திப்பு ரஹிம்
மதம் சார்ந்து வரக்கூடிய பண்டிகைகள் அந்த மதத்தினுடைய கடவுளை கொண்டாடும் விதமாக மக்கள் ஒன்று சேர்ந்து சிறப்பிக்கும் தினத்தை பெருநாள் என்கிறோம்.
அப்படி முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்ற இரு பெருநாள் தினங்களில் ஒன்றுதான் ஈகைப் பெருநாள். ஒரு மாதம் முழுதும் நோன்பு இருந்து தொழுகை, தான தர்மங்கள் செய்து புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் நாளே ஈகைத் திருநாள் ஆகும்.
மகிழ்ச்சியான அந்நாளைக் கூட சில கட்டுப்பாடுடன் கொண்டாட வேண்டும். ஒரு மாதம் நோன்பை முழுமைப்படுத்தும் விதமாக பெருநாள் தினத்தன்று காலை ஏழைகளின் வரி என்று சொல்லப்படக்கூடிய பித்ரா என்னும் தானத்தை கொடுத்து விட்டு தான் தொழுகைக்குச் செல்ல வேண்டும்.
பெருநாள் தினத்தன்று தனது சமூகத்தைச் சேர்ந்த யாரும் பட்டினி கிடந்து விடக்கூடாது என்பதே இதனுடைய முழுமையான நோக்கம். நாம் கொண்டாடும் பொழுது பக்கத்து வீட்டினர் பட்டினி இருந்தால் எப்படி பெருநாளாக இருக்க முடியும்?
மேலும் இந்த ரமலான் மாதத்திலே எந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்கிறோமோ அந்த அளவிற்கு இறைவன் நன்மையை தருவதாக வாக்கு தருகிறான்.
தான தர்மங்கள் செய்வதை தள்ளிப்போடவே கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. “உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) “என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து, நல்லோர்களில் ஆகிவிடுவேனே!” என்று அப்போது அவன் கூறுவான்.
அல் குர்ஆன் – 63 : 10
இறைவன் தான் நம்மைப் படைத்துள்ளார். நம்முடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் இடத்தில் இறைவன் தான் இருக்கின்றார். இறைவன் தான் நமக்குத் தர வேண்டும். நம்மிடம் இருந்து இறைவனுக்கு எந்தத் தேவையும் இல்லை.
ஆனால் இறைவனுக்கு நாம் செய்தது போல நன்மையைப் பெற வேண்டும் என்றால் அதற்கு, “ஏழைக்கு உதவி செய்தால் அதை எனக்கு உதவி செய்ததாக நான் எடுத்துக் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.”
அதேபோல இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கூறுகிறார்கள்.
”தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே மக்கள், “(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?”என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மமும் செய்வார்” என்று கூறினார்கள்.
மக்கள், “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்? அல்லது அதை அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது?)” என்று கேட்டனர்.
நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள்.
மக்கள், “(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால்?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்” என்றார்கள். “(இதையும்) அவர் செய்யாவிட்டால்?” என்று கேட்டதற்கு,
நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.
புஹாரி:6022 அபூமூஸா (ரலி)
இப்படி தான தர்மங்களை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டினர்களுக்கும் செய்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போதுதான் ஒரு மாதம் நோன்பு இருந்தது முழுமை பெறும். இதுவே ஈகைத் திருநாள் ஆகும்.
படத்துக்கு நன்றி : திப்பு ரஹிம்