பால்கரசு சசிகுமார்
நேற்றுவரை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் குடும்பத்திற்காக அந்நிய தேசத்தில் பொருளீட்ட ஓடிக்கொண்டிருந்தவர்கள், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இன்று உருகுலைந்து, உடல் செயல் இழந்து நிற்பதைப் பார்க்கும்போது அதிர்ந்து போகிறேன்.
எது வாழ்வு என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் குடிப் பழக்கத்தால் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதுடன் தன் குடும்பத்தையும் சேர்த்தே வதைக்கிறார்கள்!
கடந்த இரண்டு வருடங்களில் இருபதிற்கும் மேற்பட்ட என் நெருங்கி நண்பர்கள் இந்தப் பாழாப்போன குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி குறைந்த வயதில் உடல் செயல் இழந்தும், வாகன விபத்துக்களிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அரசு தன் மக்களை குடிக்கச் சொல்லி ஊத்திக் கொடுத்து கோடி கோடியாக பணம் சம்பாரித்து தன் வாயிறை நிரப்பிக் கொள்வதும், பிறகு அதே மக்களைப் பார்த்து “ மது அருந்தாதீர்கள், மது வீட்பிற்கும் நாட்டிற்கும் கேடு” என்று அரசு பணத்தில் கோடி கோடியாக செலவு செய்து விளம்பரம் செய்வதைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
மதுவிற்கு எதிராக அரசை விமர்சனம் செய்த, போராட்டம் நடத்திய காந்தியவாதிகள் பலரும் ஏதோ ஒருசில விசயங்களில் தங்களை சமரசம் செய்துகொண்டார்கள்.
இப்பொழுது மதுவிற்கு எதிராக யாரும் வாய் திறப்பதில்லை. கடந்த ஆட்சியில் மதுவிற்கு எதிராக எழுப்பப்பட்ட எதிர்வினைகளும், போராட்டமங்களும் தற்போதைய ஆட்சியில் காணாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. அதுபோக அன்று பாட்டுப்பாடி போராடியவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. போதை சூழ்ந்திருக்கும் போது கூட வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள். இவர்கள்தான் சமூகப் போராளிகள்… அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை.
ஒரு சிலர் டாஸ்மார்க்கு ஊழியர்களுக்கு வேலை போய்விடும், பல லட்சம் பேர்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று கூச்சலிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் கேட்கும் போது சிரித்துவிட்டுக் கடக்க வேண்டியிருக்கிறது.
“மதுக்கடை வருவதிற்கு முன் அவர்கள் எல்லோரும் பிச்சையா எடுத்தார்கள்?” அப்படியே பிச்சை எடுத்தாலும் ஆரோக்கியமாக எடுக்கட்டும். பலரின் சாபத்தில் பிறக்கும் இந்தப் பணம் வேண்டாம்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கையெழுத்து எதுவாக வேண்டுமானாலும் இருந்துட்டுப் போகட்டும், மதுவை ஒழிக்க ஒரு கையெழுத்தைப் போடலாமே…
மஞ்ஞுமெல் பாய்ஸ் குடியைப் பற்றி கட்டுரை எழுதும் நாமெல்லாம் நம் பக்கத்தில் உட்கார்ந்து குடிப்பதைப் பற்றிப் பேசுவதில்லை.
குடியை நாடு ஒழிக்கும் என்று காத்திருப்பதைவிட நாம் அதிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகளை எடுத்தால் மது அரக்கனிடம் இருந்து மீளலாம்… இல்லையேல் நான் ஆரம்பத்தில் சொன்னது போல் குடியால் சாகலாம்.
நன்றி : படம் இணையத்திலிருந்து