நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர் – பணி நிறைவு)
பரிவை சே.குமார்.
கரந்தை மாமனிதர்கள்-
கரந்தை ஜெயக்குமார் ஐயா எழுதிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய சிறிய நூல்.
இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது.
கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை அழகாய்த் தந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளை இவரது வலைப்பூவிலும் வாசித்திருக்கிறேன்.
அற்புதமான தேடல்…
அருமையான புத்தகம்…
காணாமல் போய்க் கொண்டிருக்கும் வரலாற்றில் சில பக்கங்களை தேடித் தேடி எடுத்து நமக்கு தெவிட்டாத பாலமுதாய் தந்திருக்கிறார்.
செந்தமிழ் புரவலர் தமிழ்வேள் த.வே. உமா மகேசுவரனார் என்ற முதலாவது கட்டுரை அவர் வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனரும் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்த உமா மகேசுவரனார் பற்றியது. இவர் காலத்தில் தமிழுக்கு ஆற்றிய பங்கு, இவரின் பேச்சு மூச்சு எல்லாமே தமிழ் நிரம்பி இருந்தது என விரிவாகச் சொல்கிறார். இவரின் காலத்தில்தான் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு கரந்தை தமிழ் வழக்கு கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கட்டுரை நேசமே சுவாசமாக… இதில் நட்பின் இலக்கணம் போற்றிய தமிழறிஞர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, அவ்வையும் அதியமானும் போல இருந்த நட்பில் கவியரசு அரங்க. வேங்கடாசல்ம் பிள்ளை அவர்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார்.
தனது ஆசானான குயிலையா என்ற ஆர்.சுப்பிரமணிய ஐயருக்கு செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப்படை எழுதியவர் இவர். சாகும் தருவாயில் கூட கரந்தையில் இருந்து தனது சொந்த ஊரான மோகனூருக்கு சகோதரர் அழைத்தும் செல்லவில்லை என்பதைச் சொல்லி அவர் மகன் கரந்தை தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான் அப்பா அங்கு வருவார்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பதில் இருந்து அந்த மனிதரின் தமிழ்ப்பற்று நமக்கு புலப்படுகிறதல்லவா?
கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம்.. என்ற கட்டுரையில் ஒரு மனிதர் தேடலுக்காக வாலிபத்தையும் வருடங்களையும் தொலைத்த நிகழ்வைப் பகிர்ந்திருக்கிறார்.
கண்ணகி பயணித்த பாதையில் பயணித்து தேடலைத் தொடங்கிய பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள் ஏதோ சில நாட்கள் தேடலோடு நிறுத்தவில்லை… 17 ஆண்டுகள் மனிதர் கண்ணகியின் அடிச்சுவடை பற்றி நடந்து வேங்கைக் கானல் என்ற இடத்தில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பெற்ற கண்ணகி கோவிலை கண்டு பிடித்தார்.
அதை தமிழகத்திற்கு கண்டெடுத்துக் கொடுத்த ஐயா கோவிந்தராசனார் 94 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். காலப்பெட்டகம் ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.
கரந்தை காந்தி என்ற கட்டுரையில் உமா மகேசுவரனாரின் மைத்துனரான ச.அ.சாம்பசிவம் பிள்ளை பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை பணியாளராக இருந்து தமிழ் மேல் கொண்ட காதலால் ஆங்கிலேயரின் கீழ் அடிமை வாழ்வு வாழணுமா என காந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது வேலையை உதறிவிட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஐக்கியமானார். காந்தி மேலாடை துறந்த போது இவரும் துறந்திருக்கிறார். அன்று முதல் கரந்தை காந்தி ஆகிவிட்டார்.
அடுத்த கட்டுரை தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மருத்துவர் கரந்தை தர்மாம்பாள் பற்றியது. பெண்கள் மாநாட்டிற்கு அவர்கள் அழைத்திருந்த ஆண் சிங்கம் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை அந்த மாநாட்டில் வைத்து இவர் கொடுத்ததையும் தமிழாசியர்களுக்கு நல்ல ஊதியம் கேட்டு இழவு வாரம் என்ற போராட்டத்தை இவர் நடத்தி வெற்ரி கண்டதையும் பகிர்ந்திருக்கிறார்.
மொத்தத்தில் கரந்தை மாமனிதர்கள் மிகச் சிறப்பான புத்தகம். அதுவும் ஐயாவின் வசீகரிக்கும் எழுத்தில் வாசிக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. இதைப் படிக்கும் போது நாமெல்லாம் பொழுது போக்குக்காக எழுதும் போது இவரிடம் எத்தனை தேடல்… எப்படிப்பட்ட தேடல்… வரலாறை வாழ்விக்கச் செய்யும் மகத்தான தேடல் ஆச்சர்யப்பட வைத்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜெயக்குமார் ஐயாவுக்கு, இது விமர்சனப் பகிர்வு அல்ல… ஒரு மாணவனின் வாசிப்பனுபவம் மட்டுமே.
வெளியீடு :
பிரேமா நூலாலயம்
சிங்காரம் இல்லம்
48 ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு
மருத்துவக் கல்லூரி சாலை
தஞ்சாவூர்.
விலை : ரூ.50 மட்டுமே.