தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 12

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11

ரிட்சைக்கு படிப்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்ததால் வகுப்புகள் ஏதுமில்லை.

நிஷா எப்பவும் போல் உற்சாகமாக இருந்தாள்.

சுப்ரியாவின் மனதிற்குள்ளோ ஏதேதோ எண்ணங்கள்… நினைவுகள்.

“டீ சுப்ரியா… ஏன்டி ரொம்ப டல்லா இருக்கே?

“ஒண்ணுமில்லை”

“உன்னோட வாய்தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லுது… ஆனா முகத்தைப் பார்த்தா ஏதோ கலவரம் நடந்த பிரதேசம் மாதிரி பேஸ்து அடிச்சி கிடக்குது. சொல்லு என்ன விஷயம்?”

“அதான் சொன்னேனே நிஷா ஒண்ணுமில்லைன்னு..”

“கமான் சுப்ரியா… கவலைகளை யார் கூடவாவது ஷேர் பண்ணிக்கணும். அப்பதான் அது பாதியா குறையும். அந்த யாரோவா என்னைய நினைச்சிக்க”

அவள் பேசாமல் இருந்தாள்.

“இங்கேரு… உனக்கு இருக்கிற ஒரே சினேகிதி நான்தான். எங்கிட்ட சொல்லக் கூடாதா உன் பிரச்சனைகளை?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் சுப்ரியா.

பிறகு, “எனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்” என்றாள் மொட்டையாக.

“லீவா? எதுக்கு? நல்லாத்தானே இருக்கே?”

“நல்லாத்தான் இருக்கேன்…”

“அப்புறம்? அம்மாவுக்கு ஏதும் உடம்பு கிடம்பு சரியில்லையா..?”

“அதெல்லாம் இல்லை.”

“பின்னே எதுக்கு டியர் லீவு..?”

“அபார்ஷன் பண்ணிக்கணும்.”

“வாட்?” – நிஷாவிடம் அதிர்ச்சி.

சுப்ரியா தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

“நீ கர்ப்பமா இருக்கிறதை எங்கிட்ட சொல்லவே இல்லை..?”

“இப்பதான் தெரிஞ்சுது…” முணுமுணுத்தாள் சுப்ரியா.

“அஷோக்கிட்ட சொன்னியா..?”

“ஏன் சொல்லணும்..?”

“அவர்தானே குழந்தைக்கு அப்பா. அவர்கிட்ட சொல்ல வேணாமா..?”

“உனக்குதான் தெரியுமே நிஷா, நாங்க ரெண்டு பேரும் விவாகாரத்துக்கு அப்ளை பண்ணியிருக்கோம்னு. அப்புறம் எதுக்கு குழந்தை விஷயத்தை நான் அவர்கிட்ட சொல்லணும்..?”

“விவாகரத்தாவது… ஒண்ணாவது. அதைத் தூக்கி தூரப் போடு. இப்ப நீ கர்ப்பமா இருக்கே. சீனே வேறே. அஷோக்கிட்டப் பேசு. மறுபடி அவர் கூட சேந்து வாழற வழியைப் பாரு.”

விலுக்கென்று நிமிர்ந்தாள் சுப்ரியா.

“நோ. நெவர். அவர் கூட இனிமே நான் சேர்ந்து வாழப் போறேங்கிற பேச்சுக்கே இடமில்லை. நான் அபார்ஷன் பண்ணிக்கத்தான் போறேன்.”

“அவசரப்படாதே சுப்ரியா. நிதானமா யோசி. அப்புறம் நீ வருத்தப்படப் போறே.”

“நல்லா யோசிச்சிட்டேன். என்னைப் பத்தி, என் அம்மாவைப் பத்தி தப்பாப் பேசினவங்க குடும்ப வாரிசை நான் ஏன் சுமக்கணும்? நான் இந்தக் கருவைக் கலைச்சிட்டு என் வாழ்க்கையை நகத்திக்கிட்டு போகப் போறேன்.”

“எல்லாம் சரிதான் சுப்ரியா. ஆனாக் குழந்தை? அதோட எதிர்காலம்? கொஞ்சம் அதையெல்லாம் நினைச்சிப் பாரு.”

சுப்ரியா யோசிக்க ஆரம்பித்திருப்பதை முகச் சுருக்கம் சொன்னது.

நான் – அஷோக் – ஒரு குழந்தை என ஒரு ஆனந்த குடும்பத்திற்காக ஆசையோடுதான் காத்திருந்தாள் சுப்ரியா.

ஆனால் அதற்குள் பூகம்பம் வெடித்து, இதோ விவாகரத்தில் வந்து நிற்கிறது வாழ்க்கை!

ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘குழந்தை’ இப்போது உதித்திருக்கிறது வயிற்றில்.

என்ன செய்வது, என்ன தீர்மானிப்பது என்று முடிவு செய்திட முடியாக் குழப்பங்கள் மண்டின சுப்ரியாவினுள்.

இறுதியாக ஒரு தீர்மானத்துடன் தொலைபேசியை எடுத்தாள்.

மருத்துவரை அழைத்தாள்.

சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் தீர்மானமாய் சொன்னாள்.

“அபார்ஷனுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். அதை கேன்ஸல் பாண்ணிடுங்க டாக்டர். நான் இந்தக் குழந்தையை பெத்துக்க விரும்புறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *