பரிவை சே.குமார்
——————————————————————————————————————–
கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு
——————————————————————————————————————–
கதையல்ல வாழ்வு
இது எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதை அல்ல வாழ்க்கை, வாக்கு மூலம்.
ஒரு கதையோ கட்டுரையோ எழுதும் போது நாம் மனதில் தோன்றுவதை எழுத்தில் கொண்டு வந்துவிட முடியும் ஆனால் இதிலிருக்கும் கட்டுரைகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு கட்டுரைக்கும் சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசியிருப்பதால் அவர்களுடன் பேசி, அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருப்பது என்பது சாதாரண விசயமில்லை. அதில் சாதித்திருக்கிறார் ஏழுத்தாளர் ஹேமா.
‘உயிர் காக்கும் ஊழியர்கள்’ என்னும் தலைப்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கிறார். அவர்கள் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தார்கள் என்பதைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தினர் இதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் பற்றியும் வீரலெட்சுமி என்னும் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் பேட்டியையும் இதில் விரிவாக எழுதியிருக்கிறார்.
‘ஒளிரும் கட்டிடங்களும் ஒளிந்திருக்கும் மனித உழைப்பும்’ என்னும் கட்டுரையில் கட்டிடத் தொழிலாளர்கள் தங்கள் வேலையின் போது அடிபட நேர்ந்தால் அதன்பின் அவர்களின் வாழ்க்கை என்னாகும் என்பதை லெட்சுமி அக்காவின் கதையில் ஆரம்பித்து, கட்டிட வேலைக்கு வந்த விபரங்கள் குறித்து ராணி என்பவருடன் தான் பேசியதையும் இக்கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார்.
‘தோள் கொடுக்கும் தோழர்கள்’ என்னும் தலைப்பில் வெளிநாட்டில் – குறிப்பாக அமீரகத்தில் – சமூக அக்கறையோடு இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உதவுவதுடன் இங்கு இறந்தவர்களை அவர்களின் சொந்தங்கள் முன் கொண்டு சேர்க்கும் நண்பர்கள் பிர்தோஸ் பாஷா, கௌசர், முகமது ராஸிக் போன்றவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
‘கை விடப்பட்ட முதிய குழந்தைகள்’ என்னும் கட்டுரையில் பெற்றவர்களைப் பார்த்துக் கொள்ள விரும்பாமல் தனித்து விடப்பட்ட முதியவர்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். கொச்சியைச் சேர்ந்த ரெஞ்சிமா குஞ்ஞுண்ணி தம்பதிகளுடனான உரையாடலை இதில் இணைத்துள்ளார். இக்கட்டுரையை வாசிக்கும் போது நம் வீட்டு முதியவர்களைப் பற்றியும் நாம் முதியவர்களாகும் போது என்ன நிலமையில் இருப்போம் என்பதையும் யோசிக்க வைக்கிறது.
‘பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை’ என்னும் தலைப்பில் கண் பார்வை இல்லாமல் தங்களின் அறிவால், மனதால் விசாலமான பார்வையைக் கொண்டிருக்கும் கண் பார்வையற்றி மனிதர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இப்படித்தான் இந்தப் புத்தகத்திலிருக்கும் ‘நிஜவாழ்வின் நாயகர்கள்’, ‘வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்’ , ‘தெய்வம் தந்த வீடா வீதி ?’, ‘துப்புரவு? தூய்மை? மனிதம்?’, ‘சாலையோர வியாபாரிகள்’, ‘சக்கர நாற்காலி பேசுகிறது’ என்னும் தலைப்புகளில் எல்லாம் வாழும், வாழ்வோடு போராடும், போராடுபவர்களுக்குத் தோள் கொடுக்கும் மனிதர்களைப் பற்ரிப் பேசியிருக்கிறார் எழுத்தாளர் ஹேமா.
‘இது ஒரு உன்னத இலக்கியமாக எழுத்து முறையில் எல்லாக் காத்திரங்களையும் வலுவாகக் கொண்டிருக்கிறது. நேர்த்தி பெற்ற, இந்த எழுத்துக்கள் நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயரமான ஓரிடத்தில் நம்மை அமர வைத்து விசாலமான பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு தந்தை தன் குழந்தையை தலைக்கு மேலாகத் தூக்கி தூரத்தில் ஒன்றைப் பார்க்க வைப்பது போல பார்வைகளினூடாகவே நாம் எல்லா அவதானங்களையும் பெறுகிறோம். நமக்கு இதுபோல எண்ணிலடங்காத அவதானங்கள் தேவைப்படும் காலமாக இது இருக்கிறது. இந்த நேசகரமான புரிதலோடு ஹேமா அவர்கள் காலத்தை தம் எழுத்துகளில் இட்டு நிரப்புவார்’ என்று தனது அணிந்துரையில் எழுத்தாளர் எம்.மீரான் மைதீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் ஹேமா அவர்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் நிறைவான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். எளிய மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி, அவர்களின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு எழுதுதல் என்பது சுலபமான பணி அல்ல. ஒவ்வொரு கட்டுரையிலும் அவரின் உழைப்பு தெரிகிறது.
‘எத்தனையோ ஏக்கபெருமூச்சோடுதான் சாமானிய மக்கள் எங்கு வாழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.’ என்னும் இந்த வரிதான் அத்தனை கட்டுரை மாந்தர்களையும் நம் முன்னே நிறுத்தி அவர்களின் வாழ்வியலைச் சொல்ல வைக்கிறது.
இதிலிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.
வாசித்தால் நாம் நம்மைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கை, வேதனைகள், சந்தோசங்கள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதுடன் அவர்கள் மீதான நமது பார்வையும் விசாலப்படும்.
——————————————————————————————————————–
கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு
——————————————————————————————————————–
————————————-
கதையல்ல வாழ்வு
ஹேமா
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 150 /-
————————————-