலைந்து கண்ணீர் பெருகிய வண்ணம் தனது மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு தவமணியோடு வந்த ஆஞ்சநேயலு அவரை சமாதானப்படுத்த முயன்றும் ஒரு பலனுமில்லை. வீட்டு வாசல் முன் அனைவரின் முன் மதி எல்லா மரியாதையையும் இழந்து நின்றான். பெற்றவளும் உடன் பிறந்தவளும் யாரைத் தேற்றுவது யாரை திட்டுவதென அறியாது அவர்களே பாவப்பட்ட ஜீவன்கள் போல ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் தவமணி தனது தந்தை பக்கம் சென்று நின்றுக்கொண்டாள். அன்று சந்தைப்பேட்டை சென்றிருந்தபோது நடந்ததையும் கூட எல்லோருக்கு முன் சொல்ல ஆரம்பித்தாள். ‘வேணாம் பாப்பா…’ என்று கண்களால் கெஞ்சும் சக்தி கூட அவனிடமில்லை. வெறுமையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“போயிருப்பான் போயிருப்பான் ஊர் மேய்ற கழுத! அப்பாவியாட்டம் வேசம் போட்டிருக்கல்ல..! உனக்கு போயி எம் பொண்ண கட்டி வைக்க நெனச்சேன் பாறேன்! உன்ன சொந்த புள்ள மாதிரி வளத்தேனடா..! எல்லாத்துக்கும் சேத்து வச்சி இப்படி எங்க மானத்த வாங்கிட்டியேடா! நீ எல்லாம் பண்ணுவேடா! அந்த வயசுலேயே அந்த கோஸா பயலோட சுத்துவன்தானே நீயி! கம்மினாட்டி! கம்மினாட்டி!” என்று மீண்டும் அவனை நோக்கி கைகளை ஓங்கிக் கொண்டு வந்தார்.
ஆஞ்சநேயலுக்கு கோபம் தாங்க முடியவில்லை!
“சேகரு பாத்து பேசு!” அவர் குரலும் அங்கே உயர்ந்தது.
“ஓ..! ஒந்தங்கச்சி மவன பத்திப் பேசுனதும் பெரியவருக்குப் பொத்துக்கிட்டு வருதோ?”
ராஜாத்தி மறுபடியும் ‘வேண்டாம்’ என தனது கணவனை தடுக்க வந்தாள். அவளை உதறிவிட்டவராய்,
“போடா வெளியே இனி இந்த வீட்ல உனக்கு இடமில்ல!”
வருவோர் போவோரெல்லாம் நின்றும் நகர்ந்தும் வேடிக்கை பார்த்துச் செல்ல, தவமணி மட்டுமல்ல சரஸ்வதி அம்மாளும் கல்லாக நின்றார்.
மதி எங்கேச் செல்வதென விழித்துக் கொண்டிருந்தான். இத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டு இனி தான் வாழ்வதே பாவம் என எண்ணத் தொடங்கினான். இவர்கள் எல்லாம் வருவதற்கு முன்னமே அப்படி ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிடத்தான் நினைத்தான்.
ஆனால் அந்த நிலையிலும் கிரிஜாவின் ஞாபகங்கள் வந்துப் போனது விசித்திரமானது. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் கிரிஜாவையும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியிருந்த பிள்ளைகளையும் அவளுடைய அக்கா வந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இருந்தாலும் இனி அவளது நிலையும் இனி என்னாகும் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையிலேயே உறங்கிவிட்டிருந்தான்.
“செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி மரமாட்டம் நிக்கிறான் பாரு!” என்ற சேகரின் குரல் மறுபடியும் உயர்ந்தபோதுதான் நிகழ் உலகிற்கு வந்தான்.
குரல் உடைந்து, “ம.. மன்னிச்சிக்கிங்க அத்தான்…” என்று அவமானத்தில் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டவனைப் பொருட்படுத்தாமல் சேகர் உள்ளே சென்றுவிட்டார். அவர் பின்னாடி தவமணியும்..!
ஆஞ்சநேயலு இப்போது மதியை தனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றார்.
சரஸ்வதி அம்மாளும் ராஜாத்தியும் கலங்கிய கண்களோடு சிலைகள் போல அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
அங்கே ஆஞ்சநேயலுக்கு என்று ஒரு மரியாதை இருந்தது. அவர் செயலை அனைவரும் வியப்பாகப் பார்த்தனர். யாரை குறை சொல்வது யாரை பாராட்டுவது என குழப்ப நிலையிலேயே அந்த கூட்டம் கலைந்து சென்றது.
ஆஞ்சநேயலு அப்போது தனியாகதான் வசித்து வந்தார். ஆடு மாடுகளை பராமரிப்பதுதான் குடும்பம் பிள்ளைகள் எதுவுமில்லாத அவருக்கு அவரது முழு நேர பணியாகவும் இருந்து வந்தது. தனது தங்கை குடும்பத்தை அதாவது பிரபாவின் குடும்பத்தைதான் தனது குடும்பமாக கருதி ஒட்டுண்ணிப் போல அவர்களோடு நெடுக்காலம் சேர்ந்து வசித்து வந்தார்.
பிரபாவைத் தொட்டு எடுத்த சில திடீர் முடிவுகளால் அந்த குடும்பமே அங்கிருந்துச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாது. ஆனால் சொந்த ஊரை விட்டுச் செல்லப் பிடிக்காமல் ஏனோ ஆஞ்சநேயலு மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். அவர்களின் பூர்வீக வீட்டைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு ஆள் தேவைப்பட்டது.
பிரபாவிற்கு அடுத்து பிள்ளைக்கு பிள்ளையாக அவனது பால்யத் தோழனான மதிதான் அவரது கண்களுக்குத் தெரிவான். அதனால் மதி மேல் அவருக்கு ஒரு தனிப்பட்ட பிரியமும் அக்கறையும் எப்போதும் உண்டு. என்றாவது அவனே தனது தங்கை மகனான பிரபாவிற்கும் உற்ற துணையாக இருப்பான் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கூட அவனிடம் அப்படியொரு உறவைப் பேண வைத்தது
மதி நடந்தை நினைத்து நினைத்து களைத்துப் போயிருந்தான். அவனுடைய பிடரியில் ஒரு சூடு இருந்து கொண்டே இருந்தது. வீட்டிலுள்ளவர்களுக்குதான் மிகவும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக தொடர்ந்து வருந்தி கொண்டேயிருந்தான். அவனை ஆஞ்சநேயலுதான் தேற்றி அன்றிரவு சாப்பிட வைத்தார்.
அவனிடம் தனது தங்கை மகன் பிரபாவையே அருகில் வைத்துப் பார்ப்பது போன்றிருந்தது. மதியை இந்த சூழலிருந்து வெளியே கொண்டு வந்து விட வேண்டும் எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
“பிரபாகிட்ட போறியா..?” என்றைக்குமில்லாமல் அவர் அப்படி அன்று கேட்டது மதியால் ஒரு கணம் நம்ப முடியவில்லை. உண்மையாவா? என்பது போல் அவரைப் பார்த்தான். ஆமாம் என்பது போல் அவரும் தலையசைத்தார்.
எத்தனையோ முறை அவன் இருக்குமிடத்தை அவரிடம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறான். என்றைக்கும் வாய் திறக்காதவர் இன்று அவனிடம் செல்கிறாயா என்றுக் கேட்டது அப்போதிருந்த சூழ்நிலைகளையெல்லாம் மீறி இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
“ப்.. பி….ர….பா…. பிரபாகிட்டயா..? உண்மையாவா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது,
வாசலில் யாரோ நிற்பது போலிருந்தது.
“உள்ளே வாங்கம்மா” என்று ஆஞ்சநேயலு பார்த்துவிட்டு குரல் கொடுக்க ராஜாத்தியும் சரஸ்வதி அம்மாளும் அவருக்கு கை கூப்பிட்டு, மதியைப் பார்த்தனர். அவர்களை எதிர்கொள்ளும் திராணியில்லாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
“அண்ணே அவனையும் அம்மாவையும் ஊருக்கு அனுப்பலாம்னு பாக்குறேன்” என்று ராஜாத்திதான் பேச ஆரம்பித்தாள்.
“ஊருக்கு இந்த விசயம் தெரியாமலா போவும்? ஏதோ தப்பு நடந்துப் போச்சி. விடு. இவ்வளவு வருசம் இங்கண இருந்திட்டு இப்ப அங்க போனா ஊரு ஒறவுக்கு பதில் சொல்லிச் சொல்லியே பாதி உசிர் போயிரும். இவன் மேல கோவம் இருக்கிற மாதிரி கொஞ்ச நாளைக்கி ஒம் புருசன் முன்னாடி நடந்துக்க; கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும். ஏதோ புத்தி தடுக்கி தப்பு பண்ணிட்டான் ஆயி..!”
“ஆனா அவன் இங்க இருந்தா…”
“அவன் சோலிய நான் பாத்துக்கிறேன். அவன் இங்க இருக்க மாட்டான். ஆமா பாப்பா என்ன பண்றா..?”
“ஆச வச்சவளாச்சே… இனி யாரும் ஆசைப்பட்டாலும் முடியுமா..? அப்பாக்காரருதான் விடுவாரா? அவளை கூட்டிக்கிட்டு வண்டியில அவரு எங்கேயோ போய்ட்டாரு. அவளும் அப்பா புள்ளத்தான. விதி எப்படியோ அப்படி நடக்கட்டும்!” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள். சரஸ்வதி அம்மாள் எதுவும் பேசவில்லை.
“அந்த சிறுக்கி என்ன ஆனா?” கிரிஜாவைப் பற்றி விசாரிக்க அவர்கள் இருவரும் கோபப்பட துவங்க, மதி மீண்டும் தனது பழைய நிலைக்குச் சென்றான்.
“அக்காக்காரி வந்து கூட்டிக்கிட்டுப் போய்ட்டா போல. இருந்திருந்தா நாலு வார்த்த நாக்க புடுங்கிற மாதிரிக் கேட்டிருப்பேன்… அவ வீட்டுக்காரன் வந்ததும் என்ன நடக்குதுன்னுப் பாப்போம்!”
“சரி சரி ஏதோ நடந்து போச்சி ஆத்தா… தப்பு ரெண்டு பேரு மேலத்தானே! இதயெல்லாம் இங்கனேயே விட்ரு! அதுதான் ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது. கொஞ்ச நாளைக்கி எல்லாரும் அரசப்புரசலாப் பேசிப்பாங்க . அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மறைஞ்சிரும். அப்பவும் இஷ்டப்பட்டீங்கன்னா மதிக்கும் தவமணிக்கும் கல்யாணம் கூட பண்ணி வைக்கலாம்”
ஆனால் அவருடைய சமாதானங்கள் எதுவும் ராஜாத்தியைத் தணிக்கவில்லை.
“இவனை எங்க அனுப்ப போறீங்க?”
“கேரளாவுக்கு!”
“கேரளாவுக்கா?”
அவர் சற்று தயங்கி, “இப்ப தங்கச்சி ரமா அங்கதான் இருக்கு” என்றார் சன்னமான குரலில்.
புரிந்தது போல அம்மா மகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்ப பிரபா..?”
“ஆமா அங்கதான் இருக்கான்”
“ஓஹ்.. அப்ப இவனுக்கும் சம்மதமாத்தான் இருக்கும். நீங்க நெனைக்கிற மாதிரி இங்க யார் கண்ணுலயும் படாம கொஞ்ச நாள் அங்கேயே வேலைவெட்டி பாத்திகிட்டுக் கெடக்கட்டும்” என்று அவனது உடுப்புகள் அடங்கிய ஒரு பெட்டியை அங்கே வைத்துவிட்டு மதியிடம் எதுவும் பேசாமல், ராஜாத்தி சரஸ்வதி அம்மாளை தன்னுடனே இருக்கச் சொல்லி நிர்பந்தித்தவாறு அவரை அங்கிருந்துக் கூட்டிச் சென்றாள்.
பெரியவர், மதியின் மனநிலையை நன்றாகப் புரிந்து கொண்டு, ‘எல்லாம் சரியாகும்! கவலைப்படாதே!’ என்று அவனைத் தேற்றும் வண்ணம் தட்டிக் கொடுத்தார்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
(விறுவிறுப்பாக நகர்ந்த ‘நீலி’ குறுந்தொடரின் அடுத்த அத்தியாயங்கள் இனி இங்கு பகிரப்படமாட்டாது என்பதையும், விரைவில் கேலக்ஸி பதிப்பகத்தில் ‘நீலி’ என்னும் நாவலாக வெளிவர இருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் – கேலக்ஸி)